என் மலர்tooltip icon

    ஈரோடு

    அ.தி.மு.க அணிகள் பேச்சுவார்த்தை நன்மை ஏற்படும் வகையில் நல்ல முடிவு ஏற்படும் என பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தது. பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் எம்.எல்.ஏக்களும் சென்னை வரும்படி அவசர அழைப்பு அனுப்பப்பட்டது . இதையொட்டி அவர்கள் சென்னை சென்றனர்.

    முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலமும் சென்னை சென்றார்.

    அவர் இன்று மாலை மலர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலையை சட்டமன்ற உறுப்பினர்களாக நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    நாட்டுக்கும்,வாக்களித்த தொகுதி மக்களின் நலனுக்காகவும், நன்மை ஏற்படும் விதத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு ஏற்ப எங்களின் முடிவு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்க முடிவு செய்திருப்பது தொடர்பாக அவரிடம் கேட்ட போது இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறினார்.

    தோப்பு வெங்கடாச்சலம் எம். எல்.ஏ ஏற்கனவே மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் இப்போது நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றினால் தான் வருகிற உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சென்னை சென்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசும், பவானி சாகர் தொகுதி எம்.எல்.ஏ ஈஸ்வரனும் நேற்று சென்னை செல்லவில்லை.

    இவர்கள் இருவரும் இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.
    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப காற்று அனலாக வீசினாலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி-மின்னலுடன் மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. சத்தியமங்கலத்தில் லேசான மழை பெய்தாலும் பலத்த காற்று வீசியதால் மேலும் பல்வேறு மரங்கள் சாய்ந்தது. ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தது.

    அதே சமயம் வனப் பகுதிகளான பண்ணாரி, திம்பம், ஆசனூர், கோட்டாடை, அரேப்பாளையம், மாவநத்தம், தலமலை பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வனப்பகுதி முழுவதும் புத்துயிர் பெற்று வருகிறது. வனவிலங்குகளுக்கு தண்ணீர் பஞ்சமும் தீர்ந்து உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணை பகுதியில் 52 மி.மீ.மழையும் குண்டேரிப்பள்ளம் அணையில் 65 மி.மீ மழையும் கோபியில் 36 மி.மீ மழையும் பெய்தது.
    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதில் 50 வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தன.
    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. மாலை 6 மணி வரை வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது.

    நேற்றும் இதேபோல் வெயில் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென வானில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தன. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி-மின்னலுடன் மழை கொட்டியது.

    அரச்சலூரிலும் நேற்று பகல் வெயில் சுட்டெரித்தது மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் ஐஸ் கட்டி மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னல் மற்றும் சூறாவளி காற்றும் சேர்ந்து அடித்ததால் அரச்சலூர் பகுதி மக்கள் பீதி அடைந்தனர். பொதுமக்கள் மீது ஐஸ்கட்டிகள் விழுவது போல் பெரிய.. பெரிய மழை துளிகள் விழுந்தது.

    அரச்சலூர் அடுத்த வினோபா நகர் பகுதியில் சுழற்றி..சுழற்றி அடித்த சூறாவளி காற்றால் 50 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. இதில் 20 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. வீடுகளை இழந்த பொதுமக்கள் மிகவும் தவித்தனர். நேற்று முழுவதும் விடிய-விடிய தூக்கம் இல்லாமலும் தவித்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள 15 மின்கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தடைபட்டது. அதிர்ஷ்டவசமாக யார் மீதும் மின் கம்பங்கள் விழவில்லை.

    இதேபோல் அரச்சலூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரங்களும் முறிந்து விழுந்தது. ஒரே நாளில் அதுவும் 30 நிமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அரச்சலூர் பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் உள்ளனர். மீட்பு பணிகள் இன்று துரிதமாக நடந்து வருகிறது.
    கடந்த ஆண்டு இருகரைகளையும் தொட்டு சென்ற காவிரி ஆற்றின் வறண்ட நிலையை கண்ட பக்தர்கள் மனம் வேதனைப்பட்டு செல்வதையும் பார்க்க முடிந்தது.
    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் குடகுமலையில் உருவாகி மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கிருந்து தமிழகத்தை வளம்கொழிக்க பாய்ந்து வரும் ஆறு காவிரி ஆறு.

    சேலம் மாவட்டத்தில் முதலில் தவழ்ந்து ஈரோடு மாவட்டமான நெரிஞ்சிப்பேட்டை எல்லைக்கு வந்து படர்ந்து விரிந்து வருகிறது. இந்த காவிரி ஆறு.

    பவானியை வந்தடைந்ததும் அங்கு பவானி ஆறும் காவிரியுடன் இணைந்து ஈரோடு கொடுமுடி வழியாக கரூர், திருச்சி சென்று தஞ்சையையும் வளம் கொழிக்க பாய்ந்து செல்கிறது காவிரி ஆறு. இப்படி தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் காவிரி ஆற்றின் இன்றைய நிலை பார்ப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

    ஈரோடு கருங்கல் பாளையத்தில் இரு கரைகளையும் தொட்டும் செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் முற்றிலும் வறண்டு போய் வெறும் பாறைகளாகத்தான் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே சிறிய சிறிய பள்ளத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ஈரோடு மொடக்குறிச்சி அருகே பழமைவாய்ந்த நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. பாய்ந்து வரும் காவிரி ஆற்றின் மத்தியப் பகுதியில் இந்த கோவில் உள்ளது. மண்ணால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அகத்திய முனிவர் வழிபட்ட தலமாக இக்கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஆற்றின் மையப்பகுதியில் இருப்பதால் ஆற்றின் இக்கரையில் உள்ள ஈரோடு மாவட்ட பக்தர்களும் அக்கரையில் உள்ள நாமக்கல் மாவட்ட பக்தர்களும் கோவிலுக்கு பரிசல்களில் வந்து விட்டு செல்வார்கள். தமிழ் வருடப்பிறப்பு அன்று நட்டாற்றீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடக்கும். விழாவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் பரிசல்களில் காவிரி ஆற்றை கடந்து வருவார்கள்.


    ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் சென்ற பக்தர்கள் (இது கடந்த ஆண்டு).

    கடந்த ஆண்டு ஆற்றின் இருபுறத்தையும் தொட்டு காவிரி ஆறு சென்றதால் பக்தர்கள் பரிசல்களில் சென்றார்கள். ஆனால் இந்தாண்டோ காவிரி ஆற்றிலும் முற்றிலும் தண்ணீர் கிடையாது. இருகரை வரை வறண்டும் ஆற்றில் உள்ள பாறைகள்தான் தெரிகிறது. இதனால் பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்து நட்டாற்றீஸ்வரை வழிபட்டு சென்றனர்.

    கடந்த ஆண்டு இருகரைகளையும் தொட்டு சென்ற காவிரி ஆற்றின் வறண்ட நிலையை கண்ட பக்தர்கள் மனம் வேதனைப்பட்டு செல்வதையும் பார்க்க முடிந்தது.


    எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டனர் என்னை மறந்து விடு என்று காதலி கூறியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பெருந்துறை:

    கோபி அருகே உள்ள பொயகொடிவோ தேம்பில் காலனி என்ற இடத்தை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் பபின் (வயது 21). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.

    இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற் றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் நிச்சயதார்த்தமும் நடந்து விட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பபின் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனது காதலியிடம் அவர் போனில் கேட்டார். அதற்கு அந்த பெண் நான் நேரில் வந்து இதுபற்றி பேசுகிறேன் என்று கூறினாராம்.

    இதைதொடர்ந்து பபினின் காதலி பெருந்துறை அருகே உள்ள மடத்துப் பாளையத்துக்கு வந்தார். அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள ரோட்டில் பபினும், அந்த பெண்ணும் சந்தித்து பேசினர்.

    அப்போது அந்த பெண் தனக்கு வேறுஇடத்தில் திருமணம் நடக்க போவதாகவும் எனவே, நீங்கள் என்னை சந்தித்து பேசவேண்டாம். நீங்களும் என்னை மறந்து வேறுஇடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த பபின் உன்னை பிரிந்து என்னால் வாழ முடியாது என்று கூறி, தான் தயாராக வைத்திருந்த வி‌ஷத்தை தனது காதலி முன்னே குடித்து விட்டார்.

    உடனே பபின் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அர்ஜுணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் ரேசன் கடையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய செங்கோட்டையன் அ.தி.மு.க அரசு நிச்சயமாக 4¼ ஆண்டு தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வேளாண்மை உற்பதியாளர்கள் விற்பனை சங்க ரேசன் கடையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி பேசியதாவது:-

    தமிழக அரசின் நீண்ட நாள் கனவான ஸ்மார்ட் கார்டு திட்டம் தற்பொழுது நிறைவேறியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் இந்த திட்டத்திற்கு வித்திட்டவர் ஆவார்.

    இதன்மூலம் எந்த தவறும் நடக்காது. இத்திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் யாரையும் ஏமாற்ற முடியாது, ஏமாறவும் முடியாது.

    கல்வித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றபொழுது அரசு சார்பில் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தேன். இதன் மூலம் 3½ லட்சம் மாணவ மாணவிகள் தற்பொழுது பயன்பெற்றுள்ளனர். மேலும் 10வது, 12வது படித்த மாணவ- மாணவிகளும் இந்த வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மூலமாக எதிர்காலத்தில் பொறியாளராகவோ, டாக்டராகவோ படிப்பதற்கு இது பேருதவியாக இருக்கும்.

    இந்த அரசு இருக்குமா? -இருக்காதா? என நிறைய பேர் தங்களது எண்ணங்களை கூறி வருகிறார்கள். அவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை, அதுபற்றி கவலையில்லை. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, இந்த அரசு நிச்சயமாக 4¼ ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். இது உறுதி.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றினால்தான் வரும் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம்.

    முன்னாள் அமைச்சரான இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் அவர் சசிசலா அணியில் இருந்து விலகுவார் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது .

    இந்த நிலையில் இப்போது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல். ஏ. சசிகலா அணிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் பெருந்துறையில் தந்தி டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் வறட்சி இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆற்று பாசனமும், வாய்க்கால் பாசனமும் இல்லாத வறண்ட தொகுதியாகும்.

    ஊத்துக்குளி உள்பட 238 கிராமங்களில் காவிரி குடிநீர் திட்டமே இல்லை என்ற நிலை இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூ.40 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்.

    இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு இருந்த போதும் இந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    பெருந்துறை பகுதியில் காவிரி குடிநீர் திட்டம் மூலம் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. போர்வெல் போட்டாலும் ஆயிரம் அடி கீழே சென்றாலும் கூட தண்ணீர் இல்லை.

    பொது நிதியில் இருந்து எங்கெங்கல்லாம் குடிநீர் இல்லையோ அங்கு ஆழ்த்துளை கிணறு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊராட்சி ஒன்றிய பகுதியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் ஊராட்சி ஒன்றிய நிதிகளை பொறுத்த வரை இன்றைக்கு கூடுதலாக குடிநீருக்கு என்று தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்பது உண்மையிலேயே என்னை போன்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேதனை அளிக்கிறது.

    .
    ஜெயலலிதா அரசு இருக்க வேண்டும், ஜெயலலிதா திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு போய் சென்றடைய வேண்டும் என்பதால் தான் என்னை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் விடுதியில் தங்கி ஜெயலலிதா அரசு நீடிக்க ஆதரவு அளித்தோம்.

    ஜெயலலிதா பெருந்துறையில் வைத்து தேர்தல் அறிக்கை அறிவித்தார். முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பெருந்துறை தொகுதிக்கு 110 விதியின் கீழ் கொடிவேரி குடிநீர் திட்டத்தை அறிவித்தார். அதை செயல்படுத்தி இருந்தால் இன்று கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்து இருக்கலாம். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது ஜெயலலிதா கனவு திட்டமாகும். இதற்காக பரிந்துரை பண்ணியதே ஜெயலலிதா தான். எனவே எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைய வேண்டும் என்பது ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். பெருந்துறைக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தந்தார். பெருந்துறையில் உள்ள நான்கு வழிச்சாலைகளை எல்லாம் ஆறு வழிச்சாலையாக மாற்றி தந்தார்.

    ஆனால் தஞ்சாவூர் தொகுதியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வர முதல்வர் பரிந்துரை செய்வதாக நாங்கள் அறிகிறோம்.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து தான் 8 தொகுதியில் அ.தி.மு.க.வெற்றி வாகை சூடியது.

    வறட்சி காலத்தில் கூடுதல் நிதி ஒதுக்கும் போது தான் என்னை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் என்ன நோக்கத்தோடு வாக்களித்தார்களோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்ற முடியும்.

    நோக்கங்கள் நிறைவேறும் போது தான் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியும் பெற முடியும். உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பொறுத்து தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நாம் சந்திக்க முடியும்.

    மக்கள் திட்டங்கள் நிறைவேற்றினால் தான் நாம் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியும் என்பது என்னை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பவானி அருகே வறட்சி காரணமாக மனவேதனையில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சன்னியாசிபட்டி, கூத்தம்பட்டி, கவுண்டர்வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது60). விவசாய கூலி தொழிலாளி.

    தற்போது மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவுவதால் மாரியப்பனால் விவசாயம் செய்ய முடியாமல் இருந்தார். விவசாய வேலை எதுவும் கிடைக்கவில்லை.

    மேலும் அவர் வங்கிகளிலும் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. வறட்சியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் எதிர்பார்த்தபடி சாகுபடி செய்ய முடிவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார்.

    மேலும் மாரியப்பன் மகனுக்கு இன்னமும் திருமணம் ஆகிவில்லை. இதனால் கடனை எப்படி அடைப்பது? மகனுக்கு எப்படி திருமணம் நடத்தி வைப்பது என்று கடந்த சில நாட்களாக மாரியப்பன் மனவேதனையில் இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியப்பன் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பெண் கொலை வழக்கு தொடர்பாக 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத சப்- இன்ஸ்பெக்டரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் காரப்பாறையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவரது மனைவி பெருமாயி (45).

    ராமசாமிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை பெருமாயி கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ராமசாமி தனது மனைவி பெருமாயியை கட்டையால் தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாயி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து ஈரோடு குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசாமியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜர் ஆகும்படி கொலை வழக்கை விசாரித்த தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. நேற்றும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சங்கருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். வருகிற 10-ந்தேதிக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் படியும் அவர் உத்தரவிட்டார்.

    கோபி பகுதியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பனை மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன.
    கோபி:

    கோபி பகுதியில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியில் 24,750 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நிலையில் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்தானது மிகவும் குறைந்து விட்டது.

    இதனால் இதை நம்பி தடப்பள்ளி, அரக்கன் கோட்டை விவசாயிகள் விவசாயம் செய்து பிழைப்பை நடத்தி வந்தனர். தண்ணீர் இல்லாத காரணத்தினால் இரு வாய்க்கால்களும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    பயிரிடப்பட்டுள்ள சில பயிர்களுக்கு வெளியில் இருந்து லாரி டேங்க் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து இதற்கு ஊற்றி விவசாயத்தை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தடப்பள்ளி பாசனபகுதியில் உள்ள பனை மரங்களே காய்ந்து போய் இருக்கின்ற கொடுமையானது நீடித்துள்ளது.

    பொதுவாக பனை மரங்கள் எந்த காலத்திலும் வறண்டு போகாது. ஆனால் இந்தாண்டு அடிக்கும் வெயிலினாலும், மழை பெய்யாததாலும் பனை மரங்கள் காய்ந்து போய் நிற்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களும், காய்ந்து போய் உள்ளன.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறும்போது, விவசாயத்தை நம்பிதான் பிழைத்து வருகிறோம். இந்த ஆண்டு மழை பெய்யாத காரணத்தினால் இந்த கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்”, என்றனர்,
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி வனப்பகுதியில் பெய்த கோடை மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் பாய்ந்து ஓடியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வெயில் சுட்டெரித்தாலும் மாலை 5 மணிக்கு மேல் மேகக்கூட்டங்கள் சூழ்கிறது. மழை வருவது போல் சூழ்நிலை நிலவினாலும் திடீரென அடிக்கும் சூறாவளி காற்றால் மேகக்கூட்டங்கள் கலைந்து சென்று விடுகிறது.

    நேற்று மாலையும் இதே நிலை ஏற்பட்டது. எனினும் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதியில் ஓரளவு பரவலாக நல்ல மழை பெய்தது.

    இந்த மழையால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் ஓடியது. வனப்பகுதி ‘‘ஜிலீர்’’ என காணப்பட்டது. தாளவாடி பகுதியில் நேற்று 20 மி.மீ. மழை பெய்தது.

    இதேபோல் பெருந்துறை, பவானி உள்பட சில பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. பவானியில் நேற்று 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பமும் தணிந்தது.

    பெருந்துறை பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காஞ்சி கோவில் அருகே சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள தொழிற்பட்டறையின் மேற்கூரைகள் பறந்தன.

    மேலும் காஞ்சிகோவில் பகுதியில் 3 இடங்களில் விளைந்திருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சூறாவளி காற்றில் முறிந்தது. சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.
    அரச்சலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் வறட்சியால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குடங்களுடன் அழையும் காட்சி பரிதாபமாக உள்ளது.

    அரச்சலூர் அருகே உள்ள சில்லாங்காட்ட புதூர் 7-வது வார்டு பகுதியில் பல நாட்களாக குடிக்க தண்ணீர் வரவில்லையாம். இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று பழனி ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அரச்சலூர் போலீசார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சவுந்தரராஜன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விரைவில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினர். மேலும் பொதுமக்களுக்கு உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். சுமார் 45 நிமிடம் சாலை மறியலால் பரபரப்பு நிலவியது.
    ×