search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதலாவது உலக தமிழ் விக்கிப்பீடியா மாநாடு
    X

    தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதலாவது உலக தமிழ் விக்கிப்பீடியா மாநாடு

    • சர்வதேச தரத்தில் 100 கட்டுரைகள் எதிர்வரும் டிசம்பரில் உள்ளீடு செய்யப்படும்.
    • அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி மாநாடு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறையும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.

    தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இந்து வரவேற்றார்.

    வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகித்தார்.

    இந்த பயிலரங்கை துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது;-

    விக்கிப்பீடியா என்னும் இணையப்பக்கத்தில் பொதிந்துள்ள தமிழ்க் கருத்து கருவூலங்களை இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழும் தமிழரும் வாசித்தறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இருபதாண்டுகளுக்கு முன்புவரை இத்தகைய வசதிகள் இல்லாத நாட்களில், ஒரு சிறு தகவலுக்காகக் கூட நூலகங்களைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு உள்ளங்கையில் தகவல்கள் வந்து அமரும் சூழலை விக்கிப்பீடியா தமிழ்ப்பக்கம் உருவாக்கியுள்ளது.

    நாம் இத்தனை முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், விக்கிப்பீடியாவின் ஆங்கிலப்பக்கத்துக்கு இணையாக, தமிழையும் கொண்டுச் செல்ல வேண்டிய கடமை உள்ளது.

    அதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர்களைக் கொண்டு.

    தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களை மையப்படுத்தி, சர்வதேசத் தரத்தில் 100 கட்டுரைகள் எதிர்வரும் டிசம்பரில் உள்ளீடு செய்யப்படும்.

    விக்கிப்பீடியா தமிழ்த்தளத்தை வலிமையுடன் கட்டமைக்கும் வகையில், முதலாவது உலகத் தமிழ் விக்கிப்பீடியா மாநாட்டினை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவை இணைந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, அறிவியல் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகப் பொறுப்பாளர் மூர்த்தி நோக்கவுரையையும், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவரும் பதிவாளருமான பேராசிரியர் தியாகராஜன் வாழ்த்துரையும் வழங்கினர்.

    இப்பயிலரங்கில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் கர்நாடக மாநில மைசூர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து வந்திருந்த 80 கல்வியாளர்கள் மற்றும் 20 மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உள்ளீடு செய்தல், புதிய தலைப்புகளில் வெளிவராக தரவுகளைச் சேர்த்தல் ஆகியவை குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் செய்திருந்தார்.

    விக்கிப்பீடியா சார்பில் பயிலரங்கினை முனைவர் மாரியப்பன் ஒருங்கிணைத்தார்.

    நிகழ்ச்சியின் நன்றியுரையை விக்கிப்பீடியா குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாலசுப்ரமணியன் கூறினார்.

    Next Story
    ×