search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்- துரை வைகோ குற்றச்சாட்டு
    X

    திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்- துரை வைகோ குற்றச்சாட்டு

    • கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
    • வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க.வில் உட்கட்சிக்கு உள்ளேயே எழுந்துள்ள அதிருப்தி கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடலாம் என்ற கோரிக்கையாக உருவெடுத்து உள்ளது.

    இது தொடர்பாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு பகிரங்கமாகவே கடிதம் எழுதி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவரே அதிருப்தி அடையும் அளவுக்கு கட்சியின் நிலைமை மாறி இருக்கிறது.

    தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்ட பிறகு கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்ற பொருமல் இருந்து வருகிறது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு வைகோவின் முடிவுகளை எதிர்த்த மாவட்டச் செயலாளர்கள் செவந்தியப்பன் உள்பட 3 பேர் நீக்கப்பட்டார்கள்.

    தற்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் துரை வைகோ ஆதரவாளர்களை வெற்றி பெற செய்ய வேலைகள் நடப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    இப்படி கட்சிக்குள் எழுந்துள்ள மனக்கசப்பும் அதிருப்தியும் வைகோவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் தான் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியை தி.மு.க.வுடன் இணைந்து விடலாம் என்று கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தாங்கள் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டு வரும் நிலை குறித்து விரிவான கடிதங்களை எழுதியிருந்தேன். அதற்கு இன்று வரை தங்களால் பதிலேதும் சொல்ல இயலவில்லையா?

    லட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த தி.மு.க.வில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும் தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.விற்கே சென்றுவிட்டனர்.

    தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் ம.தி.மு.க.விற்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கழக தோழர்கள், தமிழகம் முழுவதும் பழைய கழக உறுப்பினர்களே தங்களை புதுப்பித்து கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதில் கழக தோழர்களிடம் தொய்வும், ஆர்வமும் குறைந்து உள்ளதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பட்ட சிரமங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.

    ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ம.தி.மு.க.வில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டியுள்ளது. இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை ம.தி.மு.க.விற்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலையில், விருதுநகர் மாவட்ட கழகம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அவருக்கே திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்ட கழக தோழர்களிடம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    எந்த அரசியல் கட்சியும் இப்படி பதவி கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றியதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறு மலர்ச்சிக்கு தான் என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க்கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது.

    வைகோவின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட முடிவெடுப்போம் என்று அதிருப்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் துரைசாமியின் கடிதத்துக்கு தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரது கடிதத்தை புறந்தள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    Next Story
    ×