என் மலர்
அரியலூர்
திருமானூர்:
பெரியப்பட்டாக்காடு விவசாயிகள் பூர்வீகமாக பயன்படுத்தி வரும் நிலத்திற்கு செல்லும் வண்டிப்பாதையில் தனியார் லாரி உரிமையாளர்கள் கல்லோடு லாரிகளை ஓடவிட்டு ஆக்கிரமிப்பு செய்திருப்தை கண்டித்தும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடந்தையாக இருப்பதை கண்டித்தும, கல்லோடு லாரிகள் தினசரி 100க் கணக்கான லாரிகள் செல்லுவதால், மழைக்காலங்களில் நிலங்களில் நீர்தேக்கம் ஏற்படுவதாலும் விவசாயத்தை பாதுகாத்திட வண்டி பாதையில் தனியார்கல் லாரிகள் செல்வதை தடுக்க வேண்டியும், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் பெரியப்பட்டாக்காடுவிவசாயிகளும் வருகிற 18–ந்தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் ஏலாக்குறிச்சி கடைவீதி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜி. ஆறுமுகம் தலைமையில் சாலைமறியல் போராட்டம் செய்யபோவதாக அறிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இரா.உலகநாதன் மறியல்போராட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் ராமானுஜம் ,கலியபெருமாள், தனவேல், சங்கர், ரவிசந்திரன், சுந்தர்ராஜ், முருகானந்தம், சீமோன், ராஜேந்திரன்,சேகர், தமிழ்செல்வன், முருகானந்தம், குணசேகர், பழனியாண்டி, மாலா, பன்னீர்செல்வம், கருப்புச்சாமி, பக்கிரிசாமி, கிருஷ்ணமூர்த்தி,ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். இதில் மாவட்ட துணைசெயலாளர் ஜெயராஜ் ஒன்றிய துணைசெயலாளர் பரிசுத்தம், ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
சாலைமறியல் போராட்ட ஏற்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட்கட்சி திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜி.ஆறுமுகம், திருமானூர் ஒன்றிய குழு பெரியபட்டாக்காடு கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சட்டமன்ற தொகுதிகளில் நடத்திட உத்தரவிட்டு, நிகழ்ச்சிகள் நாள்தோறும் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை பார்வையிட இந்திய தேர்தல் ஆணையத்தால் அரியலூர் மாவட்டத்திற்கென தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதிபான்டே மாவட்ட தேர்தல் அலுவலர் நம் மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜிடன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் உடையார் பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையங்களை ஆய்வு செய்தார்கள்.
இதில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையத்தின் வாயிலாக 921 விண்ணப்பங்களும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மையத்தில் 237 விண்ணப்பங்களும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையத்தின் மூலம் 44 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 1202 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதை பதிவேடுகளைக்கொண்டு ஆய்வு செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பா.ரவீந்திரன், ஜெங்ககொண்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் இராஜகோபால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் கங்கா தரணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம் நடுகஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக அணைக்கரை கடைவீதிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வநாதனை பொதுமக்கள்மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சைபலனின்றி இறந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி எஸ்.ஐ. நடேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராதாகிருஷ்ணன் ஜெயங்கொண்டம் கட்சிப்பெருமாள் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி. காயத்ரி (11), பிரியங்கா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் 6 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே சலூன் கடை வைத்து நடத்தி வந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அ.தி.மு.க. மீது தீவிர பற்றுக் கொண்டவர்கள்.
ராதாகிருஷ்ணன் கட்சியில் பதவி வகிக்கவில்லையென்றாலும் அடிமட்ட தொண்டராக இருந்து கட்சி பணியாற்றி வந்தார். உள்ளூரில் நடைபெறும் எந்த அ.தி.மு.க. கூட்டங்கள் என்றாலும் அதில் பங்கேற்பார். சலூன் கடை நடத்தி வருவதால் வெளியூர்களில் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களுக்கு செல்வது கிடையாது. நேற்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் அவரை அழைத்துள்ளனர்.
இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்த அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக அ.தி.மு.க. கட்சி கரை போட்ட வேட்டி ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். அதனை அணிந்து கொண்டு நேற்று காலை 10.30 மணிக்கே அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்களுடன் வேனில் விருத்தாச்சலத்திற்கு சென்று விட்டார். கூட்டத்திற்கு செல்வது குறித்து வீட்டில் யாரிடமும் கூறவில்லையாம். எப்போதும் காலை 6 மணிக்கு கடையை திறக்கும் அவர் காலை 10 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட செல்வது வழக்கம். நேற்று அவர் வீட்டிற்கு வராததால் ராஜேஸ்வரி, கணவர் ராதாகிருஷ்ணனுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போது அவர் தான், விருத்தாச்சலம் அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பாக சென்று வருமாறு கணவரிடம் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.
இந்தநிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற ராதாகிருஷ்ணனுக்கு திடீரென சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓய்வு எடுப்பதற்காக அவர்கள் வந்த வேனுக்கு சென்று தூங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து கூட்ட நடைபெறும் இடத்திற்கு சென்றார். அப்போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சிலர் அவரது சட்டைப்பையில் இருந்த டைரியை எடுத்து பார்த்துள்ளனர். அதில் இருந்த அவரது மனைவியின் செல்போனுக்கு, ராதாகிருஷ்ணன் மயங்கி கிடப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர், ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு தெரிவித்துள்ளார். தானும் உடனே வருவதாக கூறியுள்ளார். இதனிடையே அங்கு வந்த அ.தி.மு.க.வினர் ராதாகிருஷ்ணனை மீட்டு விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன் இறந்த தகவலை கேட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். அவர்களுக்கு அ.தி. மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆறுதல் கூறினர். ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் என்ற சகோதரரும், ரதி என்ற சகோதரியும் உள்ளனர். ரமேஷ் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். ரதி திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே மினிலாரியில் எடுத்துசெல்லபட்ட பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தலையொட்டி ஜெயங்கொண்டம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம்– திருச்சி சாலை தில்லைநகர் அருகில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரியும், துணைத்தாசில்தாருமான அருட்செல்வி தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.சோதனையில் லாரியில்ரூ.52 ஆயிரம் பணம் இருந்தது . அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரியில் வந்த ஏழேரி கிராமத்தை சேர்ந்த சவுந்திரராஜன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாளையகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் கவிநிலவு ( வயது 20). இவர் இரும்புலிகுறிச்சியில் உள்ள அவரது தாத்தா சோமசுந்தரம் வீட்டில் வசித்து வந்தார்.
தற்போது 12–ம் வகுப்பு தேர்வு எழுதிய அவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டரில் சிறப்பு வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்ற கவிநிலவு அதன்பிறகுவீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சோமசுந்தரம் உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் வழக்கு பதிவு செய்து கவிநிலவு எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா? என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அருளானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 32). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அருள்மேரி (26). இவர்களுக்கு பிரிட்டன் என்கிற 5 வயது மகன் உள்ளான்.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு ஏசுதாஸ் வந்தார். இந்நிலையில் மேலநெடுவாய் பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் அருள்மேரி இருப்பதை அறிந்து அவரை பார்ப்பதற்காக ஏசுதாஸ் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலநெடுவாய் அருகே ஆண்டிமடம்- இடையக்குறிச்சி சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பனை மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஏசுதாஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஏசுதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருள்மேரி மற்றும் அவரது உறவினர்கள் ஏசுதாசின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலநெடுவாய் கிராம பஸ் நிறுத்தம் அருகில் சாலையை ஒட்டி குளம் மற்றும் பனைமரங்கள் உள்ளன. இதனால் அந்த வளைவான பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே அங்குள்ள பஸ் நிறுத்தத்தினை சிறிது தூரம் தள்ளி வேறொரு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். சாலையோர பனை மரங்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாரகேஸ்வரி தலைமையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் ஏட்டுகள் காமராஜ், அழகப்பன், சந்திரமோகன் ஆகியோர் அரியலூர் அருகே கீழப்பழுவூரை அடுத்த பொய்யூர் கிராமத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக தஞ்சாவூரை சேர்ந்த ஒரு பிரபல தங்க நகைக்கடையின் வேன் வந்தது. அதனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் நகைக்கடையின் பாதுகாப்பு பிரிவு ஊழியர் செல்வக்குமார், டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர்கள்,சென்னையில் உள்ள தங்களது நகைக்கடை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து தஞ்சாவூரில் உள்ள கிளை அலுவலகத்திற்கு தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்து செல்கிறோம், மேலும் இதனை திறந்து பார்ப்பதற்கான சாவி எங்களிடம் இல்லை.
தஞ்சாவூரில் உள்ள எங்களது நகைக்கடை அதிகாரிகளை வரவழைத்தால் தான் இதனை திறந்து பார்க்க முடியும் என பறக்கும் படை குழுவினரிடம் செல்வக்குமார் தெரிவித்தார். இதையடுத்து பறக்கும் படை குழுவினர் அந்த வேனை அரியலூர் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதற்கிடையே பறக்கும் படை அதிகாரியின் உத்தரவுப்படி தஞ்சாவூரில் இருந்து அந்த நகைக்கடை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த சாவியின் மூலம் வேனின் பின்பக்க கதவினை திறந்து அதிலிருந்த நகைப்பெட்டிகளை எடுத்து தாசில்தார் அலுவலகத்தினுள் வைத்தனர். பின்னர் அரியலூர் தொகுதி தேர்தல் உதவி தாசில்தார் அமுதா முன்னிலையில் நகைப்பெட்டிகளை திறந்து அதில் இருந்த நகைகளுக்குரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது 2 கிலோ 543 கிராம் எடை கொண்ட தங்க நகைகளும், 874 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்களும் இருந்தது தெரியவந்தது.
தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சரியாக இருந்ததால், அவற்றை அந்த நகைக்கடை அதிகாரிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
செந்துறை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசிய வைகோவை கண்டித்து செந்துறையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி.தலைமை தாங்கினார்.
இதில் மாநில பொது குழு உறுப்பினர் பூ.செல்வராஜ். கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய துணை செயலாளர் எழில்மாறன். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், ஒன்றிய அவை தலைவர் சிவபிரகாசம் , ஞானம்பா பேங்கு செல்வராஜ், ஊராட்சி செயலாளர்கள் குழூமுர் முகமது அலி,கார்மேகம், மற்றும் கழக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வைகோவின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர விற்கிணங்க தேர்தலில் பங்கேற்றல் மற்றும் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு பகுதியாக கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளைக் கொண்டு தேர்தலில் பங்கேற்றல் 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பா.ரவீந்திரன் அவர்கள் கருத்துக் கூறி, வாக்காளர் உறுதிமொழியினை வாசித்தார். அதனை அடுத்து மாணவ, மாணவிகளும் பின் தொடர்ந்து ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்அ.செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்.
இவர் நேற்று முன்தினம் தனது தாய் ஜெயலட்சுமியை ஒரு டூவீலரில் அழைத்துக்கொண்டு அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் இருந்து தா.பழூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே அண்ணகாரன்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (22), என்பவர் தனது டூவீலரில் அவரது தந்தை பன்னீர் செல்வத்தை (60) அழைத்துகொன்டு, தா.பழூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பிள்ளையார்குளம் விநாயகர் கோயில் அருகே அவர் சென்றபோது எதிரே வந்த கார்த்திக் ஓட்டிவந்த பைக் சுபாஷ் பைக் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த தா.பழூர் போலீசார் காயமடைந்த நான்கு பேரையும் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். சுபாஷ், ஜெயலட்சுமி, கார்திக் ஆகியோர். மேல்சிகிச்சைக்காக தஞ்சை ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். இதுதொடர்பாக சுபாஷ் புகார் அளித்ததின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் தங்கதுரை (வயது27). இவர் நேற்று முன்தினம் வெண்மான்கொண்டான் கிராமத்தில் நடக்கும் கபடிபோட்டியை பார்க்க, தனது பைக்கில் சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி மகன் அஜித்குமார் (18), மற்றும் சிங்காரம் மகன் கார்த்திக் (22), ஆகியோரை பின்னால் உட்காரவைத்துக் கொண்டு சென்றார்.
மூர்த்தியான் கிராமம் அருகில் செல்லும்போது எதிரில்வந்த கார் இவர்கள் வந்த மோட்டர் சைக்கிளின் மீது மோதியது. இதில் பைக்கில்வந்த 3 பேரும் காயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் எஸ்.ஐ. ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடிவருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் ஒன்றிய, நகர தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் புரட்சிசிவா வரவேற்று பேசினார். ஒன்றிய அவைதலைவர் செந்தில், ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி, நகர அவைத்தலைவர் ராஜா, நகர பொருளாளர் சேகர், நகரதுணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் இளையராஜா, ஜகநாதன், பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது–
தே.மு.தி.க.- மக்கள்நலக் கூட்டணி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தமிழக முதலமைச்சராக ஆக்குவோம்.
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட மாணவரணி தர்மராஜ், மாவட்ட மகளிரணி ராணி ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட வக்கீல் அணி கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி நல்லதம்பி, மாவட்ட தொழிற் சங்கம் பழக்கடை பாண்டியன், ஆனந்த், தொண்டரணி மதி மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பாலு, பாஸ்கரன், சதீஸ்குமார், பாலமுருகன், சக்திவேல், செல்வம், சாமிநாதன், கஜேந்திரன், சசிகுமார், ராதாகிருஷ்ணன், சக்திவேல், ராஜேந்திரன், நிவாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
கூட்டமுடிவில் 8வது வார்டு செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.






