search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நானும் டெல்டாகாரன் தான்... நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது: முதலமைச்சர் உறுதி
    X

    நானும் டெல்டாகாரன் தான்... நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது: முதலமைச்சர் உறுதி

    • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
    • தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஒருபோதும் இதுபோன்ற திட்டங்களை அரசு அனுமதிக்காது

    சென்னை:

    காவிரி டெல்டா பகுதிகளான ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு ஆகிய 3 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.

    தமிழக அரசிடம் கேட்காமல் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டது காவிரி டெல்டா பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து பல இடங்களில் போராட்டமும் நடந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். இதில் டி.ஆர்.பி. ராஜா (தி.மு.க.), முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் (அ.தி.மு.க.), செல்வ பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), வானதி சீனிவாசன் (பா.ஜனதா) ஆகியோர் பேசினார்கள்.

    இவர்கள் அனைவருமே காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிலக்கரி எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிலக்கரி எடுக்க அனுமதிக்கக்கூடாது என்றனர்.

    வானதி சீனிவாசன் பேசும்போது, "தமிழகத்தில் டெண்டர் கோரப்பட்ட பகுதிகளில் நிலக்கரி எடுப்பதில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும்" என்று நிலக்கரி துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.

    இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

    இதுதொடர்பாக நேற்று முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தின் நகலை டி.ஆர்.பாலு எம்.பி. மூலம் மத்திய நிலக்கரி துறை அமைச்சருக்கு கொடுத்தனுப்பி இருக்கிறார்.

    மத்திய மந்திரி வெளியூரில் உள்ளதால் இது தொடர்பாக அவரிடம் டி.ஆர்.பாலு தொலைபேசியில் பேசி மேல் நடவடிக்கையை உடனடியாக கைவிட வலியுறுத்தி உள்ளார்.

    பாராளுமன்றத்திலும் தி.மு.க. எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் நின்றுவிடாமல் இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

    எனவே எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஒருபோதும் இதுபோன்ற திட்டங்களை அரசு அனுமதிக்காது" என்றார்.

    இந்த செய்தி வந்தவுடன் நீங்களெல்லாம் எப்படி அதிர்ச்சி அடைந்தீர்களோ, அதேபோல் நானும் அதிர்ச்சிக்கு ஆளானேன். இந்த செய்தியை பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி அதற்கு பிறகு உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

    அந்த கடிதத்தின் நகலை பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் காரணத்தால் டெல்லியில் உள்ள பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு ஒரு பிரதியை அனுப்பி உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நம்முடைய எதிர்ப்பையும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் அவரிடம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

    இங்கே தொழில்துறை அமைச்சர் சொன்னதுபோல் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் வெளியூரில் இருந்த காரணத்தால் நேரடியாக சந்திக்க முடியாததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

    அப்போது தமிழகத்தின் முதலமைச்சர் அனுப்பி இருக்கிற கடிதத்துக்கு நாங்கள் நிச்சயம் மதிப்பு அளிப்போம். கவலைப்பட வேண்டாம் என்கிற உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொன்னதாக டி.ஆர்.பாலு செய்தி சொல்லியுள்ளார்.

    ஆகவே நிச்சயமாக சொல்கிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டாக்காரன். எனவே இதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்களைப் போல் நானும் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் நிச்சயமாக தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது... அளிக்காது... அளிக்காது.

    இவ்வாறு அவர் உறுதிபட தெரிவித்தார்.

    Next Story
    ×