search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடியோ வெளியிட்டு ஊழியர் தற்கொலை- தலைமறைவான ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேரை பிடிக்க வேட்டை
    X

    வீடியோ வெளியிட்டு ஊழியர் தற்கொலை- தலைமறைவான ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேரை பிடிக்க வேட்டை

    • சேலம் அருகே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
    • வீடியோவை பார்த்த உறவினர்கள் இறந்த மணிகண்டனின் சடலத்தை வாங்க மறுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி கல்லாங்குத்து புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31).இவர் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னசீரகாப்பாடியில் உள்ள தாபா ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மணிகண்டன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கெண்டார்.அவரது உடலை அஸ்தம்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மணிகண்டன் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவுசெய்து தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் தான் வேலைபார்த்து வந்த தாபா ஓட்டலில் இருந்து ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டதாக தன்னை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டனர்.

    மேலும் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரும் தற்போது அந்த பணத்தை தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வோம் என்று கூறி மிரட்டுவதாக கூறி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் இறந்த மணிகண்டனின் சடலத்தை வாங்க மறுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மணிகண்டனின் சாவிற்கு காரணமான தாபா ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாகவும், எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை பெற்று சென்ற இறுதி சடங்கு செய்தனர்.

    இந்த நிலையில் மணிகண்டன் தற்கொலை வழக்கை அஸ்தம்பட்டி போலீசார் திருத்தம் செய்தனர். அதில் மணிகண்டன் வேலை பார்த்த தாபா ஓட்டல் உரிமையாளர் பாலாஜி, அசோக், சுரேஷ் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை தேடிய போது 3 பேரும் தலைமறைவானது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க செல்போன் எண்ணை வைத்து போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×