என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் சமையல் அறை ஜன்னலை உடைத்து ரூ. 7½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள செட்டிபாளையம் உழவன் நகரை சேர்ந்தவர் அமுதா (வயது 47).

    இவர் ஈரோடு செங்கோடம்பள்ளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கிறார்.

    அமுதா மட்டும் உழவன் நகரில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் அவர் தூங்கிக்கொண்டு இருந்தார்.

    வீட்டின் பின்புறத்தில் தோட்டம் உள்ளது. அந்த வழியாக வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சமையல் அறையின் ஜன்னலை பெயர்த்து எடுத்து அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.

    அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகை, 1½ லட்சம் பணம், பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வந்த வழியாக தப்பி சென்றனர்.

    இன்று காலை எழுந்த அமுதா சமையல் அறையின் ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு இருப்பதையும், பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடப்பதையும், நகை, பணம் கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கொள்ளை போன நகை, பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 7½ லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. இதுபற்றி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் கொள்ளை தொடர்பாக அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பீரோ, கொள்ளையர்கள் உள்ளே நுழைந்த சமையல் அறையின் ஜன்னல் ஆகிய இடங்களில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

    தலைமை ஆசிரியை அமுதா ஏ.சி. அறையில் படுத்து தூங்கியதால் ஜன்னல், பீரோவை உடைக்கும் சத்தம் கேட்காமல் போனது. மேலும் மர்ம கும்பல் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளது.

    கொள்ளையர்களால் உடைத்து பெயர்த்து எடுக்கப்பட்ட ஜன்னல்.

    வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருப்பதை அறிந்து கைவரிசை காட்டி உள்ளனர். எந்த வழியாக வீட்டுக்குள் நுழையலாம் என்று வெகுநாட்கள் அவர்கள் நோட்டமிட்டு கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    சித்தோடு அருகே ரோட்டை கடந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை-சேலம் மெயின் ரோட்டில் சித்தோடு அருகே சென்னிவல்ல கவுண்டர் தோட்டம் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. கடந்த மாதம் 31-ந் தேதி மாலை நடந்த இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும், தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுப்பி வைக்கப்பட்டார்.

    எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரிய வில்லை.

    அவர் மீது மோதிய வாகனம் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்தது அப்பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள் தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பின.

    வெயிலில் தவித்துக் கொண்டிருந்த அந்த பகுதி மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்தது. வெகு நாளைக்கு பிறகு குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியதால் அந்த பகுதி சிறுவர்களுக்கு கொண்டாட்டமாகி போனது.

    அவர்கள் அந்த குளம், குட்டைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். அதேபோல நேற்று அந்த பகுதியை சேர்ந்த சுதீஷ் (வயது 14), சித்தராஜ் (வயது 14) ஆகிய 2 பேரும் அங்குள்ள குட்டையில் குளிக்க சென்றனர்.

    இதில் மாணவன் சுதீஷ் தாளவாடி மாதிரி பள்ளியிலும், சித்தராஜ் தாளவாடியை அடுத்த குட்டன்புரத்தில் உள்ள அரசு பள்ளியிலும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். குளிக்க சென்ற அவர்கள் நேற்று மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பயம் அடைந்த அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

    நண்பர்களிடம் விசாரித்தபோது 2 மாணவர்களும் குளிக்க சென்றதை பெற்றோர் அறிந்தனர். ஆனால் எந்த பகுதிக்கு சென்றனர் என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் மாணவர் சுதீஷ் உடல் தடுப்பணையில் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் அங்கு விரைந்து ஓடினர்.

    மாணவரின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    ஒன்றாக குளிக்க சென்ற மாணவர்களில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதால் இன்னொரு மாணவரும் தடுப்பணையில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர்.


    தடுப்பணையில் மூழ்கிய மாணவன் சித்தராஜ் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

    அவர்களும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலரும் குட்டையில் இறங்கி மாணவன் சித்தராஜ் உடலை தேடி வருகிறார்கள். அந்த மாணவரின் பெற்றோரும், உறவினர்களும் குட்டையின் கரையில் அமர்ந்து கதறி அழுதது பார்ப்போர் மனதை கரைப்பதாக இருந்தது.

    குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்த தகவல் தாளவாடி பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள் தண்ணீரால் நிரம்பின.

    வெயிலில் தவித்துக் கொண்டிருந்த அந்த பகுதி மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்தது. வெகு நாளைக்கு பிறகு குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியதால் அந்த பகுதி சிறுவர்களுக்கு கொண்டாட்டமாகிபோனது.

    அவர்கள் அந்த குளம், குட்டைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். அதேபோல நேற்று அந்த பகுதியை சேர்ந்த சுதீப், சித்தராஜ் ஆகிய 2 பேரும் அங்குள்ள குட்டையில் குளிக்க சென்றனர்.

    அவர்கள் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தனர். குளிக்க சென்ற அவர்கள் நேற்று மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பயம் அடைந்த அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

    நண்பர்களிடம் விசாரித் தபோது 2 மாணவர்களும் குளிக்க சென்றதை பெற்றோர் அறிந்தனர். ஆனால் எந்த பகுதிக்கு சென்றனர் என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் பன ஹள்ளி என்ற இடத்தில் உள்ள குட்டையில் ஒரு பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் அங்கு விரைந்து ஓடினர்.

    அவர்கள் சென்று பார்த்த போது குட்டையில் பிணமாக மிதந்தது காணாமல் போன மாணவர்களில் ஒருவர் என்பது தெரியவந்தது. அவரது உடலை குட்டையில் இருந்து அந்த பகுதி பொது மக்கள் மீட்டனர்.


    மாணவரின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    ஒன்றாக குளிக்க சென்ற மாணவர்களில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதால் இன்னொரு மாணவரும் குட்டையில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீஸ் இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர்.

    அவர்களும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலரும் குட்டையில் இறங்கி இன்னொரு மாணவரின் உடலை தேடி வருகிறார்கள். அந்த மாணவரின் பெற்றோரும், உறவினர்களும் குட்டையின் கரையில் அமர்ந்து கதறி அழுதது பார்ப்போர் மனதை கரைப்பதாக இருந்தது.
    விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. நடத்தும் போரட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மைய நூலகம் சார்பில் புத்தகத் தினவிழா இன்று ஈரோடு திண்டலில் உள்ள யூ.ஆர்.சி பழனியம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். செல்வகுமார சின்னையன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராம லிங்கம், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிராமப்புற நூலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டது. இந்த பற்றாக்குறையை தீர்க்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி போதிய பணியாட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாட்டில் 352 நூலகங்கள் சிறந்த நூலகங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களில் ரூ.2 கோடியே 57 லட்சம் செலவில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. நடத்தும் போரட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு கொடுக்க வேண்டும். என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆளும் அரசு எப்போதும் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்படுவதில்லை விதி முறைக்கு உட்பட்டுதான் நடப்பது வழக்கமாக உள்ளது.


    எனவே இந்த போராட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம். எப்போதுமே போராட்டங்களில் அரசு பங்கேற்காது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒரு தேதி முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி மற்றும் குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒரு தேதி முடிவு செய்யப்படும். அந்த தேதியில் இரு அணியிலும் பேச்சு வார்த்தை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கும் என நம்புகிறோம்.

    பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பரிசீலனையில் உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மீண்டும் நாளை அவர் மத்திய அரசை அணுகி வலியுறுத்த உள்ளார்.


    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறினால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    பக்குவமாக பேசி, நிபந்தனைகளை இரு தரப்பினரும் ஏற்று அ.தி.மு.க.வை ஒரே அணியில் இணைக்க வேண்டும் என தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.

    பெருந்துறை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்து விட்டது. இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அணியும், முன்னாள் முதல்- அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினரும் ஒரே அணியில் இணைய பேச்சு வார்த்தை நடந்தது.

    ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் இணைப்பு முயற்சி தோல்வி அடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    2 அணியினர் இடையே நடக்கும் பேச்சு வார்த்தை தொண்டர்கள் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதியும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை வலுபடுத்தவும் எதிரிகளுக்கு சிறு இடம் தராமல் அமைய வேண்டும்.

    தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் திரும்பி சென்றவர்களிடம் சுமூகமாக பேசி நல்ல கருத்தை ஏற்கும் விதத்தில் இரு தரப்பினை சேர்ந்த மூத்த தலைவர்கள் செயல்பட வேண்டும்.

    இது தொண்டர்களின் விருப்பமும், கட்சியில் விசுவாசமிக்க எங்களை போன்றவர்களின் விருப்பமும் ஆகும். நிபந்தனைகளை இரு தரப்பினரும் பக்குவமாக பேசி கட்சிக்கு தேவைப்படும் நியாயமான கருத்தை ஏற்று முடிவு எடுக்க வேண்டும்.


    இரு தரப்பினரும் வேறு பாடுகளை மறந்து எதிரிகளுக்கு ஒரு சிறிய இடமும் தராமல் செயல்பட்டு அ.தி.மு.க. என்ற ஒரே கட்சியை ஒரே அணியை கொண்டு வர வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து அம்மா வழியில் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.

    ஈரோட்டில் கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு, வீரப்பன்சத்திரம், முல்லைவீதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது65). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). பெரியசாமி கட்டிட வேலைக்காக அவ்வபோது வெளியூருக்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்ப்பது வழக்கம்.

    அதே போன்று கடந்த மாதம் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று விட்டார். அதற்கு பிறகு அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. வீரம்மாள் தனது கணவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து வீரம்மாள் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தறுமாறு புகார் செய்தார். அதன்பேரில் வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெரியசாமியை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் பரவுகிறதா? என்று மருத்துவ குழுவினை சேர்ந்த 1100 பேர் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி கண்காணித்து வருகிறார்கள்.
    ஈரோடு:

    கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி மருத்துவ குழுவினர் கொடுமுடி பகுதிக்கு விரைந்து உள்ளார்கள். சரவணன் டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக இறந்தாரா? என்பது பற்றி அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது பற்றி சுகாதார துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறியதாவது-

    கொடுமுடியை சேர்ந்த சரவணன் பழனி கோவிலுக்கு பாத யாத்திரை சென்றுவிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு காய்ச்சலுடன் வேறு நோய்களும் இருந்து உள்ளது அதற்காக அவர் சிகிச்சை பெற்று உள்ளார். எனவே அவர் டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை.

    ஈரோடு மாவட்டத்தில் காய்ச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    இது தவிர மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் மருத்துவ குழுவினை சேர்ந்த 1100 பேர் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி கண்காணித்து வருகிறார்கள்.

    இது வரை ஈரோடு மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.

    இவவாறு அவர் கூறினார்.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதையில் சென்ற கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் வந்த 2 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலை உச்சியை அடைய 27 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இந்த வழியாகத்தான் கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முடியும்.

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ரெஜின் மற்றும் கோபாலன் ஆகிய 2பேர் ஒரு காரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    இவர்கள் சென்ற கார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை தாண்டி திம்பம் மலைப்பாதை 22-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது காரின் முன்பகுதி திடீரென தீ பிடித்து குபு..குபுவென எரிந்தது. இதை கண்ட காரில் இருந்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மலைப்பாதை பள்ளத்தில் விழுந்து விடாமல் ஓரமாக காரை நிறுத்திய அவர்கள் 2 பேரும் காரிலிருந்து கீழே குதித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இது பற்றி ஆசனூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்த காரின் தீயை அணைத்தனர். எனினும் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது.

    என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ஓடும் காரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பரபரப்பும் ஏற்பட்டது.

    இது பற்றி ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கரிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சவீதா பிரியா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

    சவீதா பிரியா சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்தார். கடந்த 2½ மாதத்துக்கு முன்பு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டு ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு சவீதா பிரியா வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொண்டார். குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சவீதா பிரியா பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சவீதா பிரியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பாராம். இதை அவரது கணவர் கண்டித்தார்.இது தொடர்பாக சவீதா பிரியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட தாம்.

    இதனால் மனம் உடைந்த சவீதா பிரியா இந்த விபரீத முடிவை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம், புளியம்பட்டியில் 3-வது நாளாக பலத்த மழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் வனப் பகுதிகளான திம்பம், ஆசனூர், தாளவாடி, தலமலை, ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

    இந்த மழையால் காய்ந்து போய் கிடந்த வனப்பகுதி முழுவதும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் ஓடுகிறது. இதனால் வன விலங்குகளின் குடிநீர் பஞ்சமும் தீர்ந்துள்ளது.

    இதே போல பு.புளியம்பட்டியிலும் நேற்று இரவு 8 மணிக்கு மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் கனமாக மழை பெய்தது. பவானிசாகரிலும் மிதமான மழை பெய்தது.

    இந்த மழையால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாளவாடி பகுதியில் 30 மி.மீ மழையும் சத்தியமங்கலத்தில் 20 மி.மீ மழையும் பெய்திருந்தது.

    ஈரோட்டில் நேற்று மாலை மழை பெய்வது போல் மேகங்கள் சூழ்ந்து வந்தாலும் காற்று அவற்றை அடித்து சென்றுவிட்டது. இதனால் மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது.
    ×