search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கலெக்டர் பாராட்டு
    X

    தஞ்சை தாரகைகள் மதி அங்காடியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கலெக்டர் பாராட்டு

    • ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
    • சுய உதவிக்குழு பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பணி நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மதி அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் முதல் கட்டமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சாவூர் மாநகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை மதி அங்காடியை திறந்து வைத்தார்.

    இந்த விற்பனை அங்காடியின் செயல்பாடுகள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மனதார பாராட்டினார்.

    இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மேலும் 4 இடங்களில் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது.

    தற்போது இந்த 5 தஞ்சை தாரகைகள் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பூ மாலை வணிக வளாகத்தில் செயல்படும் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடிக்கு சென்றார்.

    அங்கு பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினரை பாராட்டினார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் முதன்முதலாக தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.25,94,106-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து இரண்டாம் கட்டமாக புவிசார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக இந்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய ரயில் நிலையங்களில் ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் என்ற திட்டத்தின் கீழ் தற்காலிக அங்காடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த அங்காடி மூலம் தற்போது வரை ரூ.11,26,130 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    மூன்றாம் குட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பழமையான கல்லணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது.

    தற்போது வரை ரூ.6,11,619 வரை மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நான்காம் கட்டமாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மதி அங்காடியை பழுது நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி புதுப்புலியுடன் தஞ்சை தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை ரூ.7,60,807-க்கான மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    5-ம் கட்டமாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் கடந்த ஜனவரி 14-ம் தேதி புதிய விற்பனை மையம் தொடங்கப்பட்டது.

    இன்று வரை அதில் ரூ.98,610-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இப்படி 5 தஞ்சை தாரகைகள் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . தொடர்ந்து இவற்றின் மதிப்பு அதிகரிக்கும்.

    மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அவர்களாலேயே சந்தை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் விதவைப் பெண்கள், கணவரால் கைவிட்ட பெண்கள் உள்ளிட்ட பல பெண்கள் வாழ்வில் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக கைவினை பொருட்கள் விற்பனை அங்காடி தொடங்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தை வாய்ப்பு, சுய உதவி குழு பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் மையப்படுத்தி இந்த பணி நடந்து வருகிறது.

    ரூ.51 லட்சத்தை தாண்டி பொருட்கள் விற்பனை செய்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், உதவி திட்ட அலுவலர் ஆசீர்வாதம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×