search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை விலை தொடர் சரிவால்  ஒரு மாதத்தில் ரூ.120 கோடி இழப்பு
    X

    முட்டை விலை தொடர் சரிவால் ஒரு மாதத்தில் ரூ.120 கோடி இழப்பு

    • தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    அகில இந்திய அளவில் முட்டைக்கோழி வளர்ப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில், 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் தமிழக சத்துணவு திட்டத்துக்கும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான முட்டை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    என் முட்டை, என் விலை என்ற அடிப்படையில், முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 நாட்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நிர்ணயிக்கப்படும் விலையை அனுசரித்தே, தமிழகத்திலும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

    கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக என்இசிசி நிர்ணயம் செய்து அறிவித்தது. தொடர்ந்து 9-ம் தேதி ரூ.5.20, 11-ம் தேதி ரூ.4.90, 14-ம் தேதி ரூ. 4.60, 16-ம் தேதி ரூ. 4.40, 25-ம் தேதி ரூ. 4.20, நேற்று (1-ம் தேதி) ரூ.4 என முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு ஒரே மாதத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.50 குறைந்துள்ளது.

    மேலும் நெஸ்பேக் என்ற முட்டை மற்றும் பண்ணையாளர்கள் கூட்டமைப்பு, முட்டை கொள்முதல் செய்யும் மொத்த வியாரிகளுக்கு ஒரு முட்டைக்கு 40 பைசா குறைத்து வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.60 மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் என்இசிசி அறிவிக்கும் விலைக்கும், பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் விலைக்கும் பெரிய இடைவெளி உருவாகிறது.

    ஆனால் வியாபாரிகள் விலையைக் குறைத்து வாங்கி சில்லரையில் விற்பனை செய்யும் போது, என்இசிசி விலைக்கும் கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் முட்டை வாங்கும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

    இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள், முட்டை கொள்முதல் விலை தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்–பட்டுள்ளனர். கோழிப்பண்ணைத் தொழிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×