என் மலர்
செய்திகள்

கோபி அருகே பள்ளி மாணவர்கள் வந்த பஸ் தீ பிடித்து எரிந்தது
கோபி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் ஒரு பஸ் மூலம் ஈரோடு மாவட்டம் கோபி வந்தனர்.
கோபி அருகே உள்ள ஒரு பள்ளியில் திருப்பூர் மண்டல அளவிலான தடகளப்போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க அவர்கள் வந்தனர்.
கோபி வந்த அப்பள்ளி மாணவர்கள் போட்டி நடக்கும் பள்ளிக்கு வந்தனர். பஸ்சை ரோட்டோரமாக விட்டுவிட்டு மாணவ- மாணவிகள் போட்டியில் பங்கேற்க சென்றனர்.
மாணவ-மாணவிகள் வந்த பஸ்சில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை கண்ட பஸ் டிரைவர் துரைசாமி (52) கிளீனர் சந்திரகுமார் (48) ஆகியோர் அதிர்ச்சியுடன் ஓடி வந்தனர்.
பிறகு இது குறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர்.
எனினும் பஸ்சில் உள்ள இருக்கைகள் உள்பட பாதி பஸ் தீயில் எரிந்து போனது. நல்லவேளையாக மாணவ-மாணவிகள் செல்லும்போது தீ பிடிக்கவில்லை இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஸ்சில் உள்ள மின்வயரில் ஏற்பட்ட உராய்வால் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






