search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் பகுதிகளில் வீடுகள், தோட்டத்தை குறிவைத்து இரும்பு கம்பிகள் திருடிய கும்பல்
    X

    சூலூர் பகுதிகளில் வீடுகள், தோட்டத்தை குறிவைத்து இரும்பு கம்பிகள் திருடிய கும்பல்

    • கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • 2 பேர் மாதப்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளான மாதப்பூர், அருகம்பாளையம், கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தோட்டம் மற்றும் வீடுகளில் உள்ள இரும்பு கதவுகள் திருடப்பட்டு வந்தன.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினரான சி.பி.கே செந்தில்குமாரிடம் தெரிவித்தனர்.அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கணியூர் மேட்டுக்காட்டில் தான் நடத்தி வரும் கடையில் இருந்து இரும்புகளை மர்மநபர்கள் திருடி சென்றதாக புகார் கொடுத்தார்.தொடர்ந்து புகார்கள் வரவே இரும்புகளை திருடும் மர்மநபர்களை பிடிக்க கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தையல்நாயகி உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் திருடு நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 2 பேர் முகம் பதிவாகி இருந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர். அவர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதை தேடினர். அப்போது அவர்கள் மாதப்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர்கள் அரசூர் கொள்ளு பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான குமார்(45), டிரைவர் மகேந்திரன்(25) என்பது தெரியவந்தது.மேலும், இவர்கள் தான், தங்களது நண்பரான சரவணன்(35) என்பவருடன் சேர்ந்து கருமத்தம்பட்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் உள்ள இரும்பு கதவுகளை திருடியதும் தெரியவந்தது.

    இதுதவிர கருமத்தம்பட்டியில் பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த இடத்தில் கிடந்த இரும்பு கம்பியையும் இந்த கும்பல் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்களிடம் இரும்பு கதவுகளை எங்கே என்று விசாரித்த போது, கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்றதாக தெரிவித்தனர். போலீசார் உடனடியாக அங்கு சென்று, இரும்புகளை மீட்டனர்.

    பின்னர் மகேந்திரன், குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சரவணனை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் இவர்களிடம் இரும்புகளை வாங்கிய கடை உரிமையாளரிடமும் விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×