search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் அங்கன்வாடி பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்- கலெக்டரிடம், 3 வயது சிறுமி மனு

    • கலெக்டர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    • அடிப்படை வசதிகளை செய்து தர கோரியிருந்த அந்த மனுவில் சிறுமியின் கைரேகை இடம்பெற்றிருந்தது.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அங்கன்வாடி பள்ளி

    நெல்லை மேலப்பா ளையம் ஞானியாரப்பா சின்னத் தெருவை சேர்ந்த ரசூல் காதர் என்பவரது மகள் சபா ஹாதியா (வயது 3) என்பவர் தனது தந்தையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் அம்பிகாபுரத்தில் ஒரு அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 10 மாதங்களாக நான் படித்து வருகிறேன். எங்கள் அங்கன்வாடி, ஆதி திராவிடர் அரசு உதவி பெறும் பள்ளியின் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், சத்துணவு, சத்துமாவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அங்கன்வாடியில் வழங்கப்பட்டாலும் எங்களது வகுப்பு கட்டி டங்கள் பழமையானதாக உள்ளது.

    அடிப்படை வசதிகள்

    எங்களது அங்கன்வாடி பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறோம். எனவே எங்களுக்கு தனியாக அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும். குடிநீர், கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அந்த மனுவில் சிறுமியின் கைரேகை இடம்பெற்றிருந்தது.

    சுடுகாடு நடைபாதை

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் கொடுத்த மனுவில், பாளை யூனியனுக்குட்பட்ட வேப்பன்குளம் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 2 சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட 2 சுடுகாடுகள் அருகருகே அமைந்துள்ளது.

    ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு நடைபாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக மற்றொரு தரப்புக்கு சொந்தமான சுடுகாடு நடைபாதை வழியே செல்ல வேண்டி உள்ளது. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே சுடுகாடு நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    முறைகேடு புகார்

    தமிழ் தேசிய கட்சியினர் ஆரோன் செல்லத்துரை தலைமையில் மனுவில், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இதே போல் பல்வேறு தரப்பினரும் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை வழங்கினர்.

    Next Story
    ×