என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் இடுபொருட்கள் பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்
- ஜூன் 15-க்கு முன்பு நாற்று நட்டு 24 நாட்கள் நடவுப்பணி மேற்கொள்ளலாம்.
- தென்மேற்கு மழையால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து தங்களது நெல் பயிரை பாதுகாத்து கொள்ளலாம்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிய தாவது:-
குறுவை சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற விதைகள், நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள் யாவும் பேராவூரணி, திருச்சிற்றம்பலம் மற்றும் சீதாம்பாள்புரம் விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தரமான சான்று பெற்ற விதைகளை விதைநேர்த்தி செய்து ஒற்றை நாற்று நடவு முறையில் நடவுப்பணி மேற்கொள்ளவும் நடவு வயலில் கடைசி உழவிற்கு பிறகு நெல் நுண்ணுட்டம் இட்டு நடவு செய்திடவும், திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை இலைவழி உரமாக பயன்படுத்தவும், பேரூட்டசத்துக்களில் ஒன்றான தழைச்சத்தை மூன்று கட்டங்களாகவும் பொட்டாஸ் உரத்தை இரு கட்டங்களாகவும் பிரித்து நெல்பயிருக்கு கொடுக்க வேண்டும்.
நெல் நடவு வயலில் நடவுக்கு முன்பாக தக்கைபூண்டு, பசுந்தாள் உரத்தை ஏக்கருக்கு 20கிலோ வீதம் விதைத்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் 25சதவீதம் தழைச்சத்தை மிச்சப்படுத்தலாம். குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகளை விரிவாக்க மையங்களில் உடனடியாக பெற்று வரும் ஜூன் 15க்கு முன்பாக நாற்றுநட்டு சரியாக 24 நாட்களில் நடவுப்பணி மேற்கொள்ள லாம். தென்மேற்கு மழையினால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து தங்களது நெல் பயிரினை பாதுகாத்துக் கொள்ளலாம்.
விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அல்லது தொழில்நுட்பங்களை பெறுவதற்கு அந்தந்த தொகுதி வேளாண்மை உதவி அலுவலர்கள், வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம்.
பேராவூரணி பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை விரைவில் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெற உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






