search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தூத்துக்குடியில் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தூத்துக்குடியில் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை

    • மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.
    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஆய்வு கூட்டங்களும் நடத்தி வருகிறார்.

    நாகர்கோவில் பயணம்

    அதன்படி இன்று மதுரைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சாலை மார்க்கமாக அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்படுகிறார். நெல்லை வழியாக செல்லும் அவர் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை சென்றடைகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் புதிய மாநகராட்சி கட்டிடம் திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அதன்பின்னர் மதியம் 2 மணியளவில் காரில் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.

    போலீஸ் பாதுகாப்பு

    இதனையொட்டி விருதுநகர் மாவட்ட எல்கையில் இருந்து குமரி மாவட்ட எல்கை வரையிலும் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்ட எல்கையான ஸ்ரீவைகுண்டம் வட்டம் வசவப்பபுரம் கிராமத்தில் இருந்து மறவன்மடம் வரை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலும் நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×