search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் கொள்ளையர்கள் பதுங்கல்? சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணை
    X

    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் கொள்ளையர்கள் பதுங்கல்? சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணை

    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விருத்தாசலத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டு அதிரடி விசாரணை நடத்தினார்
    விருத்தாசலம்:

    சேலத்திலிருந்து சென்னைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையை துளையிட்டு மர்மமனிதர்கள் ரூ.6 கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயகவுரி, நாகஜோதி ஆகியோர் அதிரடி விசாரணை நடத்தினர்.

    சேலத்திலிருந்து ரெயில் புறப்பட்ட இடம் இடையில் விருத்தாசலத்தில் நின்ற பகுதி மற்றும் சென்னையில் ரெயில் நின்ற இடம் ஆகிய பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற போலீசாரிடம் விசாரணை நடந்தது. எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இந்தியா முழுவதிலும் இருந்து 14 பிரபல ரெயில் கொள்ளையர்களின் பட்டியலை போலீசார் தயாரித்தனர். அந்த கொள்ளையர்கள் தற்போது எங்கெங்கு உள்ளார்கள் என்று கண்காணித்தனர்.

    கொள்ளை சம்பவம் நடந்த தினத்தில் சேலம், விருத்தாசலம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வடமாநிலத்துக்கு யார்? யார்? செல்போனில் பேசியிருக்கிறார்கள் என்று விவரங்களை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் ரெயில் புறப்பட்ட இடமான சேலத்தில் நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக போலீசார் கருகிறார்கள். கொள்ளையர்கள் அங்கிருந்து விருத்தாசலம் வரை வந்து அங்கு ரெயில் நின்றபோது தப்பி சென்றிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

    சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை டீசல் என்ஜினில் எக்ஸ்பிரஸ் ரெயில் வரும். அதன்பின்னர் என்ஜின் மாற்றப்பட்டு 20 நிமிடம் கழித்து மீண்டும் சென்னை செல்லும்.

    கொள்ளையர்கள் கடந்த 1 மாதமாக விருத்தாசலம் மற்றும் அதைசுற்றியுள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையொட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி, இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் விருத்தாசலத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

    ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ரெயில்வே போலீசார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி, சேலத்திற்கு சென்று விசாரணை நடத்தி விட்டு மீண்டும் விருத்தாசலம் வந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை மேற்கொள்கிறார்.

    சி.பி.சி.டி. போலீசார் விருத்தாசலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கியிருக்கிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபாவிடம் கேட்டபோது விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேகப்படும்படியான சில செல்போன் எண்களை கொண்டு தடயங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றார்.
    Next Story
    ×