என் மலர்
ஈரோடு
ஈரோடு:
சென்னிமலை அருகே உள்ள கொண்டக்காட்டு தோட்டம் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான பேர் கூடி பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். சுப்பிரமணி என்பவர் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்து 120-ம் கைப்பற்றப்பட்டது.
சூதாட வந்தவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அடுத்துள்ள தயிர்ப்பள்ளம் கிராமத்தில் உள்ள பவானிஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ராமாசமி, கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி ஆகியோர் பவானிஆற்றுப்பகுதியில் சோதனையிட்டனர்.
அப்போது, பவானி ஆற்றில் சட்ட விரோதமாக 12 ஹெச்பி திறன் கொண்ட மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது தெரிய வந்தது. இந்த தண்ணீர் கொத்த மங்கலத்தில் உள்ள அக்சரா காகித ஆலைக்கு கொண்டு செல்வதும் உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து, மின் மோட்டார் பறிமுதல் செய்து பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, அதே காகித ஆலையில் சட்டவிரோதமாக மின்சாரம் திருடியதாக கோவை மின்திருட்டு தடுப்பு பிரிவு அலுவலர்கள் ஆலையில் சோதனையிட்டு மின்சாரம் திருடியாதாக ரூ.9 லட்சத்து 14 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஆலையில் பீகார் மாநில தொழிலாளி எந்திர அரவையில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தி இருந்தனர்.
ஆனால் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் மின்சாரம் தயாரிக்க ஊட்டி மலையில் உள்ள அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1200கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு உத்தரவுப்படி பாவனிசாகர் அணையிலிருந்து நேற்று முதல் கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகை திறந்து தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது விவசாயிகள் தண்ணீர் மீது மலர் தூவி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நேற்று முதல் நாளில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று முதல் வினாடிக்கு 2300 கன அடி வீதம் மொத்தம் 15 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திறந்துவிடப்பட்ட இந்த தண்ணீரால் ஈரோடு-திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோபி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் ஒரு பஸ் மூலம் ஈரோடு மாவட்டம் கோபி வந்தனர்.
கோபி அருகே உள்ள ஒரு பள்ளியில் திருப்பூர் மண்டல அளவிலான தடகளப்போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க அவர்கள் வந்தனர்.
கோபி வந்த அப்பள்ளி மாணவர்கள் போட்டி நடக்கும் பள்ளிக்கு வந்தனர். பஸ்சை ரோட்டோரமாக விட்டுவிட்டு மாணவ- மாணவிகள் போட்டியில் பங்கேற்க சென்றனர்.
மாணவ-மாணவிகள் வந்த பஸ்சில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை கண்ட பஸ் டிரைவர் துரைசாமி (52) கிளீனர் சந்திரகுமார் (48) ஆகியோர் அதிர்ச்சியுடன் ஓடி வந்தனர்.
பிறகு இது குறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர்.
எனினும் பஸ்சில் உள்ள இருக்கைகள் உள்பட பாதி பஸ் தீயில் எரிந்து போனது. நல்லவேளையாக மாணவ-மாணவிகள் செல்லும்போது தீ பிடிக்கவில்லை இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஸ்சில் உள்ள மின்வயரில் ஏற்பட்ட உராய்வால் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்த வறட்சியால் குடிக்க தண்ணீருக்கு கூட பஞ்சம் ஏற்பட்ட நிலையில் மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் நூதன வழிபாடு செய்தனர்.
மொடக்குறிச்சி பகுதியில் பெண்கள் மழைக்கஞ்சி எடுத்து ஒப்பாரி பாட்டுபாடி வழிபாடு செய்தனர்.
மழை பெய்யாத ஊர்களில் குடியிருக்க மாட்டோம் என்று ஊரை விட்டு பெண்கள் சென்றனர். ஊர் எல்லைக்கு ஆண்கள் சென்று பெண்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.
இப்படி செய்தால் மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை விவசாய நிலங்கள் எல்லாம் தரிசு நிலமாக மாறிய நிலையில் மழை பெய்யாதா? என்று பொதுமக்களும் விவசாயிகளும் ஏங்கி கொண்டிருந்தனர்.
ஈரோடு நகர மக்களின் இந்த ஏக்கத்தை போக்கும் வகையில் நேற்று இரவு மழை கொட்டியது. இரவு 7 மணியளவில் சில துளிகளாக தூறிய மழை அடுத்த சில நிமிடத்தில் இடி-மின்னலுடன் கொட்டி தீர்த்தது.
சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை பெய்தது. இந்த மழையால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைவெள்ளம் சாக்கடைக்குள் பாய்ந்து சாக்கடை நீருடன் மழை வெள்ளம் கலந்து நிரம்பி ரோட்டிலும் ஓடியது.
கொல்லம்பாளையம் ரெயில்வே மேம்பாலம் மணிக்கூண்டு பகுதி சூரம்பட்டி நால் ரோடு, மூலப்பாளையம், அன்னமார் பெட்ரோல் பங்க் மற்றும் திண்டல் பகுதி ரோடுகளில் மழை வெள்ளம் சீறி பாய்ந்து சென்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல இருசக்கர வாகனங்கள் மழை தண்ணீரில் சிக்கி பழுதானது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக 70 மி,மீ மழை பதிவாகி இருந்தது.
மேலும் இந்த மழை ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்தது. பவானி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அரச்சலூர், ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
நிலத்தை மட்டுமல்ல மக்கள் மனதையும் இந்த மழை குளிரவைத்து உள்ளது.
பெருந்துறை:
காந்தி நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன் வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமி கவுண்டன் பாளையம்.
வேட்டை பெரியாம் பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம் பாளையம், துடுப்பதி, பொன்காண்டா வலசு, கொளத்தான் வலசு, சூரியம்பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம் பாளையம், ஓசப்பட்டி, மாத நாயக்கன் பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதான புரம், சீரங்க கவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனூனூர், கோவில் காட்டு வலசு.
இந்த தகவலை ஈரோடு நகரிய மின் வாரிய செயற் பொறியாளர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
அரச்சலூர்:
அரச்சலூர், கந்தன்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சண்முகசுந்தரம்(வயது25).
சண்முகசுந்தரத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் கண்பார்வை பாதிப்படைந்தது. இந்நிலையில் அவரது தாயார் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார்.
இதனால் சில நாட்களாகவே சண்முகசுந்தரம் சோகத்தில் இருந்துள்ளார். அம்மா இல்லாமல் நான் எப்படி இருப்பேன் நானும் செத்து போகிறேன் என்று அடிக்கடி சொல்லி கொண்டு இருந்தார்.
சம்பவத்தன்று சண்முகசுந்தரம் அதே பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தான் விஷம் குடித்து விட்டதாக கூறி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் சிவா வீதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகள் அனிதா (வயது 17).
இவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பத்தன்று கல்லூரிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டு அனிதா சென்றார். பிறகு மாலையில் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அனிதாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.
எனவே இது பற்றி வீரப்பன் சத்திரம் போலீசில் பிரபாகாரன் புகார் கூறி உள்ளார். அதில் காணாமல் போன எனது மகள் அனிதாவை கண்டுபிடித்து கொடுக்கும்படி கூறி உள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது-
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மறுபடியும் அறிவிக்கப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பொது வார்டுகள், பெண்களுக்கான பொது வார்டுகள், ஆதிதிராவிடர், மலைவாழ் மக்களுக்கான பொது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கான வார்டுகள் குறித்து குளறுபடியான இடஒதுக்கீடு பட்டியல் அறிவிக்கப்பட்டது. எனவே அடுத்து தேர்தல் அறிவிக்கும் முன்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இடஒதுக்கீடு வார்டுகளை சீராக வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு பட்டியலை வரைமுறைப்படுத்தி முறையாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே அறிவித்தபடி தனித்து போட்டியிடும். வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். கடந்த முறை 2 தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற தேர்தல் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்யவும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.
ஈரோடு:
சென்னிமலை அடுத்த ஈங்கூர் அருகே உள்ள கவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). வாடகை வேன் ஒட்டி வந்தார். இவர் கவுண்டனூரில் இருந்து ஈங்கூருக்கு வேனில் சென்று கொண்டு இருந்தார்.
வேனை அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவரான குப்புசாமி என்பவர் ஒட்டினார். சென்னிமலை பெருந்துறை ரோட்டினை கடக்க முயன்ற போது இந்த வேனும் எதிரில் வந்த ஆம்னி காரும் எதிர்பாரத விதமான நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரின் பக்க வாட்டு கண்ணாடி உடைந்து விட்டது.
இதனால் கார் டிரைவருக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 10 பேர் ரவிச்சந்திரன் வீட்டுக்குள் புகுந்து ரவிசந்திரன் மற்றும் அவரது மனைவி சித்ரா (32) ஆகியோரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் மகேஷ்வரி (வயது 24). சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் பிறகு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் இது பற்றி ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மகேஷ்வரியை தேடி வருகிறார்கள்.
காங்கயம் பகுதியை சேர்ந்தவர் நாக மாணிக்கம். இவரது மனைவி தமிழரசி (வயது 33). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.
இவர் தினமும் தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்வார்.
வழக்கம் போல இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு வந்தார். பிறகு மாலையில் வேலைமுடிந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
சென்னிமலை அருகே உள்ள பூச்சிக்காட்டு வலசு என்ற இடத்தில் தமிழரசி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது ஸ்கூட்டரின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது.
ஆள் அதிகம் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அவர் செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீர் என்று வேகமாக வந்து ஆசிரியை தமிழரசியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் தமிழரசி அதிர்ச் சியடைந்தார். பிறகு இது பற்றி சென்னிமலைபோலீசில் அவர் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசியிடம் தங்க செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.






