search icon
என் மலர்tooltip icon

  உள்ளூர் செய்திகள்

  கவலையை மறக்க தவளை விஷம்:திருவண்ணாமலையில் போதை திருவிழா
  X

  கவலையை மறக்க தவளை விஷம்:திருவண்ணாமலையில் போதை திருவிழா

  • போதை கலாச்சாரமும் தற்போது கிரிவலப் பாதையில் நுழைந்து விட்டது.
  • சில சமூக விரோதிகளும் கிரிவலம் பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலைக்கு உலக நாடுகளில் இருந்தும் ஆன்மீக அன்பர்கள் கிரிவலம் வருகின்றனர். அவர்கள் கிரிவலப்பாதையில் தங்கி இருந்து தியானம், யோகா செய்து வருகின்றனர்.

  கூடவே அவர்களின் போதை கலாச்சாரமும் தற்போது கிரிவலப் பாதையில் நுழைந்து விட்டது. சாமியார்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளும் கிரிவலம் பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் திருவண்ணாமலையில் போதை திருவிழா நடத்த வெளிநாட்டினர் திட்டமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  அயாஹுவாஸ்கா. ஆன்மிக ரீதியான பரவச நிலைக்கான திருவிழாவாக உலகம் முழுவதும் நடத்தபடு கிறது. அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் பழங்குடியின கலாசாரத்தோடு இணைந்தது இந்த அயாஹுவாஸ்கா திருவிழா.

  அயாஹுவாஸ்கா என்ற ஒருவகை மூலிகைச் செடியில் இருந்து உருவாக்கப்படும் கசாயம் போன்ற பானம், மன நோய்களை குணப்படுத்து வதற்கும், ஆன்மிக ரீதியான பரவச நிலைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது போதை நிலைக்கு பயன்படுத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

  மனதில் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் அயாஹுவாஸ்காவின் பயன்பாடு இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

  ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் கடந்த 15-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தனிப்படை அமைத்து சல்லடை போட்டுத் தேடினர்.

  அதில் சந்தேகத்தின் பேரில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பேசினர். அதிகாரிகளோ விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், அவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிகாரிகளுக்கே தலைச் சுற்றலை உண்டாக்கியது.

  ரிஷிகேஷ், மணாலி என ஆன்மிகம், சுற்றுலாவில் சிறந்து விளங்கும் பகுதியில் அயாஹுவாஸ்கா திருவிழாவை நடத்தி விட்டு, அதன் வெற்றிக் கொண்டாட்டமாகத்தான் திருவண்ணாமலைக்கு அவர்கள் வந்துள்ளனர்.

  20 வயதில் இருந்து 35 வயது வரையிலான ஆண்களும், பெண்களுமே இவர்களின் இலக்கு. அயாஹுவாஸ்கா கசாயத்தை குடித்தும், உடலில் சிறிய துளையிட்டு அதில் தவளை விஷத்தை செலுத்தியும் போதையை ஏற்படுத்துகின்றனர்.

  போதை உச்சத்தை அடையும்போது, கட்டுப்பாடு அற்ற அத்துமீறல்களும், அடாவடிகளும் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. சுமார் 6 மணி நேரத்திற்கு இது போன்ற மாயத்தோற்றம் இருக்குமாம்.

  இதற்காக நபர் ஒருவருக்கு ஆயிரம் டாலர் வரை அதாவது இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரஷ்யர்களிடமிருந்து அயாஹுவாஸ்கா மட்டுமல்ல மேஜிக் மஸ்ரூம், கம்போ எனப்படும் தவளை விஷம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  239 கிராம் சைலோசிபின், டி.எம்.டி போன்ற மனநோய்களுக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

  கிரிவலப்பாதையை அதிரவைத்த போதை திருவிழா தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருந்தனர், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை தேரடி வீதியிலுள்ள முருகர் தேர் பக்கத்தில் 'அமானுஷ்ய' உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது.

  காரின் முன்பக்க பகுதியில் 7 மனித மண்டை ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

  கயிலாய மலையில் சிவபெருமான் அமர்ந்திருப்பதைபோல பெரிய ஸ்டிக்கர் இருந்தன. சிவன் மடியில் அமர்ந்தவாறு, வாட்டசாட்டமான உடல்வாகுடைய அகோரி ஒருவர் கழுத்தில் மனித மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து படுபயங்கரமாகக் காட்சியளித்த புகைப்பட ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தன.

  காரைச் சுற்றிலும் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடுகளுடன் ஆங்கிலத்தில் 'டேஞ்சர்' என்ற மண்டை ஓட்டு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

  முன் பக்கமும், பின் பக்கமும் 'அகோரி நாக சாது' என ஆங்கிலத்தில் பெயர் பலகை தொங்கவிடப்பட்டிருந்தன. மிரட்சியை ஏற்படுத்திய அந்த காரை பொதுமக்கள் சூழ்ந்து பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். தகலவறிந்ததும், திருவண்ணாமலை போலீஸார் விரைந்து வந்து காரை நோட்டமிட்டனர்.

  'அந்த நேரத்தில் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற அகோரி சாமியார் அங்கு வந்தார்.

  சாம்பலைத் தண்ணீரில் கரைத்து, முகம் தொடங்கி உடல் முழுவதும் பூசிக்கொண்டிருந்தார். பெயர் 'அகோரி நாக சாது' எனக் கூறிய அவர், 'நானே கடவுள்.

  நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு..' என பேசினார். அவரை கண்டித்த போலீசார் காரை இடையூறாக நிறுத்தியதற்காக ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்துவிட்டு அனுப்பி வைத்துவிட்டனர்.

  திகில் கிளப்பிய இந்த காரால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தேரடி வீதியே பரபரப்புக்குள்ளாகி போனது. போதைத் திருவிழா மற்றும் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் திருவண்ணாமலையில் சில தினங்களாக பதட்டமும் படபடப்பும் எகிறி இருக்கிறது.

  தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் கைப்பற்றி போதை திருவிழாவை முறியடித்ததால் வெளிநாட்டு போதை கும்பல் வேறு வழியில் கிரிவலப் பாதையில் நுழைய கூடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

  இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தி இது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  Next Story
  ×