search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், வருகிற 30-ந் தேதி ஆர்ப்பாட்டம்
    X

    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தஞ்சையில், வருகிற 30-ந் தேதி ஆர்ப்பாட்டம்

    • வேளாண் நிலம் பறிப்புக்காக நில ஒருங்கிணைப்பு சட்டமும் கொண்டு வந்துள்ளார்கள்.
    • செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் ஏற்கனவே இரண்டு சிப்காட் அலகுகள் இருக்கும் போது மூன்றாவது சிப்காட் அலகு தேவையில்லாதது. அங்கு பணிபுரிபவர்களில் 30 சதவீதம் பேர் இந்திக்காரர்கள்.

    மூன்றாவது சிப்காட் அலகுக்காக தமிழ்நாடு அரசு அப்பகுதியில் 3174 ஏக்கரில் விளைநிலங்களை கைப்பற்றுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதில் விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

    பல தரப்பினர் எதிர்ப்புகளுக்குப் பிறகு ஆறு விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை நீக்கினார்கள். ஆனால் பொறியாளரும் தீவிர சாகுபடியாளருமான அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அரசு ரத்து செய்யவில்லை. தற்போது அருள் பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.

    சென்னை- சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக போராடியவர் அருள்.

    அதன் அடிப்படையில் அவர் மீது குண்டர் சட்டத்தை நீக்கவில்லை என தெரிகிறது.

    உடனடியாக அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

    திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்பட்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என கூறியது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அதற்கு நேர் எதிராக செயல்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக வேளாண் நிலங்களை பறிக்கிறார்கள்.

    மேலும் வேளாண் நிலம் பறிப்புக்காக நில ஒருங்கிணைப்பு சட்டமும் கொண்டு வந்துள்ளார்கள்.

    வேளாண்மையை அழித்து தொழிற்சாலைகளை பெருக்குவது கிராமங்கள் அளிப்பதாகும். மிகையான தொழிற்சாலை பெருக்கம் மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும்.

    எனவே நில ஒருங்கிணைப்பு சட்டத்தை நீக்க வேண்டும்.

    செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பறித்த நிலங்களை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 30-ம் தேதி தஞ்சை ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பொருளாளர் மணிமொழியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பழ. ராஜேந்திரன், சாமி கரிகாலன், செயற்குழு வெள்ளாம் பெரம்பூர் துரை ரமேஷ், திருவாரூர் கலைச்செல்வன், ஜெயக்குமார், தமிழ் தேசியப் பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை , இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×