என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    ஈரோடு:

    ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமநிலை வேலை சமநிலை ஊதியம் வழங்க வேண்டும். அரசு அறிவித்த உயர் ஊதியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் பழனி சாமி, பி.எஸ்.என்.எல். உழியர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
    இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதே நலம் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி வளர்ச்சிக்காக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதன் முதற்கட்டமாக ஈரோடு தெற்கு மாவட்டத்தில் இன்று ஊழியர்கள் கூட்டம் நடந்தது. மாலையில் பவானியில் நடக்கும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளேன்.

    தமிழ்நாட்டில் இதுவரை இருதுருவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் மாற்று அரசு உருவாக மக்கள் முன் வர வேண்டும்.

    தமிழ்நாட்டில் இப்போது ஆரோக்கியமற்ற சூழ்நிலை உள்ளது.

    ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தமிழகம் வெளியே வர வேண்டும். நல்ல நிர்வாகம் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். ஊழல் செய்த பணத்தை வைத்து சிலர் ஆட்சிக்கு வர முயல்வது முற்றிலும் தவறானது.

    முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா சினிமா நட்சத்திரமாக இருந்து அபரிதமான சொத்துக்களை சேர்த்தார். எனவே ஊழல் செய்து பணம் சம்பாதிக்க அவசியம் அவருக்கு இல்லை. ஜெயலிலதா மீது ஊழல் சாயம் வரக்கூடிய அளவுக்கு சசிகலா துணை புரிந்து விட்டார். நல்ல நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் நடக்கவே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். இந்த சூழ்நிலை ஏற்படவில்லையென்றால் தேர்தலை சந்திப்பது நலமாக இருக்கும்.

    கூவத்தூரில் வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் தொகுதிக்கு சென்று பொதுமக்களின் ஆலோசனை பெற்று அதன் பிறகு யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? என முடிவு செய்வது நலமாக இருக்கும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக சத்தியபாமா எம்.பி. தெரிவித்துள்ளார்.
    கோபி:

    திருப்பூர் தொகுதி எம்.பி. சத்தியபாமா சென்னையில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்தார்.

    இதையொட்டி தொகுதி மக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சத்திய பாமா எம்.பி. கூறினார்.

    அவர் கூறியதாவது:- பன்னீர் செல்வம் பக்கம் சேர்ந்ததால் எனக்கு பலர் போனிலும் வாட்ஸ்-அப்பில் வரவேற்பு தெரிவித்து “நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள்” பாராட்டுகிறேன் என்று கூறி வருகிறார்கள்.

    மேலும் பலர் என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது எனக்கு மனநிறைவை கொடுத்துள்ளது.

    இது மட்டுமல்ல லண்டன், சிங்கப்பூர், ஏமன், மலேசியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    சசிகலாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. வரவேற்கத்தக்கது. எதிர்பார்த்ததுதான் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நாங்களாக இருந்தாலும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

    இவ்வாறு சத்தியபாமா எம்.பி கூறினார்.
    காதலர் தினம் இன்று உற்சாகமாக காதலர்கள் கொண்டாடி வரும் நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் கிளம்பி ஆங்காங்கே போராட்டமும் நடந்து வருகிறது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு காதலர் தினத்தை யொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் வருவார்கள். காதல்மொழிபேசி மகிழ்வார்கள்.

    இந்த காதலர்களுக்கும் காதலர் தினத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியில் சிலர் இன்று கொடிவேரி அணை பிரிவுக்கு வந்தனர். அங்கு 2 நாய்களுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். திருமண நிகழ்ச்சி நடந்தபோது 2 நாய்களுக்கும் மேலே குடைகளை பிடித்தபடி இருந்தனர். மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் பாபு, ரங்கசாமி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமணம் முடித்த பிறகு நாய்களை கழுத்தில் மாலையுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    காதல்ஜோடி ஏதாவது வருகிறதா? என்று நோட்ட மிட்டபடி சென்றனர். காதலர் தினத்தை எதிர்த்து கோ‌ஷமிட்டனர்.

    ஆனால் உஷாரானசில காதல் ஜோடிகள் அவர்களின் கண்ணிலிருந்து தப்பி வேறுவழியில் சென்று விட்டனர்.
    தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலையால் மக்கள் நலப்பணிகள் தடைபட்டு உள்ளது என த.மா.கா.இளைஞர் அணி தலைவர் யுவராஜா கூறினார்.

    ஈரோடு:

    த.மா.கா. மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையில் த.மா.கா.வினர் இன்று ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில்உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ விடியல்சேகர், மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில துணை தலைவர் ஆறுமுகம்,பொதுக்குழு உறுப்பினர் சந்திர சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சீமை கருவேலமரங்களை அகற்றும்படி மதுரை ஐகோர்ட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவு சார்பில் கட்சி ஈரோட்டில் இன்று கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. வருகிற 27-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இந்த பணி நடைபெறும்.

    தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலையால் மக்கள் நலப்பணிகள் தடைபட்டு உள்ளது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

    எனவே முடங்கி கிடக்கும் மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் உடனே அ.தி.மு.க.வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நிலையான ஆட்சிஅமைய அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.முக. எம்.எல்.ஏக் களை பதுக்கி வைத்து அவர்களை பாதுகாக்கும் சசிகலாவை பெண்தாதா என்று சொல்வதை விட கோழைபோல் செயல்படுகிறார் என்று தான் சொல்லவேண்டும்.

    உண்மையாகவே அதிகமான எம்.எல்.ஏக்கள் சசிகலாவை ஆதாக்கிறார்கள் என்றால் அவர்களை விடுவித்து தொகுதி மக்களின் நலத்திட்டங்களை செய்ய அனுமதிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு திண்டலில் இன்று குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திண்டல்:

    ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள புதுக்காலனி, கீழ் திண்டல், காரப்பாறை போன்ற இடங்களில் கடந்த ஒரு மாதமாக போதிய அளவில் குடிதண்ணீர் கிடைப்பது இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை திண்டலில் பொதுமக்கள் திடீர் என்று மறியலில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நடுரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்தனர்.

    இதனால் அந்த வழியாக செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வழியாக ஏராளமான பள்ளி-கல்லூரிகள் உள்ளன. இந்த பள்ளி-கல்லூரிக்கு மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற வாகனங்கள் சாலை மறியலினால் அங்கிருந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன.

    இது பற்றி தகவல் கிடைத்தவுடன் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வேறு பாதை வழியாக போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.

    மேலும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது குடிதண்ணீர் வினியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்டது.
    தாளவாடி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    தாளவாடி நெய்தாள புரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 45) தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழத்தை உலுக்கி கொண்டு இருந்தார். அப்போது கால் தவறி அவர் கீழே விழுந்து விட்டார்.

    இதனால் படுகாயம் அடைந்த குஞ்சான் சாமராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக மைசூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பாதாபாக இறந்தார்.

    இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிறுவலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அடுத்த சிறுவலூர் அருகே உள்ள காமராஜபுரம் ஆண்டிக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 80). தொழிலாளி. நோய் கொடுமையால் பாதிக்கப்பட்ட இவர் வி‌ஷ மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வெள்ளியங்கிரி சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    89 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை சசிகலா சிறை வைத்துள்ளார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். போதிய மழை இல்லாமல் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளாவில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசும் கவர்னரும் தடுத்து நிறுத்த வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தின்போது வாக்குறுதி கொடுத்தார். அதனை நிறைவேற்ற உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இப்போது உள்ள சூழ்நிலையில் யாரை முதல் அமைச்சராக்க பதவி ஏற்க அழைப்பது? என்று கவர்னர் முடிவு செய்வதில் ஏற்படும் தாமதத்துக்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஏனென்றால் சசிகலா ஏற்கனவே குற்றவாளி என்று கீழ்கோர்ட்டால் தீர்ப்பு கூறப்பட்டது.

    இன்னும் நான்கைந்து நாட்களில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வர உள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை காத்திருந்து முதல்-அமைச்சர் பதவி ஏற்க அழைக்க வேண்டும்.

    சசிகலா பெண் தாதா போல் செயல்படுகிறார். 90 எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்துள்ளது, சிறை வைக்கப்பட்ட இடத்தை சுற்றி குண்டர்களை நிறுத்தி உள்ளது, செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்களை தாக்குவது, அவர்களது செல்போன்களை பறிப்பது போன்ற நடவடிக்கைகளினால் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் சிரிப்பதுபோல் தரக்குறைவாக நடத்தி காட்டுவது ஆகியவற்றால் சசிகலா ‘‘பெண் தாதா’’ போல் செயல்படுகிறார்.

    மற்றும் மிரட்டுவது தமிழ்நாட்டு மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு நடப்பதும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    சசிகலா நடவடிக்கையை கிராம மக்கள் மற்றும் படித்தவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தீர்ப்பு கூறும் வரை ஆட்சி அமைக்க கவர்னர் தாமதப்படுத்துவது தவறு இல்லை.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசின் கருத்து அவரது சொந்த கருத்தாகும். இதுபற்றி நானும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, முகில் வார்னிஷ் போன்றவர்களை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு அனுப்புவது தொடர்பாக கவர்னர் தாமதம் செய்வதில் தவறு இல்லை என வலியுறுத்தி உள்ளோம். கட்சி தலைமையும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

    கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு முதல்-அமைச்சர் ஆக சசிகலா தகுதியானவரா? என்று கவர்னர் ஆலோசனை நடத்த வேண்டும். இதன் பிறகே அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்க அழைப்பு அனுப்புவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்.

    காங்கிரசை பொறுத்த வரை இது அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனையாகும். சசிகலாவுக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ எங்கள் ஆதரவு கிடையாது. எங்களது கூட்டணியான தி.மு.க. எடுக்கும் முடிவை பொறுத்து எங்களது முடிவு இருக்கும்.

    சுப்பிரமணியசாமிக்கு அ.தி.மு.க. மகளிர் அணி மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அவருக்கு கோர்ட்டில் மகளிர் அணி கொடுத்த வரவேற்பு மறக்க முடியாத ஒரு நிகழ்வு ஆகும்.

    இப்போதுள்ள சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி கொள்ள பா.ஜனதா நினைக்கிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் இப்போது கால் ஊன்ற முடியாது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
    தமிழ்நாட்டில் தற்போது என்ன நடக்கிறது? என்று தெரியவில்லை. அரசியல் குழப்ப நிலை நீடித்து வருகிறது என விக்கிரமராஜா கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட், கனிமார்க்கெட் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது என்ன நடக்கிறது? என்று தெரியவில்லை. அரசியல் குழப்ப நிலை நீடித்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க கவர்னர் முன்வர வேண்டும். சரியான ஆட்சியை கொண்டுவர அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பவானி ஆற்று குறுக்கே கேரளா அணைகட்ட அனுமதிக்க கூடாது. இதற்காக போராடும் விவசாயிகளுக்கு பேரமைப்பு ஆதரவு அளிக்கும் வெளிநாட்டு குளிர் பானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பருகுவதை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    வெளிநாட்டு குளிர் பானங்கள் பருகக்கூடாது என்பதை வலியுறுத்தி நாளை சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்குகிறது.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

    கூட்டத்துக்கு சங்க தலைவர் ஆர்.கே. சண்முக வேல் தலைமை தாங்கினார். அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் சிவநேசன், வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட பொருளாளர் ராஜகோபால், துணைத்தலைவர் எஸ்.பொன் நாராயணன், கொங்கலம்மன் அனைத்து வணிகர் சங்க தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதல்- அமைச்சர் பன்னீர் ஆகியோர் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் போன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்க கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சூரம்பட்டி 4 ரோட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் பழைய பாளையத்தில் உள்ள மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களுக்கு இன்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதே போல ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் ஆகிய எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சசிகலாவிற்கு எம்.எல்.ஏ. செங்கோட்டையன் ஆதரவளித்திருப்பது கோபி தொகுதி மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

    கோபி:

    அ.தி.மு.க.வில் கட்சி மாறாத சீனியர் எம்.எல்.ஏ. என்ற பெயருடன் கோபி தொகுதியில் பொது மக்களிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையுடனும் வலம் வந்து கொண்டிருப்பவர் செங்கோட்டையன்.

    இவர் 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதன் முதலில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பெற்ற போது சத்தியமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 1980, 1984, 1989, 1991, 2006, 2011, மற்றும் 2016 ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இவர் 1991 முதல் 1996 ம் ஆண்டு வரை போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2011 முதல் 2012 ம் ஆண்டு ஜூலை மாதம்வரை வேளாண்மைத்துறை அமைச்சர்,தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் என முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மந்திரியாக பணியாற்றியுள்ளார்.

    மேலும், கடந்த காலங்களில் இவர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என்று திட்டமிட்டு சிறந்த முறையில் செயல்படுத்தியவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவை தவிர அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

    எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. ஜெ. ஜா என இரண்டு அணிகளாக பிரிந்த போது இவர் அ.தி.மு.க. வை மீட்க ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இவர் ஜெயலலிதாவால் கடந்த 2012 ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சியில் இவர் ஓரங்கட்டப்பட்டார். 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வில் இவர் மீண்டும் சீட் பெற்றுகோபி செட்டிபாளையம் சட்ட மன்றத் தொகுதி உறுப்பினரானார்.

    அப்போதும் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை. இதனால், இவரும், இவரது ஆதரவாளர்களும் உற்சாகம் குறைந்து செயல் பட்டுவந்தனர். மேலும், இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதற்கு சசிகலாதான் காரணம் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.

    இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர், அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா முன்வந்த போது செங்கோட்டையன், சசிகலாவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.

    இவரது நிலைப்பாட்டை கோபி தொகுதி மக்கள் அங் கீகரிக்கவிலலை. ஏற்கவும் இல்லை. காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் 74 நாட்கள் சிகிச்சை பெற்றபோது அவரது போட்டோவைகூட வெளியேவிடாமல் தடுத்து வைத்து விட்டார். சட்ட சபையில் சிங்கம் போல் செயல்பட்டு வந்த முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு யார் காரணம்? என பல்வேறு வதந்திகள் உலாவரும் வேளையில், சசிகலாவிற்கு, கோபி தொகுதி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் ஆதரவளித்திருப்பது தொகுதி மக்களிடையே இவர் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், கோபியைச் சேர்ந்த சத்தியபாமா எம்.பி. (திருப்பூர் தொகுதிஎம்.பி.) நேற்று முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

    கோபி தொகுதியில் செங்கோட்டையனுக்கு பரவலாக எதிர்ப்புகிளம்பியுள்ளது. அவர் மீண்டும் தொகுதிக்கு வந்தால், மக்களை முன்பு போல் சந்திக்க முடியமா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகியுள்ளது.

    ×