search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் குழந்தைகள், நண்பர்களுடன்  உற்சாகத்துடன் விளையாடிய போலீசார்
    X

    கோவையில் குழந்தைகள், நண்பர்களுடன் உற்சாகத்துடன் விளையாடிய போலீசார்

    • ஒவ்வொரு போட்டியிலும் போலீசார் தங்களது குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்று விளையாடினர்.
    • மன அழுத்தங்கள் குறைய தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாநகரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பணியாற்றி வருகின்றனர். தினந்தோறும் பணியாற்றி வரும் போலீசாருக்கு உத்வேகத்தை கொடுக்கும் விதமாகவும், மன அழுத்தத்தை குறைக்கவும் விளையாட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் கோவை மாநகரில் பணியாற்றும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டிகள் இன்று நடந்தது.

    கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் உள்ள மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடந்த இந்த விளையாட்டு போட்டியில் போலீசார் தங்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

    ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், பந்துகளை சேகரித்தல், பாட்டில்களில் தண்ணீர் நிரப்புதல், லக்கி கார்னர் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    கயிறு இழுத்தல் போட்டியில் 2 குழுவாக பிரிந்து கொண்டு பங்கேற்றனர். தண்ணீர் நிரப்புதல் போட்டியில் போலீசாரின் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு ஓடி போய் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி தங்களது உற்சாகத்ைத வெளிப்படுத்தினர்.

    இதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் போலீசார் தங்களது குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடந்தது. இதில் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- நாங்கள் நாள் முழுவதும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அதனால் சில நேரங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு சோர்வாக இருப்போம்.

    இந்த நிலையில் இன்று எங்களுக்கு குடும்பத்துடன் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாங்கள் எங்கள் குழந்தை, மனைவி, நண்பர்களுடன் சேர்ந்து விளையாடியது எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்களுக்குள் இருந்த மன அழுத்தங்களும் குறைந்துள்ளது.எங்களது குழந்தைகளுக்கும், புதிதாக நண்பர்கள் கிடைத்துள்ளனர். பெண் போலீசாரும் வீடு மற்றும் வேலை என்றே இதுவரை இருந்து வந்தனர். அவர்களுக்கு இந்த விளையாட்டு போட்டி மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களிலும் இவ்வாறான விளையாட்டு போட்டிகள் நடத்தினால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் கோவை மாநகர ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் சேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதாப்சிங் மற்றும் போலீசார் அவர்களது குடும்பத்தார் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×