என் மலர்tooltip icon

    கடலூர்

    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விருத்தாசலத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டு அதிரடி விசாரணை நடத்தினார்
    விருத்தாசலம்:

    சேலத்திலிருந்து சென்னைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையை துளையிட்டு மர்மமனிதர்கள் ரூ.6 கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயகவுரி, நாகஜோதி ஆகியோர் அதிரடி விசாரணை நடத்தினர்.

    சேலத்திலிருந்து ரெயில் புறப்பட்ட இடம் இடையில் விருத்தாசலத்தில் நின்ற பகுதி மற்றும் சென்னையில் ரெயில் நின்ற இடம் ஆகிய பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற போலீசாரிடம் விசாரணை நடந்தது. எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இந்தியா முழுவதிலும் இருந்து 14 பிரபல ரெயில் கொள்ளையர்களின் பட்டியலை போலீசார் தயாரித்தனர். அந்த கொள்ளையர்கள் தற்போது எங்கெங்கு உள்ளார்கள் என்று கண்காணித்தனர்.

    கொள்ளை சம்பவம் நடந்த தினத்தில் சேலம், விருத்தாசலம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வடமாநிலத்துக்கு யார்? யார்? செல்போனில் பேசியிருக்கிறார்கள் என்று விவரங்களை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் ரெயில் புறப்பட்ட இடமான சேலத்தில் நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக போலீசார் கருகிறார்கள். கொள்ளையர்கள் அங்கிருந்து விருத்தாசலம் வரை வந்து அங்கு ரெயில் நின்றபோது தப்பி சென்றிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

    சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை டீசல் என்ஜினில் எக்ஸ்பிரஸ் ரெயில் வரும். அதன்பின்னர் என்ஜின் மாற்றப்பட்டு 20 நிமிடம் கழித்து மீண்டும் சென்னை செல்லும்.

    கொள்ளையர்கள் கடந்த 1 மாதமாக விருத்தாசலம் மற்றும் அதைசுற்றியுள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையொட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி, இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் விருத்தாசலத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

    ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ரெயில்வே போலீசார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி, சேலத்திற்கு சென்று விசாரணை நடத்தி விட்டு மீண்டும் விருத்தாசலம் வந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை மேற்கொள்கிறார்.

    சி.பி.சி.டி. போலீசார் விருத்தாசலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கியிருக்கிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபாவிடம் கேட்டபோது விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேகப்படும்படியான சில செல்போன் எண்களை கொண்டு தடயங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றார்.
    குறிஞ்சிப்பாடியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டடார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து என்கிற ரத்தினவேல்(வயது 32).

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த பகுதியில் ரோட்டின் ஓரத்தில் முத்து பிணமாக கிடந்தார். அவரது கை,கால்கள் கட்டப்பட்டிருந்தன.

    இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    முத்துவின் பிணத்தை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்துவை கை, கால்களை கட்டி மர்ம மனிதர்கள் தாக்கி கொலை செய்து விட்டு ரோட்டின் அருகே அவரது பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முத்துவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் முத்துவை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். முத்து மட்டும் வெங்கடாம் பேட்டையில் தனியாக வசித்து வந்தார்.

    பரங்கிப்பேட்டை அருகே சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் குடிநீர் வசதி கேட்டு பெட்டி, படுக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி விடுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.

    விடுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால். அவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை.

    இந்த நிலையில் முதுகலை மாணவர்கள் பெட்டி, படுக்கைகளுடன் விடுதியை விட்டு வெளியேறினர். விடுதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோ‌ஷமிட்டனர்.

    தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார், கோரிக்கைகளை கல்லூரி முதல்வர் மூலம் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
    வேப்பூரில் கள்ளக்காதலன் வீட்டில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள வெண்கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (வயது 20). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்த சுகன்யா தனியாக வசித்து வந்தார். அப்போது சுகன்யாவுக்கும், வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவின் முன்னாள் காதலன் பரமசிவம் என்பவருக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.

    குடும்ப பிரச்சனை காரணமாக தனியே வசித்து வந்த சுகன்யாவை பரமசிவம் தனது வீட்டிலேயே தங்க வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் பரமசிவம் வீட்டில் இல்லாத போது சுகன்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த சுகன்யாவின் தந்தை காமராஜ் வேப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகன்யாவின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடியில் இருந்து 620 டன் பொட்டாஷ், 185 டன் டி.ஏ.பி, 123 டன் காம்ள’ஸ் ஆகிய உரங்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்திறங்கியது.

    விருத்தாசலம்:

    ஆடிமாதம் முடிந்து தற்போது மழைபெய்து வருவதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை ஆரம்பித்துள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தூத்துக்குடி, சென்னை மணலி, ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து யூரியா, உரங்களை இறக்குமதி செய்து வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 620 டன் பொட்டாஷ், 185 டன் டி.ஏ.பி, 123 டன் காம்ள’ஸ் ஆகிய உரங்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்திறங்கியது.

    இந்த உர மூட்டைகளை அங்கிருந்த பணியாளர்கள் லாரிகளில் ஏற்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகள், உரக்கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த போலீஸ்காரரின் உடல் உறுப்புகளான கண், இருதயம், சிறுநீரகம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 33). ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புதுவை மாநில பகுதியான முள்ளோடை அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் இரவு 11.30 மணி அளவில் பழனிவேல் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பழனிவேலுவின் பெற்றோரிடம் பேசினார்கள். அப்போது அவர்கள் பழனிவேல் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக தெரிவித்தனர்.

    அதன்படி நேற்று அவருடைய உடல் உறுப்புகளான கண், இருதயம், சிறுநீரகம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளை குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

    தொடர்ந்து இறந்த பழனிவேலின் உடலை அடக்கம் செய்வதற்காக சென்னையில் இருந்து கடலூருக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் கொண்டு வந்தனர்.

    இது பற்றி பழனிவேல் தந்தை வெங்கடேசன் கூறுகையில், மூளைச்சாவு அடைந்த என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மண்ணில் புதைந்து வீணாகி போவதற்கு பதிலாக, அவருடைய உடல் உறுப்புகளால் சிலர் உயிர் பெற்றால், அவர்களோடு என் மகன் வாழ்வான் என்றார்.

    இறந்த பழனிவேலுக்கு சுஜாதா என்கிற மனைவியும், சிவசுஜித் (3) என்கிற மகனும், சஞ்சனாஸ்ரீ என்கிற 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
    சிதம்பரம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    கடலூர்:

    புதுவை அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரு காரில் சிதம்பரம் சென்றனர். அங்கு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நள்ளிரவில் புதுவைக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் அவர்கள் வந்தபோது கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்ற பனைமரத்தில் மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது.

    காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து புதுச்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டார். காயமடைந்த டிரைவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான 2 பேர் யார்? என்று விபரம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரெயிலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    சேலத்திலிருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஸ்வரி, நாகஜோதி, ஜெயகவுரி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் கடலூர் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் தொடர்ந்து விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். ரெயிலில் கொள்ளை சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், மெயில் சர்வீஸ் ஊழியர்கள் ஆகியோருடன் தொடர் விசாரணை நடத்தினார்.

    மேலும் ஜங்‌ஷன் அருகில் உள்ள வீடுகள், கடைகளில் விசாரணை மேற்கொண்ட அவர் கொள்ளை நடந்த ரெயில் நின்ற முதலாவது பிளாட்பாரத்திற்கு சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விருத்தாசலம் அருகே கணவனை கத்தியால் தாக்கி மனைவியின் தங்க சங்கிலியை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 46). விவசாயி. இவரது மனைவி அரசமதி (40). இருவரும் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் விருத்தாசலம் வந்து காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    கானாதுகண்டான் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து உதைத்து தள்ளி விட்டனர். இதனை எதிர்பாராத ஆறுமுகமும், அரசமதியும் கீழே விழுந்தனர்.

    அப்போது அவர்கள் 3 பேரும் அரசமதியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை ஆறுமுகம் பிடிக்க முயன்றார். அவரை கத்தியால் குத்தினர். இதில் அவர் காயமடைந்தார். பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    உடன் தனது செல்போன் மூலம் கண்டியங்குப்பம் மற்றும் கோட்டேரியில் உள்ள தனது நண்பர்களுக்கு ஆறுமுகம் தகவல் கொடுத்தார். இதனால் கண்டியாங்குப்பம் கிராம மக்கள் திரண்டு வந்து விருத்தாசலம்- காட்டுக்கூடலூர் சாலையை மறித்து நின்றனர். அப்போது மோட் டார் சைக்கிளில் வந்த 3 பேரையும் பொதுமக்கள் பிடிக்க முயன்றனர்.

    அவர்கள் 3 பேரும் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

    ஆத்திரமடைந்த மக்கள் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடிகொடுத்தனர். பிடித்த 3 பேரையும் விருத்தாசலம் போலீசாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களை விருத்தாசலம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார், சேத்தியாதோப்பு அள்ளூர் பகுதியை சேர்ந்த ஜெகன், காட்டுமன்னார்கோவில் மலைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்று தெரிய வந்தது. இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கோட்டேரி மற்றும் பெரியகண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த மக்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஆறுமுகம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    நெய்வேலியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
    நெய்வேலி:

    நெய்வேலிடவுன் 15-வது வட்ட சி.ஐ.எஸ்.எப். குடியிருப்பில் வசித்து வந்தவர் படே(வயது 30). மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர். இவர் என்.எல்.சி. சி.ஐ.எஸ்.எப். யூனிட் உரஆலை தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார், இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில், புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து முயற்சித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், அவரது குடும்பத்தினர் என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே படே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட படேவுக்கு சோனாலி(24) என்ற மனைவியும், பிராச்சி(6) என்ற மகளும், சீனிவாஸ்(4) என்ற மகனும் உள்ளனர். இவரது தாயார் சாயா(50) இவருடன் வசித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அவரது மனைவி சோனாலி டவுன்சிப் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக படே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    ராம்குமாரின் சாவில் மர்மம் உள்ளதால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கடலூரில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

    அவர் சாவில் மர்மம் உள்ளது. மேலும் ராம்குமாரின் பெற்றோர் அவரது வக்கீல் ஆகியோர் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் இதை புறம்தள்ள முடியாது.

    சுவாதி கொலையையும் ராம்குமார் இறந்ததையும் விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும். ராம்குமார் இறந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு போலீசும், உயர்நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவும் விசாரணை நடத்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாமல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும்.

    ராம்குமாரின் பெற்றோர் கூறுகின்ற மருத்துவ குழுதான் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

    அப்போது தடயவியல் நிபுணர்களும் உடன் இருக்க வேண்டும். மேலும் ராம்குமாரின் சாவு தற்கொலை என்று கூறி சுவாதி கொலையில் உள்ள பின்னணியை மூடி மறைக்க முடியாது.

    பேரறிவாளன் சமீபத்தில் சிறையில் தாக்கப்பட்டார். இதில் எதிர்பாராமல் பேரறிவாளன் இறந்திருந்தால் அதனையும் தற்கொலை என்று கூறி போலீசார் மறைத்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது சிறையில் அதிகளவில் நடந்து வருகிறது.

    காஷ்மீரில் 17 ராணுவ வீரர்கள் இறந்தது மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். தற்போது இந்தியா முழுவதும் தலீத் மற்றும் சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை காக்க பிரதமர் தவற விட்டார். அவர்களை பாதுகாக்க வேண்டும்.

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள பாரதிய ஜனதாவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

    இதையடுத்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தால் ரூ.25 ஆயிரம் கோடி வீணாகியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கவேண்டும்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக மேற்பார்வை குழு இன்று கூடுகிறது. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று தான் வருகிறது.

    இந்தநிலையில் சம்பா சாகுபடிக்கு 52.5 டி.எம்.சி.தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவார்கள். ஆனால் தற்போது இடைக்கால தீர்ப்பின்படி 12 டி.எம்.சி. தண்ணீரை தான் திறந்துள்ளார்கள். இதனால் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு கடந்தமுறை திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவைப்போல் இந்த ஆண்டும் திறந்து விட வேண்டும் என்று காவிரி பிரச்சனை தொடர்பாக இன்று நடைபெறும் மேற்பார்வை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் அருகே பஞ்சாயத்து ஊழியரின் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்ம கும்பல் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் எம்.பி. அகரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), பஞ்சாயத்து ஊழியர்.

    நேற்று இரவு இவர் தனது மனைவி ஷீலா (25), தாய் நாகரத்தினம் (60), 3 மாத கைக்குழந்தை வைஷ்ணவி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டுமுன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தார்.

    நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். சரவணன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலாகின. பின்னர் அந்த தீ வீடு மீதும் பற்றியது. இதனால் அந்தபகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமானது.

    வீட்டில் தூங்கி கொண்டிருந்த சரவணன் திடுக்கிட்டு எழுந்தார். மனைவி, மகள், தாய் ஆகியோருடன் அவர் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இது குறித்து தூக்கணாம் பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பஞ்சாயத்து ஊழியரின் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்ம கும்பல் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    ×