என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலீடு தொகைக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி திருப்பூர் பெண்ணிடம் ரூ.17¾ லட்சம் மோசடி
- பிரதீபா, இந்திய பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளார்.
- மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீபா (வயது 42). இவருக்கு கடந்த மே மாதம் பல்வேறு எண்களிலிருந்து வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள் இந்திய பணத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறினர்.
இதைத்தொடர்ந்து அவருடைய செல்போன் எண்ணுக்கு லிங்க் அனுப்பப்பட்டது. அதில் பயணர் ஐ.டி, கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கி பிரதீபா உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட வங்கி கணக்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நம்பிய பிரதீபா, இந்திய பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளார். அதற்கு கணிசமான லாபம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்தை பிரதீபா முதலீடு செய்துள்ளார்.
அதற்கான லாபத்துடன் பணத்தை எடுக்க முயன்ற போது, மேலும் 2,500 அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை செலுத்தினால் தான் பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரதீபா திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதுதொடர்பாக மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






