search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    • வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையை பொறுத்தவரை நேற்று வெயில் கொளுத்தி எடுத்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    25-ந்தேதி (இன்று) முதல் 28-ந்தேதி வரை தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை நேற்று வெயில் கொளுத்தி எடுத்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்தது. மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றும் வீசியது. ஆனால் நேற்று வெயில் பட்டையைக்கிளப்பியது. ஆனால் பெரியளவில் அனல் காற்றின் தாக்கம் இல்லை. இதனால் மக்கள் சற்று சிரமத்துடன் வெயிலை சமாளித்தனர். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் குறையவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையில் அதிகபட்சமாக 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரை, கரூர், வேலூர் உள்பட 11 நகரங்களில் சதம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், பாளையங்கோட்டை, தஞ்சை, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 11 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் பதிவானது.

    Next Story
    ×