என் மலர்
கடலூர்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் டிப்ளமோ மருந்தியல் படிக்கும் மாணவிகள் 150 பேர் பல்கலைகழக வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்லி விடுதியில் தங்கி உள்ளனர். விடுதியில் கழிவறை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டவில்லை.
இதையொட்டி இன்று காலை அந்த மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். கல்லூரியை புறக்கணித்துவிட்டு அவர்கள் விடுதி முன்பு திரண்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் விடுதி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் உத்தரவின்பேரில் துறை தலைவர்கள் விரைந்து சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவர் பண்ருட்டி லிங்க் ரோட்டில் ஓட்டல் வைத்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவர் பெருமாளிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.8 லட்சத்தை பெற்றுக்கொண்டார்.
ஆனால் முஜிபுர் ரகுமான் சொன்னபடி வேலை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து அவரிடம் பெருமாள் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
சம்பவத்தன்று முஜிபுர் ரகுமான் வீட்டுக்கு பெருமாள் சென்றார். அவரிடம் தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முஜிபுர் ரகுமானின் குடும்பத்தினர் பெருமாளை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் செய்தார். புகாரின்பேரில் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் கமல், மதினாபேகம், ரகிமா பீவி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கல்லிப்பாடி மற்றும் நெடுஞ்சேரி ஆகிய பகுதிகளில் 16.7.2011-ல் அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டது.
கட்சித்தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு அந்த சிலைகளை திறந்து வைத்தார்.
கல்லிப்பாடி மற்றும் நெடுஞ்சேரி பகுதிகளில் அனுமதியின்றி அம்பேத்கார் சிலைகளை திறந்து வைத்து மரியாதை செலுத்தியதாக திருமாவளவன் உள்பட 12 பேர் மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார்.
இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்2-ல் நடைபெற்று வருகிறது. நீதிபதி அறிவு விசாரணை நடத்தி வந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. திருமாவளவன் உள்பட 11 பேர் மதியம் 12.30 மணிக்கு ஆஜரானார்கள்.
இந்த வழக்கில் திருமாவளவன் உள்பட 11 பேரை விடுதலை செய்து நீதிபதி அறிவு தீர்ப்பு கூறினார்.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்பேத்கார் சிலைக்கு அனுமதியின்றி மாலை அணிவித்ததாக எங்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளோம். நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீடு குறித்து 30-ந்தேதி உறுதி செய்யப்படும்.
போட்டியிடும் இடங்களில் 1-ந்தேதி முதல் 3-ந் தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டில் திருமாவளவன் ஆஜரானதையொட்டி விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராள மானோர் திரண்டிருந்தனர். அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெட்டிவேர் பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், மகசூலை அதிகப்படுத்தவும் மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கடலூர் மாவட்டம் நொச்சிக்காட்டில் வெட்டி வேர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கலந்துரையாடல் விவரம் வருமாறு:-
பிரதமர் நரேந்திர மோடி:- கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்துள்ளர்கள்.
விவசாயி:- கடலில் இருந்து 200 மீட்டர் முதல் 4 கிலோ மீட்டர் வரையிலும் சாகுபடி செய்துள்ளோம்.
மோடி:- வெட்டிவேருக்கு எவ்வாறு தண்ணீர் பாய்ச்சுகிறீர்கள்.
விவசாயி:- விவசாய கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறோம்.
மோடி:- ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்காமல், விவசாயத்துக்கு பயன்படுத்துங்கள். வெட்டிவேர் என்ற பெயரை மாற்றலாமா? புதிய உயர் ரகங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டு வெட்டிவேர் சாகுபடி செய்து நல்ல மகசூலை பெறுங்கள்.
விவசாயி:- நீங்களே வெட்டிவேருக்கு நல்ல பெயரை வையுங்கள்.
இவ்வாறு கலைந்துரையாடல் நடைபெற்றது.
வெட்டி வேர் ஒரு சிறந்த நறுமண தாவரம். இதன் வேரில் இருந்து பெறப்படும் நறுமண எண்ணெய், வாசனை திரவியங்கள், சோப்பு, சுவிங்கம், குளிர்பானங்கள் போன்றவை தயாரிப்பதற்கு பயன்படுகிறது. மருத்துவ தொழிலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேரின் மூலம் பல்வேறு கைவினை பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ரெட்டியார். இவருக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமான சவுக்குமரங்கள் இருந்தன.
நேற்று மாலை சவுக்குமரங்களுக்கு மேலே சென்ற மின்கம்பிகள் உரசியதால் தீப்பொறி பறந்தன. இதனால் அந்த மரங்கள் தீ பிடித்து எரிந்தது. 2 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சவுக்குமரங்கள் எரிந்து சாம்பலாகின.
இதேபோல் அதே பகுதியில் உள்ள அருணாசலம் என்பவருக்கு சொந்தமான சவுக்குமரங்களிலும் தீ பற்றியது. சிறிது நேரத்தில தீ அந்த பகுதி முழுவதும் பரவியது. இதில் அங்கிருந்த 2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சவுக்குமரங்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் ரூ.10 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் இருந்து நெல்லிக்குப்பத்துக்கு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் பிரதாப்(வயது 27) ஓட்டினார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் இரவு 10.30 மணிக்கு நெல்லிக்குப்பம் வந்தது. வயிடப்பாக்கத்தில் பஸ் திரும்பியபோது 10 பேர் கொண்ட கும்பல் திடீரென்று பஸ்சை வழிமறித்தது. பஸ் நின்றதும் கத்தி, அரிவாள், தடி போன்ற ஆயுதங்களால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தது.
இதைப்பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பஸ் டிரைவர் பிரதாப், மற்றும் கண்டக்டர் குமரேசன்(30) ஆகியோர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தனர். பஸ் கண்ணாடியை உடைத்தவர்களை தடுக்க முயன்றனர்.
உடனே அவர்களையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் பிரதாப், குமரேசன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். பின்னர் அந்த கும்பல் பஸ்சின் பின்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த பிரதாப், குமரேசன் ஆகிய இருவரையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பஸ்மீது தாக்கிய மர்ம கும்பல் யார்? எதற்காக தாக்கினார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பண்ருட்டியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நடிகர் நெப்போலியன் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆஜர் ஆனார்.
ராமதாஸ் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நடிகர் நெப்போலியன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்றும், நாளையும் நெய்வேலியில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிலைப்பாடு, கூட்டணி அமைக்கப்படுமா? யாருடன் கூட்டணி? ஆகியவை குறித்து நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நகர செயலாளர் ராஜமூர்த்தி, ஒன்றியசெயலாளர்கள் சிவக்குமார், சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாலமுருகன், வக்கீல் செல்வராஜ், நகரசெயலாளர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.
நெய்வேலி:
நெய்வேலி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு வேலை நிறுத்தம், பிக்அப் வாகனத்தை மறித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் இன்று காலை ஈடுபட்டனர்.
என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நியூ சர்போஸ் பெஞ்ச் பிரிவை சேர்ந்த 208 தொழிலாளர்கள், லிக்னைட் பெஞ்ச் பிரிவை சேர்ந்த 52 தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பணி நாட்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் 7 தினங்கள் குறைப்பதற்கான நடவடிக்கையை சுரங்க நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதைஅறிந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இன்று காலை முதலாவது (ஷிப்ட்)பணிக்கு சென்றவர்கள் பணிகள் ஏதும் செய்யாமல், உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மனித வளத்துறை பொது மேலாளர் ஞானசேகரன், அங்கு விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
பிரச்சினை குறித்து சுரங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், பின்னர் பணிநாட்கள் தொடர்பான விஷயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தினை கைவிட்டனர்.
இதனால் இன்று காலை இரண்டாவது சுரங்கத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள காளியாமேடு பகுதியில் கருப்பையா கோவில் உள்ளது. இந்தகோவில் மிகவும் பழமையானது. வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்
கடலூர், விழுப்புரம், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். நேர்த்திக்கடனாக பக்தர்கள் வெண்கலமணியை வழங்குவார்கள். இந்த மணிகள் கோவிலின் முன் கட்டித்தொங்க விடப்பட்டிருந்தன.
இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு அங்கு வந்தனர். கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்தனர். கோவில் முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் கோவிலில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த 70 மணிகளை அறுத்தெடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் கொள்ளை நடத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கோவிலில் கொள்ளையடித்த மர்மமனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வேப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 3 கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
தற்போது 4-வதாக கோவிலில் கொள்ளை நடந்துள்ளது. தொடர்ந்து கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
சுரேஷ் வீட்டின் அருகே வசித்து வருபவர் கார்த்தி (24). இவருக்கும், லட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது சுரேசுக்கு தெரிய வந்தது. அவர்களை சுரேஷ் கண்டித்தார்.
இதனால் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு லட்சுமியும், கார்த்தியும் வீட்டில் இருந்து வெளியேறி சிதம்பரம் அருகே உள்ள கொத்தன்குடி பகுதியில் வசித்து வருகின்றனர். சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கார்த்தி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்தியுடன் வசித்து வரும் லட்சுமி, தனது கணவர் சுரேசிடம் சென்று, ஜீவனாம்சம் தொகை தரும்படி கேட்டார். இதனால் சுரேஷ் மன வேதனை அடைந்தார்.
இது குறித்து அவர் தனது உறவினரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வரும் தண்டபாணி என்பவரிடம் கூறினார்.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு கார்த்தியை சந்தித்து தண்டபாணி கண்டித்தார். இதனால் அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டன
இது தொடர்பாக கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்தனர்.
தண்டபாணி தன்னை கண்டித்ததால் கார்த்தி ஆத்திரம் அடைந்தார். அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதற்கான நேரம் பார்த்து காத்திருந்தார்.
நேற்று இரவு தண்டபாணியும், அவரது நண்பரும், மினி லாரி டிரைவருமான செல்வமும் (40) சிதம்பரம் வண்டிமேடு பகுதிக்கு டீ குடிக்க வந்தனர்.
டீ குடித்து விட்டு அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது காரில் 5 பேர் அங்கு வந்தனர். திடீரென்று அவர்கள் காரில் இருந்து வீச்சரிவாளுடன் கீழே இறங்கினர்.
தண்டபாணியை சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டினர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை தொடர்ந்து விரட்டி சென்றனர்.
அவர்களை செல்வம் தடுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரையும் சரமாரியாக வெட்டினர். இந்த தாக்குதலில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த தண்டபாணி, செல்வம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.
தண்டபாணி மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செல்வம் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் வடக்கு தில்லை நாயகபுரத்தில் உள்ள கார்த்தி வீட்டிற்கு விரைந்து சென்றனர். வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். பின்னர் வீட்டுக்கு தீ வைத்தனர்.
அங்கு நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதை தடுக்க வந்த கார்த்தியின் அண்ணன் கதிரையும் அடித்து விரட்டினர்.
இந்த சம்பவம் குறித்து கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் அதிரடி விசாரணை நடத்தினர்.
மினி லாரி டிரைவர் செல்வம் கொலை தொடர்பாக கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிதம்பரம் வடக்கு தில்லை நாயகபுரத்தைச் சேர்ந்த கார்த்தி, அவரது அண்ணன் கதிர், கந்தமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின், உத்தம சோழமங்கலத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், சிதம்பரம் கஸ்பா பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவத்தை தொடர்ந்து வடக்கு தில்லை நாயகபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதி கல்யாணி நகரை சேர்ந்தவர் கணேசன்(வயது 45) விவசாயி. இவர் நேற்று வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டின் முன்பக்க கதவை யாரோ தட்டுவதுபோல் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின்முன் 7 அடி நீளமும், 500 கிலோ எடையும் முள்ள முதலை படுத்து கிடந்தது.
அந்த வழியாக காரில் வந்த சிலரும் ராட்சத முதலையை பார்த்து திடுக்கிட்டனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. அனைவரும் முதலையை பார்த்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். வீட்டுமுன் கிடந்த முதலையை பிடிக்க முயன்றனர். ஆனால் அது அவர்கள் கையில் சிக்காமல் அங்குமிங்கும் ஓடியது.
2 மணிநேரம் போராடி முதலையை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் முதலையை வக்காரமாரி குளத்தில் கொண்டு விட்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த குளத்தில் தற்போது தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் குளத்தில் உள்ள முதலைகள் அங்கிருந்து வெளியேறி கால்வாய் மற்றும் குளங்கள் வழியாக ஊருக்குள் வருகின்றன.
கணேசனின் வீட்டின் அருகில் உள்ள பெரியவாய்க்கால் சேறும், சகதியுமாய் உள்ளது. அங்கிருந்து வந்த முதலைதான் பொதுமக்களை பயமுறுத்தி உள்ளது. வக்காரமாரி குளத்தில் இருந்து வெளியேறும் முதலைகள் சிதம்பரத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி பொதுமக்களை கடித்து குதறி வருகிறது.
இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. பொதுமக்கள் இரவில் நேரங்களில் ரோட்டில் நடந்து செல்ல அஞ்சுகின்றனர். முதலை பீதியினால் பொதுமக்கள் இரவு தூங்காமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வக்காரமாரி குளத்தில் அதிக அளவு தண்ணீர் தேக்க வேண்டும். அங்கிருந்து முதலைகள் வெளியேறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் முதலை பீதி நீங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பண்ருட்டி அருகே உள்ள ஆத்திரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் நெய்வேலியில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு கடையை மூடிவிட்டு மது விற்ற பணம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வரும் வழியில் அதே ஊரை சேர்ந்த செல்வகுமார், அனந்தராமன் ஆகிய 2 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண் டார்.
மோட்டார் சைக்கிள் பேர்பெரியாண்குப்பம் அருகே உள்ள முந்திரி காடு பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது முகமூடி அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து 3 பேரையும் தாக்கினர். பின்னர் செந்தில்குமார் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து செந்தில்குமார் முத்தாண்டிகுப்பம் போலீசுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் வழக்குபதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.






