search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
    X

    பேரணியில் கலெக்டர் விஷ்ணு சைக்கிள் ஓட்டி வந்த காட்சி

    உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    • தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துக்கொண்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகள் உடன் இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சைக்கிள் ஓட்டி கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 1200-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நெல்லை நீர் வளம் என்ற அமைப்பை கடந்த ஆண்டு தொடங்கினார்.

    இந்த அமைப்புடன் இணைந்து பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நெல்லை முதல் பாபநாசம் வரை தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மாணவ-மாணவிகளை கொண்டு சைக்கிள் பேரணியை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு பெடல்ஸ் பார் தாமிரபரணி என்ற பெயரில் தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துக்கொண்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி மேலப்பாளையத்தை அடுத்த பகுதியில் இருந்து தொடங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தாமிரபரணி நதிக்கரையில் முடிவடைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பேரணியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை நேச்சர் கிளப், பெண்களால் மட்டுமே இயங்கும் "இன்னர்வீல் கிளப் ஆப் திருநெல்வேலி" மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் உடன் இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சைக்கிள் ஓட்டி கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி குறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் நெல்லை நீர் வளம் என்ற அமைப்பை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் 1500-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். பல்வேறு தன்னார்வலர் அமைப்புகளும் இணைந்து செயல்படுகிறது.

    தாமிரபரணி ஆற்றங்கரை கிராமங்களான கோபாலசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் பல்வேறு வகைகளில் சுத்தப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் அதற்கு முன்னதாகவே 75-க்கும் மேற்பட்ட குளங்களை தூர்வாரும் பணிகளும் நடந்து வருகிறது.

    பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் முழுவதும் அடுத்த ஓராண்டுக்குள் 14 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆரைக்குளம் பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கு கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் அரசு துறைகள் மற்றும் பல்வேறு இயற்கை சார்ந்த தன்னார்வலர் அமைப்புகளும் கலந்து கொண்டனர். இன்று ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சுத்தம் படுத்தும் பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×