என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: மக்கள் ஏமாற மாட்டார்கள்- வானதி சீனிவாசன் சொல்கிறார்
- நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க பயன்படுத்தி வருகிறது.
- இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பலிகடா ஆக்கினர்.
கோவை.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017 முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது.
ஆனாலும், இந்தி வெறுப்பு, திராவிட இனவாதம் போல, நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக தி.மு.க பயன்படுத்தி வருகிறது.
2021ல் நடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவோம். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும் என தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று நீட்ைட ரத்து செய்வோம் என கூறி மக்களையும், மாணவர்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக மாணவர்களிடம் நீட் நடக்குமா, நடக்காத என்ற குழப்ப மனநிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்" என முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்படியெனில், 2021-ல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது அரசியல் மாற்றம் இல்லையா?
2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும் என்பதெல்லாம் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் தெரியாதா? "திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதன் ரகசியம் எனக்கு தெரியும்" என்று உதயநிதி சொன்னதெல்லாம் மாணவர்களை, மக்களை ஏமாற்றும் நாடகமா?
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இதிலிருந்து நீட் தேர்வை அரசியலாக்கி குளிர்காய நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பலிகடா ஆக்கினர். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஆனால் இந்த முறை தமிழக மாணவர்களும், தமிழக மக்களும் ஏமாற மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






