என் மலர்
ஈரோடு
தேர்திருவிழாவையொட்டி புகழ்பெற்ற மாட்டு சந்தையும், குதிரை சந்தையும் நடைபெறும். குதிரை சந்தையின் போது குதிரையேற்றம் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான குளறுபடி இருந்தது. குதிரையில் ஏறி செல்லக் கூடாது என எதிர்ப்பலை கிளம்பியது.
இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. விதிமுறைக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி புகழ்பெற்ற குதிரை சந்தை கடந்த ஆண்டைபோல் சிறப்பாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் குதிரை சந்தை நடத்த உள்ள இடத்து சொந்தக்காரர்கள் இப்போது போர்கொடி தூக்கி உள்ளனர். இந்த குதிரை சந்தையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கூறி உள்ளனர்.
இதனால் குதிரை சந்தை நடத்துவதில் புதிய சர்ச்சை தற்போது ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக இன்று மதியம் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் குதிரை சந்தை நடக்கும் இட உரிமையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜோதிகுமார் (வயது 39). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பாத்தி.
ஜோதிகுமார் கடந்த 24-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து சித்தோடு நோக்கி சென்றார். கனிராவுத்தர்குளம் அருகே எல்லப்பாளையம் பகுதியில் அவர் சென்றுகொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜோதிகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோதிகுமார் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருந்ததால் அவர் ஈரோடு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் ஜோதிகுமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை டாக்டர்கள் நேற்று கண்டுபிடித்தனர். ஜோதிகுமாரின் மனைவி மற்றும் உறவினர்களிடம் டாக்டர்கள் இந்த தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து ஜோதிகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய மனைவி பாப்பாத்தியும், உறவினர்களும் முன்வந்தனர்.
ஜோதிகுமாரின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இதில் ஒரு சிறுநீரகம் ஈரோடு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.
நுரையீரல் சென்னையில் உள்ள லைப்லைன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்துவதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கல்லீரல் கோவை ஜெம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. 2 கண்களும் ஈரோடு அகர்வால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஈரோடு:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதியான நெரிஞ்சி பேட்டை மற்றும் அம்மா பேட்டை வழியாக பவானி கூடுதுறைக்கு வந்து இன்று காலை ஈரோட்டுக்கு வந்தது.
புது ரத்தம் பாய்ச்சியது போல் ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.
வெறும் பாறைகளாக தெரிந்து ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக தற்போது வருவதால் பொதுமக்கள் ஆவலுடன் காவிரி ஆற்றுக்கு சென்று பாய்ந்து செல்லும் தண்ணீரை பார்த்தனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையம் போஸ்ட் ஆபிஸ் அருகே வசிப்பவர் முருகன் இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் ரஞ்சித் (வயது 22) கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார்.
ரஞ்சித் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் டீ குடிப்பதற்காக கோபி ரோட்டில் உள்ள ஒரு டீ கடைக்கு வந்தார்.
பிறகு டீ குடித்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். கவுந்தப்பாடி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அருகே காலை 7.50மணிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே மணல் அள்ளிக் கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கவுந்தப்பாடி போலீசார் விரைந்து வந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். ரோட்டில் பிணமாக கிடந்த ரஞ்சித் உடலை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது. இந்த விபத்து கவுந்தப்பாடியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோபி வாஸ்துநகரை சேர்ந்தவர் தாமோதரன் இவரது மகன் கோகுல் (25) பி.காம் பட்டதாரி. இவரும் அனுஷா (22) என்ற இளம்பெண்ணும் கடந்த 6 மாதத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அனுஷா பி.பி.எம் படித்துள்ளார். கோகுல் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
காதல் தம்பதியினர் சந்தோசமாக வாழ்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்களிடடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்தது. இதனால் கோகுல் மன வருத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோகுல் திடீரென தூக்கில் தொங்கினார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அதன் பிறகு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக கோகுல் இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் நேற்று மதியம் வரை கடுமையாக வெயில் அடித்தது. மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் சூழ்ந்தன. ஆனால் ஒருசில மழை துளிகள் மட்டும் போட்டது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவில் இடி-மின்னலுடன் விடிய-விடிய மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் கன மழையும் சில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெப்ப சலனத்தால் பெய்த இந்த மழையால் மாவட்டம் முழுவழம் வெயிலின் தாக்கம் குறைந்தது. குளுமையாக காட்சி அளித்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்துப் பாளையத்தில் 81 மி.மீட்டர் மழையும், மொடக்குறிச்சியில் 70 மி.மீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது.
கோபி, ஈரோடு, பவானி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு விடிய-விடிய மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் அன்று மாலை ஈரோடு வருகிறார். ஈரோடு கொங்கு கலையரங்கில் மாற்று கட்சியில் இருந்தும் மற்றும் புதிதாகவும் பலர் தி.மு.க.வில் சேருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதன்பிறகு ஈரோடு பெருந்துறையில் ரோட்டில் உள்ள சக்தி சுகர்ஸ் விருந்தினர் விடுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசும் அவர், பிறகு அங்கு தங்கி ஓய்வு எடுக்கிறார். மறுநாள் (2-ந்தேதி) காலை 8 மணிக்கு ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதன்பிறகு மொடக்குறிச்சி அருகே உள்ள வெள்ள பெத்தாம்பாளையத்தில் உள்ள மறைந்த முன்னாள் எம்.எல்.ஏசின்ன சாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்துகிறார். இதன்பிறகு அன்று மதியம் 2 மணிக்கு அவர் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
ஈரோடு வரும் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பாகவும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொள்வது தொடர்பாகவும் ஈரோடு பெரியார் வீதியில் தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் அவை தலைவர் குமார்முருகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.
ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் கோபால் தலைமையில் நடந்தது. அவை தலைவர் பொன் சேர்மன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பல கோடி ரூபாய் செலவு செய்து வாக்குகளை பெற்றனர்.
ஆனால் தே.மு.தி.க.வுக்கு கிடைத்த 10 லட்சம் ஓட்டுகளும் நேர்மையான முறையில் கிடைத்த ஓட்டுகள். எனவே சட்டசபை தேர்தல் தோல்வியால் நாங்கள் சோர்வடையவில்லை. துவண்டு போகவும் இல்லை.
இந்த தேர்தல் தோல்வி காரணமாக முரசு சின்னம் முடக்கப்பட்டதாக சிலர் வதந்தியை கிளப்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.
கடந்த காலங்களில் ம.தி.மு.க. மற்றும் இடதுசாரி கட்சிகளின் அங்கீகாரம் ரத்தான போது அவர்கள் அதே சின்னத்தில் தான் போட்டியிட்டனர். எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க முரசு சின்னத்தில் போட்டியிடும்.
ஒரு கட்சியில் இருந்து விலகுவது அவர்களின் சொந்த விஷயம். ஆனால் விலகிய பிறகு தாங்கள் இருந்து வந்த கட்சி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்வது நாகரீகம் இல்லை. தே.மு.தி.க. பற்றியும் கட்சி தலைவர் விஜயகாந்த் பற்றியும் சந்திரகுமார் விமர்சனம் செய்வதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில பொருளாளர் இளங்கோ, துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், உமாநாத், ஆகியார் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
பகுதி செயலாளர்கள் நைனாமலை, பாலகிருஷ்ணன், ரங்கராஜ், வரதராஜ், கணேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தே.மு.தி.க. மாநில தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி பேசிய போது எடுத்த படம்.
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2ஆயிரத்து 17 மூட்டைகளில் 94 ஆயிரத்து 735 கிலோ எடையுள்ள கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தர கொப்பரை அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.53.25–க்கும், குறைந்தபட்ச விலை ரூ.50.05–க்கும், இரண்டாம் தர கொப்பரை அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.52.05–க்கும் குறைந்த பட்ச விலை ரூ.39.60–க்கும் என மொத்தம் ரூ.45 லட்சத்து 84 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.
இதே போல் 13 ஆறாயிரத்து 642 கிலோ எடையுள்ள 33 ஆயிரத்து 811 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் அதிக விலை டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்து 9, குறைந்த விலை டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 519 என ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு, காளிங்கராயன் பாளையம், மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(42).
இவருக்கும் இவரது கணவர் ராம்குமாருக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு கடந்த 8 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு பைரவி என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று லட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது கணவர் ராம்குமாரின் உறவினரும், அவரது மனைவியும் லட்சுமி வீட்டிற்கு வந்தனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த உறவினரும், அவரது மனைவியும் சேர்ந்து லட்சுமியை கீழே தள்ளி காலால் எட்டி உதைத்தும் தாக்கினார்களாம்.
லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பவானி ரோடு வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோவில் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர் என பலர் இட்லி வாங்கி சாப்பிட்டனர். பரபரப்பாக இருந்த அம்மா உணவகத்துக்கு காலை 9 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குடிபோதையில் வந்தார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் குடிபோதையில் வந்தவர் அம்மா உணவகத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.
பிறகு அங்குள்ள டேபிள் சேர் மற்றும் பொருட்களையும் துவம்சம் செய்தார். அப்போது அங்கு சாப்பிட வந்தவர்களை அவர் நொறுங்கி கண்ணாடியை எடுத்து மிரட்டி கொண்டே குத்த வந்தார். இதனால் அவர்கள் அலறி அடித்து ஓடினர். அம்மா உணவக ஊழியர்களையும் கண்ணாடியை கொண்டு குத்த வந்தார். செய்வதறியாமல் திகைத்த ஊழியர்கள் முன் பக்க கதவை மூடி விட்டு அலறி அடித்து பின் பக்க வாசல் வழியாக தப்பி ஓடினர்.
கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் அதன் தூள்கள் சிதறி கிடந்தன. இதில் குடிபோதையில் இருந்தவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் ரத்தம் படிந்திருந்தது. மேலும் அவர் அங்குள்ளவர்களை மிரட்டி கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த ஆசாமியை போலீசார் விரைந்து வந்து பிடித்து ஈரோடு அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விசாரணையில் அவரது பெயர் மூர்த்தி என்று தெரிய வந்தது. மேலும் அவரை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிருஷ்ணபுரம் காலனியை சேர்ந்த மாணவி தீபா (வயது 17) தந்தை பெயர் சுப்பிரமணி, தாயார் பூங்கொடி.
இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். இவர்களின் மகளான தீபா கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து 1153 மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்தார். பள்ளியிலேயே முதல் மார்க் வாங்கி தான் படித்த அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி தீபாவின் லட்சியம் தான் டாக்டருக்கு படித்து தன்னைப்போல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது தான்.
மாணவியின் எண்ணத்துக்கேற்ப தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க மாணவிக்கு இடம் கிடைத்தது. ஆனால் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய போதிய வசதி இல்லை.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவி தீபா குறைகள் கேட்டு மனுக்கள் வாங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சதீசிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
நான் கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து 1153 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். எனக்கு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் படிக்க தேவையான பணம் என்னிடம் இல்லை. லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்கிறார்கள். என் பெற்றோர் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.
இதனால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் இல்லாததால் படிக்க முடியாமல் போய் விடுமோ... என்ற கவலையில் உள்ளேன். இதனால் எனக்கு நிதி உதவி அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் மாணவி தீபா கூறி உள்ளார்.






