என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜனநாயகத்திற்கு மாபெரும் ஆபத்தை விளைவிக்க பா.ஜ.க. முயற்சி- வைகோ
- நாடு மிகப்பெரிய ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளது.
- ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் அரசியல் சக்திகள் எதிர்த்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மணிக்கூண்டில் கடந்த 22.2.2016-ம் தேதி மக்கள் நல கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் உள்பட ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 12 பேர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இதனை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் 4 மாதத்திற்குள் முடித்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் இன்று திண்டுக்கல் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் சவுமியா மேத்யூ முன்பு வைகோ உள்பட 12 பேர் ஆஜரானார்கள். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பின் கோர்ட்டுக்கு வெளியே வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தற்போது நாடு மிகப்பெரிய ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை பா.ஜ.க. கொண்டுவர திட்டம் தீட்டி வருவதால் அமெரிக்காவை போல அதிபர் ஆட்சிக்கு அடிகோலும் செயலை முன்னெடுத்துள்ளனர். வாரணாசியில் நடந்த இந்துத்துவா மாநாட்டடில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாட்டில் அமுல்படுத்த நினைக்கின்றனர்.
சிறுபான்மையின மக்களான கிறிஸ்தவர், முஸ்லீம், ஜெயினர்கள் ஆகியோரின் வாக்குரிமையை பறிக்கும் நிலையை கொண்டுவர துடிக்கின்றனர். இதனை ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் அரசியல் சக்திகள் எதிர்த்து வருகின்றனர். இருந்தபோதும் இதுகுறித்து வலுவான போராட்டம் தேவை.
தற்போது கடுமையான மழை வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டதற்கு பா.ஜ.க. இன்னும் நிதி வழங்கவில்லை. அதற்குள் மற்றொரு மழை வெள்ளம் மக்களை மிரட்டி வருகிறது. குஜராத்தில் ஒரு மீனவர் இறந்தால் அதற்கு ராணுவமே செல்கிறது. ஆனால் தமிழகத்தில் மீனவர்களுக்கு தினந்தோறும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி ஒதுக்குவதிலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய நிதியை சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும்.
வாஜ்பாய் காலத்திலேயே பொது சிவில் சட்டம் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் அதனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசு அதனை நிறைவேற்ற துடித்து வருகிறது. ஜனநாயகத்திற்கு ஆபத்தாக விளங்கும் இதுபோன்ற சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கி வருகிறோம்.
உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






