search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் மண்டல பகுதியில்  குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு - மேயரிடம் பொதுமக்கள் மனு
    X

    மேலப்பாளையம் மண்டல பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு - மேயரிடம் பொதுமக்கள் மனு

    • நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர் பாஸ்கரன், வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 53 மற்றும் 54-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் 53-வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தலைமையில் இன்று மாநகராட்சி குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் காலனி, மகிழ்ச்சி நகரில் உள்ள தரைதள நீர் தேக்க தொட்டிக்கு சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பம்பிங் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் அடிக்கடி உடைப்பு, அதே போன்று தரை தள நீரேற்று தொட்டியில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குழாய்களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது.

    இது தொடர்பாக மண்டல அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், போனை எடுப்பதில்லை. எனவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், வருகிற 18-ந் தேதி வ.உ.சி குருபூஜை விழா நடைபெற உள்ளது. எனவே மணி மண்டபத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×