search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 34 மையங்களில், காவலர்களுக்கான தேர்வு - நீண்ட வரிசையில் நின்று மையத்திற்குள் சென்ற தேர்வர்கள்

    • தமிழகம் முழுவதும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
    • நெல்லை மாவட்ட காவல்துறை எழுத்து தேர்வு சிறப்பு மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரியான நெல்லை சரக டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் ஆண் விண்ணப்பதாரர்கள் 11,521 பேர், பெண் விண்ணப்பதாரர்கள் 2,920 பேர், திருநங்கை ஒருவர் என மொத்தம் 14,442 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநகர பகுதியில் 10 மையங்களிலும், மாவட்டத்தில் 6 மையங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.40 மணிக்கு முடிவடைந்தது.

    இதனையொட்டி தேர்வர்கள் அனைவரும் 9.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தேர்வர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    508 போலீசார் பாதுகாப்பு

    மாநகர பகுதியில் பெரும்பாலான மையங்களில் தேர்வர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஒரு சில மையங்கள் முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. நெல்லை மாவட்ட காவல்துறை எழுத்து தேர்வு சிறப்பு மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரியான நெல்லை சரக டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

    இதற்காக 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 8 உதவி மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், 17 இன்ஸ்பெக்டர், 82 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 508 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 9,388 ஆண்கள், 2249 பெண்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 11,641 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒரு சிலருக்கு தேர்வுக்கூட சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாமல் இருந்தது.

    இதையடுத்து அவர்கள் தங்களது வேறு புகைப்படத்தினை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று சென்றனர். ஹால் டிக்கெட் கொண்டு வராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    தேர்வு தொடங்கிய பின்னர் வந்தவர்கள் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சில இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. செல்போன், கால்குலேட்டர் மற்றும் ப்ளுடூத் போன்ற எலக்ட்ரானிக்கருவிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு 11, 818 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு திருநங்கையும் அடங்குவார்.

    மாவட்டம் முழுவதும் தேர்வையொட்டி மையங்களில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள், 126 சப்-இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    Next Story
    ×