search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் இறங்கும் விழா
    X

    பண்ணாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் இறங்கும் விழா

    • முதல் தினமும் கம்பம் நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
    • பண்ணாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து குவிந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள்.

    பண்ணாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழாா கடந்த 20-ந்தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது.

    தொடர்ந்து பண்ணாரியம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுபுற கிராமங்களுக்கு ஊர்வலமாக சென்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வலம் வந்த சப்பரம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து கம்பம் சாட்டப்பட்டது. அன்று முதல் தினமும் கம்பம் நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு நடனமாடி வருகின்றனர்.

    விழாவின் முக்கிய திருவிழாவான குண்டம் இறங்கும் விழா நாளை அதிகாலை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு குண்டம் இறங்க தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

    இதற்காக மலைபோல் விறகுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு குண்டம் ஏற்றப்படும். தொடர்ந்து விடிய, விடிய குண்டம் எரியூட்டப்பட்டு அதிகாலையில் குண்டம் இறங்கும் விழா நடைபெறும்.

    இதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி வழிபடுவார்கள்.

    இந்த குண்டம் விழாவில் பங்கேற்க கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, கூட்டு வண்டி, ரேக்ளா வண்டிகளில் பண்ணாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து குவிந்துள்ளனர்.

    அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால் பண்ணாரியம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் வனத்துறையினரும் வனவிலங்குகள் கோவில் அருகே வராமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×