search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் பறிப்பு- இளம்பெண்கள் உள்பட 5 பேர் கைது
    X

    தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் பறிப்பு- இளம்பெண்கள் உள்பட 5 பேர் கைது

    • காரில் காத்திருந்த சிவஞானம் முன்னிலையில் ஜானகியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.
    • ஜானகி பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறி சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    ராசிபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது49) . தொழில் அதிபரான இவர் பத்திர பதிவு தொழில், ஆர்.ஓ. வாட்டர் உற்பத்தி தொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார்.

    இவருக்கும், திருப்பூரை சேர்ந்த ஜெய், சேலத்தை சேர்ந்த தனசேகர் ஆகியோருக்கும் இடையே தொழில் நிமித்தமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் மூலமாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பாரதி நகரை சேர்ந்த சிவஞானம் (50) என்பவருக்கு ஜெகநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    சிவஞானம் நூல் மில் சூப்பர்வைசராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவஞானம், ஜெகன்நாதனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மகாதேவி கிராமத்தை சேர்ந்த ஜானகி என்கிற புவனேஸ்வரி (26), 25 தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைமை பொறுப்பு வகித்து வருவதாகவும், கொரோனா காலத்தில் அடமானம் வைத்த நகைகளை ஏலம் விட இருப்பதாகவும், இந்த நகைகளை ஏலம் எடுத்து அதில் 135 பவுன் தங்க நகைகளை உங்களுக்கு குறைந்த விலையில் தருவதாகவும், அதற்கு ரூ. 30 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். மேலும் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நானும், ஜானகியும் காரில் தயார் நிலையில் இருப்பதாகவும், பணத்துடன் அங்கு வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார்.

    அதன்படி ஜெகன்நாதன் நேற்று முன்தினம் ராசிபுரம் வந்து அங்கு காரில் காத்திருந்த சிவஞானம் முன்னிலையில் ஜானகியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.

    இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட ஜானகி, அருகில் உள்ள ஆர்.சி.எம்.எஸ். கூட்டுறவு வங்கியில் நகைகளை வாங்கி விட்டுவதாக கூறி பணத்துடன் சென்றார். அப்போது ஜானகி சுடிதார் அணிந்திருந்தார். ஆனால் வெகுநேரமாகிவும் அவர் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த ஜெகநாதன், அங்கு சென்று விசாரித்தார். அப்போது ஜானகி பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறி சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன்நாதன் தன்னை நூதனமாக ஏமாற்றியுள்ளதை அறிந்து ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவஞானம், ஜானகி, உடந்தையாக இருந்த நாமக்கல் பொன்விழா நகரை சேர்ந்த சத்யா (35), சங்ககிரியை சேர்ந்த ராமச்சந்திரன் (55), அவரது மனைவி கஜலட்சுமி (43) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம், ஒரு சொகுசு கார் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் இந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×