search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு கடத்திச் சென்ற  2 ¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
    X

    கடலூர் மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு கடத்திச் சென்ற 2 ¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கொண்டு கடத்தி செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது. அதன் பேரில் பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டை பகுதியில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை போலீசார் ராஜா கோவிந்தராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது அவ்வழியாக வேன் ஒன்று வந்து கொண்டி ருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி, வாகனம் மற்றும் அந்த நபரை கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 51). இவர் தனது வேனில் 55 அரிசி மூட்டையில் சுமார் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் இந்த ரேஷன் அரிசியை சேலம் மாவட்டம் தலைவாசல் கோழி பண்ணைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அரிசி மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×