என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் படிக்க முடியாத மாணவி
    X

    மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் படிக்க முடியாத மாணவி

    அரசு பள்ளியில் படித்து முதலிடம் பெற்றார். மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் படிக்க முடியாத மாணவி குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிருஷ்ணபுரம் காலனியை சேர்ந்த மாணவி தீபா (வயது 17) தந்தை பெயர் சுப்பிரமணி, தாயார் பூங்கொடி.

    இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். இவர்களின் மகளான தீபா கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து 1153 மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்தார். பள்ளியிலேயே முதல் மார்க் வாங்கி தான் படித்த அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

    பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி தீபாவின் லட்சியம் தான் டாக்டருக்கு படித்து தன்னைப்போல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது தான்.

    மாணவியின் எண்ணத்துக்கேற்ப தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க மாணவிக்கு இடம் கிடைத்தது. ஆனால் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய போதிய வசதி இல்லை.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவி தீபா குறைகள் கேட்டு மனுக்கள் வாங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சதீசிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:–

    நான் கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து 1153 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். எனக்கு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் படிக்க தேவையான பணம் என்னிடம் இல்லை. லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்கிறார்கள். என் பெற்றோர் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.

    இதனால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் இல்லாததால் படிக்க முடியாமல் போய் விடுமோ... என்ற கவலையில் உள்ளேன். இதனால் எனக்கு நிதி உதவி அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு மனுவில் மாணவி தீபா கூறி உள்ளார்.

    Next Story
    ×