என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்- மனித சங்கிலி போராட்டம்
- சாலையில் இரு கைகளையும் கோர்த்து நின்றபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஈரோடு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஈரோடு மூலப்பாளையத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலையில் இரு கைகளையும் கோர்த்து நின்றபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள், வட்டார தலைவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நாளை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தெற்கு மாவட்ட காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.






