என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள பாறைபுதூர் என்ற ஊரை சேர்ந்தவர் பெரியராமன் (வயது 60). இவரது மனைவி மாராத்தாள் (55). நம்பியூர் ரோட்டோரம் இவர்களது வீடு உள்ளது.
நேற்று இரவு வீட்டின் வெளியே கொசுவலை கட்டி கட்டிலில் பெரியராமன் படுத்து தூங்கினார். அவரது மனைவி சமையல் அறை அடுத்துள்ள ரூமில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு 1 மணியளவில் கோபியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பெரியராமன் வீட்டுக்ககுள் புகுந்தது. இதில் சமையல் அறை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அடுத்த அறையில் படுத்திருந்த மாராத்தாள் உயிர் தப்பினார். இதேபோல் கட்டில் போட்டு வெளியே படுத்து தூங்கிய பெரிய ராமனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சமையல் அறை இடிந்து விழுந்ததில் அதிர்ச்சி அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மாராத்தாள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சரக்கு வேன் மோதியதில் வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டி பலியானது. 2 ஆடுகள் படுகாயம் அடைந்தது.
இந்த சம்பவம் குறித்து பு.புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததால் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர்.
இந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் தனது மஞ்சள் பயிர் கருகியதால் ஈரோடு மாவட்ட விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொடுமுடி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 56) இவருக்கு சொந்தமான 3½ ஏக்கர் விவசாய நிலத்தில் மஞ்சள் பயிரிட்டிருந்தார். இதேபோல் இவரது மருமகன் கொளத்துப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியமும் தான் குத்தகைக்கு எடுத்திருந்த 10 ஏக்கர் விவசாய நிலத்தில் மஞ்சள் பயிரிட்டிருந்தார்.
இவர்களின் நிலத்தின் பாசன பகுதிக்குட்பட்ட காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் கிடையாது.
தண்ணீர் இல்லாததால் நன்கு வளர்ந்திருந்த மஞ்சள் பயிர்கள் கருகத் தொடங்கியது. இதை பார்த்து விவசாயி ராமலிங்கம் மன வேதனை அடைந்தார்.
சாகுபடி செய்யப்பட்ட தனது மஞ்சள் செடிகளும், மருமகன் மஞ்சள் பயிர்களும் கருகி விட்டதே என்று தனது நண்பர்களிடம் கூறி மிகவும் மனம் நொந்தார்.
இந்த நிலையில் விவசாயி ராமலிங்கம் நேற்று மாலை 4.30 மணி அளவில் மஞ்சள் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி ராமலிங்கம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரவியதையொட்டி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன் இன்று காலை முதல் மற்ற விவசாயிகளும் விவசாய சங்கத்தை சேர்ந்த பிரமுகர்களும் திரண்டனர். மேலும் உறவினர்களும் திரண்டதால் ஆஸ்பத்திரி முன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் விவசாயி ராமலிங்கம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
டி.என்.பாளையம்:
பங்களாபுதூர் அருகே உள்ள அரக்கன்கோட்டை நேதாஜிநகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் ஏளுர் ரோட்டில் ஒரு தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்து கீழே போட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அவர் திடீர் என்று கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
‘மங்கள்யான்’ செயற்கைகோள் திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை பள்ளி விழாவில் கலந்து கொள்ள இன்று ஈரோடு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசு அறிவித்து வெளியிட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டில் ‘மங்கள்யான்’ செயற்கை கோள் படம் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
விஞ்ஞான ஆய்வு கழகத்தின் சாதனையை இந்திய அரசும் இந்திய மக்களும் அங்கீகரித்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இது மேலும் சாதனை படைக்க எங்களுக்கு உத் வேகமாக உள்ளது.
சந்திராயன் திட்டம் 3 கட்டமாக நடக்கிறது. 2018-ம் ஆண்டில் திட்டம் தொடங்கி நடக்கும். மங்கள்யான் செயற்கை கோளின் ஆயுட் காலத்தை நீட்டிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
நிலவில் மனிதனை அனுப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து உள்ளார். இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து உள்ளனர்.
செல்லாத ரூபாய் நோட்டுகளால் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களுக்கு மரண அடியாக உள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்கு திட்டத்தினால் கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளநோட்டு ஒழிக்க சிறந்த நடவடிக்கை என்று பொருளாதார வல்லுனர்கள் பாராட்டி உள்ளனர். காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்து குறைகளை கூறி வருகிறது. தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன.
குறிப்பாக பொள்ளாச்சி- கோவை, பழனிரோட்டில் 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தண்ணீர் திறக்க மறுக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது தண்ணீர் திறக்க மறுத்தபோது தமிழக பா.ஜ.க. சார்பில் கண்டனத்தை தெரிவித்தோம்.
ஆனால் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழுமையாக எடுத்து வருகிறது. எனவே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் நிரந்தரமாக கிடைக்கும்.
இவ்வாறு மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஈரோடு:
2 நாட்களுக்கு பிறகு இன்று அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.கள் திறக்கப்படும் என்றும், ஏ.டி.எம். மூலம் இன்று முதல் புதிய 2000 நோட்டுகள் மற்றும் ரூ.50 பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி சாகர், நம்பியூர், கவுந்தபாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து வங்கி ஏ.டி.எம். சென்டர்களிலும் மக்கள் திரண்டனர்.
ஏ.டி.எம். சென்டர் வழக்கம் போல் இயங்கும் என எண்ணி பலர் காலை 8 மணிக்கெல்லாம் ஏ.டி.எம். முன் குவிந்தனர். இன்னும் பலரோ காலை 6 மணிக் கெல்லாம் வரத்தொடங்கி விட்டார்கள்.
ஆனால் எந்த ஏ.டி.எம். களும் திறக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு தான் செயல்படும் என்று கூறப்பட்டது. வந்தது வந்தாகி விட்டது இன்றும் 2 மணி நேரம் தானே... காத்திருந்து பணத்தை எடுத்துக் கொண்டு போவோம்...என ஏ.டி.எம். முன் அவர்கள் தவம் கிடக்க தொடங்கினர்.
காலை 10 மணிக்கு மேலும் ஏ.டி.எம். திறக்கப்படாததால் பொதுமக்கள் பணம் எடுக்க தவித்து வருகிறார்கள். மதியத்துக்கு மேல்தான் ஏ.டி.எம். செயல்படும் எனவும் 50 ரூபாய் மட்டுமே கிடைக்கும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் மதியத்துக்கு மேலேயும் ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. ஈரோட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். சென்டர்களில் காத்திருந்து... காத்திருந்து மக்கள் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம்.
மேலும் நகரில் உள்ள சில ஏ.டி.எம்.களில் பழைய 500 மற்றும் 1000 நோட்டை மக்கள் செலுத்தினர்.
அறிவித்தப்படி ஏ.டி.எம்.கள் இன்று செயல்படாததால் ஈரோட்டில் பொதுமக்கள் இன்று மீண்டும் பாங்கிகளுக்கு படையெடுத்தனர்.
அனைத்து வங்கிகளிலும் செல்லாத நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை வாங்க மக்கள் திரண்டதால் இன்றும் பாங்கிகளில் கூட்டம் அலைமோதியது.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 500, 1000 ரூபாய் கொடுத்து அதற்கு பதிலாக 100 மற்றும் புதிய 2000 நோட்டுகளை பெற்றுக் கொண்டு சென்றனர்.
இதேபோல் ஈரோடு தலைமை தபால் நிலையத்திலும் இன்று 2-வது நாளாக மக்கள் திரண்டு ரூ.500, 1000 நோட்டுகளை கொடுத்து 100 ரூபாய்களை பெற்று சென்றனர்.
இதனால் தலைமை தபால் நிலையத்திலும் இன்று கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
ஈரோடு:
ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் பெரும்பாலான வியாபாரங்கள் நேற்றும் இன்றும் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. ஓட்டல், மளிகை கடை, நகை கடை என அனைத்து கடைகளிலும் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
கோபியில் நேற்றும் இன்றும் பெரும்பாலான நகை கடைகள் திறக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் பலர் ரூ.500, 1000 நோட்டுக்களை கொண்டு வருவதால் அதை வாங்க மறுத்து கடைகளையே நகை வியாபாரிகள் அடைத்துவிட்டனர். இன்றும் பல கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன.
மேலும் பூட்டப்பட்ட கடைகள் முன் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.
அதில், “ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மறு அறிவிப்பு வரும் வரை பெற்றுக் கொள்ள இயலாது சிரமத்திற்கு மன்னிக்கவும்” என்று வாசகம் தீட்டப்பட்டு உள்ளது.
கடைகள் அடைக்கப்பட்டு கிடந்ததால் அவசரத்துக்கு நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள துடுப்பதியை சேர்ந்தவர் சின்னியப்பன். இவரது மகன் செல்வகுமார் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று நள்ளிரவு இவர் மொபட்டில் துடுப்பதியில் இருந்து பெருந்துறைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது மஞ்சள் வணிக வளாகம் அருகே வரும் போது எதிரே ஒரு லாரி வந்தது.
எதிர்பாராதவிதமாக அந்த லாரி செல்வகுமார் சென்ற மொபட் மீது மோதியது. இதனால் தடுமாறிய அவர் மொபட்டில் இருந்து தவறி விழுந்தார்.
இந்த நேரத்தில் லாரியின் சக்கரம் செல்வகுமாரின் தலை மீது ஏறியதால் மூளை சிதறிய அவர் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
திண்டுக்கல் மாவட்டம், காத்துக்கொட்டம், சிறுவத்தூரை சேர்ந்தவர் தம்பி நாயக்கர் இவரது மகள் சகுந்தலா (வயது 27) சகுந்தலா கரூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
வெள்ளகோவில் முத்துக் குமார் நகரில் உள்ள குப்புசாமி மகன் பிரகாஷ் (32). பிரகாஷ் டிப்ளம்மோ படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பிரகாஷ் மற்றும் சகுந்தலா இருவர் குடும்பங்களும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வெள்ளகோவிலில் வசித்து வந்னர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இருவர் வீட்டிலும் இவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சென்னிமலை வந்து மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
சென்னிமலை போலீசார் இருவர் வீட்டிற்கும் தகவல் கொடுத்து நேரில் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஓரிச்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 32). கட்டிட தொழிலாளி.
கார்த்தி அதே பகுதியில் உள்ள ஏலச்சீட்டு நடத்தி வரும் கணவன், மனைவியான முத்துசாமி, பூங்கொடி யிடம் சீட்டு போட்டு இருந்தாராம். இதில் கார்த்தி ஏலச்சீட்டு எடுத்து பணம் வங்கி கொண்டு சரியாக பணம் கட்டாமல் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பூங்கொடி கார்த்தியிடம் பணம் கேட்டார் . இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்தி பூங்கொடியை சுத்தியால் தாக்கினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ஒரு வித பயத்தில் இருந்த கார்த்தி கரட்டூர் மாதையன் கோவில் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்த வந்த போலீசார் அவரது உடலை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிபடியாக சரிந்து கொண்டே வருகிறது.
கடந்த மாதம் மத்தியில் 53 அடியாக இருந்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிக்கு உயிர் நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 15 நாட்கள் வினாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இதனால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 95 கன அடி வீதம் மட்டும் தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தால் கீழ்பவானி வாய்க்காலுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை பெய்யாததால் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
கீழ்பவானி வாய்க்காலின் கிளை மற்றும் கொப்பு வாய்க்கால்களுக்கு 4 நாட்கள் மட்டும் தான் தண்ணீர் வந்தது. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வயலை உழுது நெல் மற்றும் பயிர்களை விவசாயம் செய்திருந்த விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். சில வயல்களில் உழுது மட்டும் போடப்பட்டுள்ளது. இதில் விவசாய பணிகளை மழையை நம்பி தொடரலாமா? அல்லது விட்டு விடலாமா? என்ற குழப்பத்தில்... கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
பு.புளியம்பட்டி:
பவானிசாகர் வனப்பகுதியையொட்டி உள்ள விளாமுண்டி வனத்தில் ஏராளமான மான்கள் மற்றும் வனவிலங்குகள் வசிக்கிறது.
தற்போது அங்கு வன விலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் காட்டை விட்டு வெளியே வருகிறது.
நேற்று இரவு விளாமுண்டி வனத்தில் இருந்து பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வெளியே வந்தது. பு.புளியம்பட்டி அருகே புங்கம்பாடியில் கோவை-சத்தியமங்கலம் ரோட்டுக்கு வந்து விட்டது.
அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மான் மீது மோதியது. இதில் அந்த மான் தலை மற்றும் கழுத்து பகுதி நசுங்கிய நிலையில் பரிதாபமாக இறந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று மானின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.






