என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் குடோன் உரிமையாளரை கட்டிப்போட்டு  இரும்பு கம்பிகள், சி.சி.டி.வி காமிராக்கள் கொள்ளை
    X

    கோவையில் குடோன் உரிமையாளரை கட்டிப்போட்டு இரும்பு கம்பிகள், சி.சி.டி.வி காமிராக்கள் கொள்ளை

    • கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும்.
    • சிங்காநல்லூர் போலீசார் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகளான 13 பேரையும் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் உலக நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது51).

    இவர் அந்த பகுதியில் சொந்தமாக இரும்பு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் முத்தையா இரும்பு குடோன் வைத்துள்ள இடத்தை அந்த இடத்தின் உரிமையாளர் விற்பதற்கு முடிவு செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து முத்தையா, இடத்தின் உரிமையாளரான பிரபுவை தொடர்பு கொண்டு, தானே இந்த இடத்தை வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். இடத்தின் உரிமையாளரும் இதற்கு சம்மதித்தார்.

    அதன்படி இடத்தை வாங்குவதற்காக முத்தையா, இட உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் முன்பணமும் கொடுத்தார். இதையடுத்து இடத்தை பத்திரம் எழுதி தருமாறு கூறினார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட நிலத்தின் உரிமையாளர் அதன்பிறகு இடத்தை எழுதி கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் முத்தையா, நிலத்திற்கு நான் பணம் கொடுத்து விட்டேன். இடத்தை என் பெயருக்கு எழுதி தாருங்கள் என வற்புறுத்தி வந்தார். இதனால் முத்தையா மீது இடத்தின் உரிமையாளருக்கு கோபம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இரவு குடோனில், முத்தையாவும், மற்றொரு நபரும் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது குடோனுக்குள் இடத்தின் உரிமையாளர் பிரபு 13 பேர் கும்பலுடன் குடோனுக்கள் அத்துமீறி நுழைந்தார்.

    சத்தம் கேட்டு முத்தையா எழுந்தார். கும்பலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட முயன்றார். ஆனால் அதற்குள்ளாகவே அந்த கும்பல் முத்தையாவையும், அவருடன் இருந்த மற்றொரு நபரையும் சத்தம் வெளியில் வராத வண்ணம் வாயில் துணியை வைத்து பொத்தி குடோனில் உள்ள அறைக்குள் தூக்கி சென்றனர்.

    பின்னர் அங்கு 2 பேரையும் கயிறால் கட்டி வைத்தனர். தொடர்ந்து குடோனில் இருந்த இரும்பு கம்பிகள், சி.சி.டி.வி காமிராக்கள், 2 வாகனங்கள், அலுவலகத்தில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும்.

    இந்த நிலையில் காலையில் பணிக்கு வந்தவர்கள் பார்த்து, கட்டிபோடப்பட்டிருந்த முத்தையாவை காப்பாற்றினர். இதுகுறித்து முத்தையா சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரபு, தனது கூட்டாளிகளான கண்ணன், அஜ்பத்தாரி, வீரபாகு, வீரைய்யா, பென்னி, பார்த்தசாரதி, பிரபு என்ற வெள்ளையன், சங்கர் கணேஷ், பாலமுருகன், பார்த்தசாரதி உள்பட 13 பேருடன் சேர்ந்து குடோனுக்குள் புகுந்து முத்தையாவை கட்டி போட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகளான 13 பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×