search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா திட்டங்களை நிறைவேற்றினால்தான் இனி வெற்றி பெற முடியும்: தோப்பு வெங்கடாச்சலம்
    X

    ஜெயலலிதா திட்டங்களை நிறைவேற்றினால்தான் இனி வெற்றி பெற முடியும்: தோப்பு வெங்கடாச்சலம்

    ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றினால்தான் வரும் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம்.

    முன்னாள் அமைச்சரான இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் அவர் சசிசலா அணியில் இருந்து விலகுவார் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது .

    இந்த நிலையில் இப்போது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல். ஏ. சசிகலா அணிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் பெருந்துறையில் தந்தி டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் வறட்சி இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆற்று பாசனமும், வாய்க்கால் பாசனமும் இல்லாத வறண்ட தொகுதியாகும்.

    ஊத்துக்குளி உள்பட 238 கிராமங்களில் காவிரி குடிநீர் திட்டமே இல்லை என்ற நிலை இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூ.40 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்.

    இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு இருந்த போதும் இந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    பெருந்துறை பகுதியில் காவிரி குடிநீர் திட்டம் மூலம் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. போர்வெல் போட்டாலும் ஆயிரம் அடி கீழே சென்றாலும் கூட தண்ணீர் இல்லை.

    பொது நிதியில் இருந்து எங்கெங்கல்லாம் குடிநீர் இல்லையோ அங்கு ஆழ்த்துளை கிணறு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊராட்சி ஒன்றிய பகுதியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் ஊராட்சி ஒன்றிய நிதிகளை பொறுத்த வரை இன்றைக்கு கூடுதலாக குடிநீருக்கு என்று தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்பது உண்மையிலேயே என்னை போன்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேதனை அளிக்கிறது.

    .
    ஜெயலலிதா அரசு இருக்க வேண்டும், ஜெயலலிதா திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு போய் சென்றடைய வேண்டும் என்பதால் தான் என்னை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் விடுதியில் தங்கி ஜெயலலிதா அரசு நீடிக்க ஆதரவு அளித்தோம்.

    ஜெயலலிதா பெருந்துறையில் வைத்து தேர்தல் அறிக்கை அறிவித்தார். முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பெருந்துறை தொகுதிக்கு 110 விதியின் கீழ் கொடிவேரி குடிநீர் திட்டத்தை அறிவித்தார். அதை செயல்படுத்தி இருந்தால் இன்று கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்து இருக்கலாம். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது ஜெயலலிதா கனவு திட்டமாகும். இதற்காக பரிந்துரை பண்ணியதே ஜெயலலிதா தான். எனவே எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைய வேண்டும் என்பது ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். பெருந்துறைக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்து தந்தார். பெருந்துறையில் உள்ள நான்கு வழிச்சாலைகளை எல்லாம் ஆறு வழிச்சாலையாக மாற்றி தந்தார்.

    ஆனால் தஞ்சாவூர் தொகுதியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வர முதல்வர் பரிந்துரை செய்வதாக நாங்கள் அறிகிறோம்.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து தான் 8 தொகுதியில் அ.தி.மு.க.வெற்றி வாகை சூடியது.

    வறட்சி காலத்தில் கூடுதல் நிதி ஒதுக்கும் போது தான் என்னை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் என்ன நோக்கத்தோடு வாக்களித்தார்களோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்ற முடியும்.

    நோக்கங்கள் நிறைவேறும் போது தான் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியும் பெற முடியும். உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பொறுத்து தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நாம் சந்திக்க முடியும்.

    மக்கள் திட்டங்கள் நிறைவேற்றினால் தான் நாம் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியும் என்பது என்னை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×