என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் காங்கிரசார் வாயில் கருப்பு துணி கட்டி மவுன அஞ்சலி போராட்டம்
- தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மவுன அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மவுன அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத், வார்டு கவுன்சிலர் ஈ.பி.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, அரவிந்தராஜ், பாபு என்கிற வெங்கடாசலம், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜீபைர் அகமது, பொதுச்செயலாளர் கனகராஜ், வின்சென்ட், சாகுல் ஹமீது, கராத்தே புஷ்பர், சேவா தள தலைவர் முகமதுயூசப், சிறுபான்மை பிரிவு பாஷா உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






