என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் மற்றும் தொகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    மீண்டும் அமைச்சர் ஆக பொறுப்பேற்ற கே.ஏ.செங்கோட்டையன் விரைவில் கோபி வர உள்ளார். இதையொட்டி கோபியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கோபி அடுத்த குள்ளம் பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கும், கோபி சத்திய மங்கலம் ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்துக்கும் நேற்று முதல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இதேபோல் கோபியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி. சத்தியபாமா எம்.பி. வீடும் கோபி குன்னம்பாளையத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கும் மேலும் கோபியில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    வேலை தேடி வரும் பெண்களை ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    வேலை தேடி வரும் பெண்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி சிலர் அழைத்து செல்கிறார்கள். இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட இளம் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையொட்டி ஈரோடு சூரம்பட்டி ராஜாஜி வீதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினர்.

    அப்போது பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக மெகபூப் பாட்சா, (வயது 39), பிரேமா (27), பேபி (46) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். யார் அவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சம்பவத்தன்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அந்த நபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    இது குறித்து அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கோபி அருகே ஓட்டலில் சாப்பிட வந்தவர் செல்போனை 2 மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி அருகே உள்ள அரசூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீ (வயது 27). இவர் சத்தியமங்கலம் பகுதியில் 108 ஆம்புலன்சில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது அம்மா அரசூர் பகுதியில் மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அந்த மெஸ்சில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மர்ம ஆசாமிகள் சாப்பிட வந்தனர். பிறகு சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர்.

    அப்போது அங்கு சாப்பிட வந்தவரின் விலை உயர்ந்த செல்போன் ஒன்று காணாமல் போய் விட்டது. இந்த போனை சாப்பிட வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது குறித்து ஜெயஸ்ரீ கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.சப்- இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, தென்றல் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது31). இவருக்கு திருமணமாகி விட்டது.

    அர்ஜுனன் சரியாக வேலைக்கு செல்ல வில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை இது தொடர்பாக மீண்டும் அர்ஜினனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அர்ஜினன் தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்த எலி மருந்தை(வி‌ஷம்) குடித்தார்.

    இதில் உயிருக்கு போராடிய அர்ஜுனனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அர்ஜினன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் தமிழகம் தப்பியது என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசியுள்ளார்.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சியில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    அம்மையார் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எப்படியும் அடுத்த முதல்வர் ஆகி விடலாம் என கற்பனை கனவில் மிதந்தார் சசிகலா. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டுக்கோப்பாக தொண்டர்களுக்காக வைத்திருந்த அ.தி.மு.க.வை இப்போது சசிகலா தன் வசமாக்கி கொண்டுள்ளார்.

    தனக்குதானே அடுத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என பிரகடனப்படுத்தி அடுத்த முதல்வராகி விடலாம் என துடித்தார்.

    ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டார்.

    சசிகலா மட்டும் முதல்-அமைச்சர் ஆகி இருந்தால் தமிழ்நாட்டுக்கு அதைவிட வேறு அவமானம் இருந்திருக்காது. இதனால் தமிழகம் தப்பியது.

    ஜெயலலிதாவை பாதுகாத்தோம் உருவாக்கினோம் என்று சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆரை கூட நாங்கள்தான் உருவாக்கினோம் என்று கூட இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

    இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகி இருக்கிறார். இவரது வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கண்டெய்னர் லாரி மூலம் எடுக்கப்பட்டது. இதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

    காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு வழங்கினார். ஏழைக் குழந்தைகள் படிக்க முடிந்தது. ஆனால் இன்று கொள்ளைதான் அடிக்கப்படுகிறது.

    விழாவில் தெற்கு மாவட்ட துணை தலைவர் எம்.எஸ்.ஞானசேகரன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், விவசாய அணி பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏ.சி.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கடம்பூர் அருகே யானை தந்தத்தால் குத்தி தொழிலாளியை தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    டி.என்.பாளையம்:

    சத்தியமங்கலம் வனப் பகுதியை அடுத்துள்ளது கடம்பூர் வனப்பகுதி. கடம்பூர் அருகே உள்ள பசுவனாபுரம் திப்பநாயக்கனூரை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 32). தொழிலாளி.

    இவர் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் எழுந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்தார். வீட்டின் முன் வாழை மரங்கள் வளர்த்து வந்தார்.

    அவர் வெளியே வந்த சமயம் வனப்பகுதியிலிருந்து வாழை மரங்களை சாப்பிட ஒரு யானை அங்கு வந்தது. திடீரென தன் வீட்டு முன் யானை நிற்பதை கண்டு மாதப்பன் திடுக்கிட்டார்.

    அடுத்தக்கனம் அந்த யானை தனது தந்தத்தால் அவரை குத்தி தூக்கி வீசியது. அலறியவாறு அவர் தூரப்போய் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    யானை தந்தத்தால் குத்தியதில் மாதப்பனின் மார்பில் பெரிய ஓட்டை விழுந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    மொடக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மொடக்குறிச்சி நால்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஈரோடு மாவட்ட அமைப்பாளர் தனவிஜயன் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி தொகுதி துணை செயலாளர் கமலநாதன் வரவேற்றார். மண்டல செயலாளர் விநாயகமூர்த்தி, மாநில துணை பொது செயலாளர் கனிஅமுதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவி சுழற்சி முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும், மொடக்குறிச்சி நால் ரோட்டில் பயணிகள் நிழற் குடை அமைக்க வேண்டும், மொடக்குறிச்சி திருவள்ளுவர் வீதி மயானத்திற்கு சுற்றுச் சுவர் மற்றும் எரிமேடை அமைத்து தரவேண்டும்.

    களத்துமின்னப்பாளையம் காலனியில் உள்ள பிரச்சினைகளான குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிடம், சமுதாயகூடம் உள்பட கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    முன்னதாக மொடக்குறிச்சி, களத்து மின்னப் பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    கணருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வேதனையில் இருந்த மில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே உள்ள பூந்துறை பூவாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் முனிராஜ்(வயது33). இவர் கோவை அருகே கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் மேலாளர் ஆக பணி புரிந்து வந்தார்.

    இவரது மனைவி அனிதா(32) கர்நாடக மாநிலம் கொள்னே காலை சேர்ந்தவர். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கணவர்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி அனிதா கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மனைவி சென்றதிலிருந்து முனிராஜ் வருத்தத்துடன் காணப்பட்டார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த முனிராஜ் வி‌ஷம் குடித்ததாக கூறப்படுகிறது.இதனால் வாந்தி எடுத்த அவரை தாயார் பாவாயி மற்றும் உறவினர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனிராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    எதை வேண்டுமானாலும் செய்யலாம் மக்களை ஏமாற்றலாம் என நினைப்பவர்களுக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது என இளங்கோவன் பேசியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மேட்டுக்கடையில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம் நடந்தது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் எந்த தவறு செய்தாலும் தட்டிக்கேட்க ஆள்இல்லை என்றுசெயல்பட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தனர். தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைஉள்ளது. அதை செய்துமுடித்தவர் பெருமைக்குரிய பேராசிரியர் அன்பழகன் ஆவார்.

    எதை வேண்டுமானாலும் செய்யலாம் மக்களை ஏமாற்றலாம் என நினைப்பவர்களுக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது. இதுஒரு திருப்புமுனை ஆகும்.

    கல்லறைக்கு சென்று சமாதியில் இந்த அடி அடித்தவர்கள் அவர் உயிரோடு இருக்கும்போது எப்படியெல்லாம் அடித்திருப்பார்கள் என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
    ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ கே.வி.ராமநாதன். 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கும்போது கட்சியின் முதல் ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றவர். மேலும் இவர் மாவட்ட துணைப் பொதுச் செயலாளர், மாநாடு துணைத்தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர்.

    கடந்த 2006-ம் ஆண்டு பவானி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

    இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கே.வி.ராமநாதன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ம.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களை என் தலைமையில் சிறப்பாக நடத்தி உள்ளேன். இட ஒதுக்கீடு வழங்ககோரி என் தலைமையில் ரெயில் மறியல் நடந்தது.

    வன்னியர் சங்க மாநாடு பொதுக்கூட்டம், போராட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தினேன். மண்டல மாநாட்டை ஈரோடு, நாகப்பட்டினம், நெல்லை, திருச்சி இடங்களில் சிறப்பாக நடத்தி இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக டாக்டர் ராமதாஸ் என்னை பாராட்டி மாநாட்டு நாயகன் என்று எனக்கு விருது வழங்கி பாராட்டினார். அவர் உத்தரவிட்ட அனைத்து கட்சி பணிகளையும் சிறப்பாக செய்து நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தேன்.

    தற்போது பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள கசப்பான சம்பவங்களால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கட்சியில் பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

    இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் அதில் கூறி உள்ளார்.
    33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்து ஊழலுக்கு துணை நின்றவர் சசிகலா என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    ஈரோடு:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேச முடிவு செய்து உள்ளார். அதன்படி முதல் மாவட்டமாக நேற்று அவர் ஈரோடு வந்தார்.

    ஈரோடு தெற்கு மாவட்ட ஊழியர் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு பயணத்தை தொடங்கி இருக்கிறேன். இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் என்னவென்றால் தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் இருதுருவ அரசியலை விட்டு தமிழக மக்களை மீட்டுக்கொண்டு வரவேண்டும்.

    தி.மு.க., அ.தி.மு.க. 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள். இந்த கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திராவிட கட்சிகள் இல்லாத மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டும் என்ற மக்கள் சக்தியை உருவாக்குவதே பா.ஜனதாவின் நோக்கம்.

    ஊழல் கறை படியாமல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நட்பினால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, இறப்புக்கு பின்னரும் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு உள்ளார். 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் உடன் இருந்து ஊழலுக்கு துணை நின்றவர் சசிகலா. இவர்களின் ஊழல் பற்றி நீதிபதிகளே கண்டிக்கும் அளவுக்கு உள்ளது.

    நீதிமன்றம் தற்போது வழங்கி உள்ள தீர்ப்பு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைந்து உள்ள நல்ல தீர்ப்பு. நல்லவர்கள், நேர்மையானவர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை உருவாக்கும்.

    தற்போதைய நிலையில் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அப்படி ஒரு ஆட்சி அமையவில்லை என்றால் தேர்தலை சந்திப்பது நல்லது. உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும்.

    தற்போதைய பரபரப்பில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து அரசு விலகி உள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூவத்தூரில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இப்போதைய நிலையில் சட்டமன்றத்தில் வாக்கெடுப்புக்கு அறிவிப்பு வந்தாலும், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களிடம் பேசி, அந்த கருத்துடன் வந்து வாக்களிக்க செய்ய வேண்டும்.

    தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உள்துறை விவகாரங்களில் அனுபவம் உள்ளவர். எனவேதான் அத்தனை பரபரப்பு மிக்க நேரத்திலும் நிதானமாக நடவடிக்கை எடுத்தார். அதுபோல் இனி வரும் காலங்களிலும் நிதானமாக சரியான முடிவினை எடுப்பார்.

    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சி ரீதியாக இல்லாமல் ஆட்சி ரீதியாக பா.ஜனதா கட்சி உதவி செய்யும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    ×