என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே உரிய ஆவணங்களின்றி கடலை வியாபாரி கொண்டு வந்த ரூ.2¼ லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காகவும், தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள் பரிசு பொருட்களாக வழங்கப்படுவதை தடுப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஜெயங்கொண்டம்-தா.பழூர் ரோடு அணைக்குடம் பகுதியில் ஜெயங்கொண்டம் தொகுதி நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட போலீசார் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது லாரியில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரியில் இருந்த கடலை வியாபாரியான கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா தாழப்பட்டு பகுதியை சேர்ந்த பிரேம்குமாரிடம் விசாரித்த போது, அரியலூர் மாவட்டம் காசான் கோட்டை பகுதியில் விவசாயிகளிடம் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்காக பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். எனினும் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களோ, ரசீதோ சமர்ப்பிக்கப்படவில்லை.

    இதையடுத்து அந்த பணத்தை நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் சார்நிலைக்கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்களை கருவூலத்தில் செலுத்தி மீண்டும் பணத்தை பெற்று கொள்ளலாம் என பிரேம் குமாரிடம் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். கடலை வியாபாரியிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனையின்போது அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைப்பு

    ஜெயங்கொண்டம் :

    உடையார்பாளையம் புது பேருந்து நிலையம் அருகே தேர்தல் கண்காணிப்புக்குழு தாசில்தார் தாரகேஸ்வரி தலைமையில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சஞ்சீவிகுமார், பாரி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தத்தனூரிலிருந்து, இடையார் நோக்கி சென்ற உடையார்பாளையம் அருகேயுள்ள தனியார் முந்திரிக் கொட்டை தொழிற் சாலைக்கு சொந்தமான மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கோழிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு மகன் சத்தியநாதன் (வயது31) என்பவர் உரியஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 வைத்திருந்தது தொரியவந்தது.

    இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல்செய்து ஜெயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    அதேபோல் ஜெயங்கொண்டம் – தா.பழூர் சாலை அணைக்குடம் அருகே தேர்தல் நிலையாக கண்காணிப்புகுழு துணை வட்டாட்சியர் கிருஷ் ணமூர்த்தி, போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், தலைமைக் காவலர் ஜெகதீசன், காவலர் பழனிவேல் ஆகியோர் கொண்ட குழு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பண்ருட்டியிலிருந்து, காசாங்கோட்டை நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் பண்ருட்டி அருகேயுள்ள தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி மகன் பிரேம்குமார் என்பவர் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்காக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது.

    ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவண இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து பார்வையாளர் ஆய்வு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பார்வையாளர் (காவல்) சி.வி.ஆனந்த், அரியலூர் மாவட்டத்தில் மேற் கொள்ளப்படும் தேர்தல் பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சரவண வேல்ராஜ், மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆலோசனை மேற் கொண்டார்.

    கூட்டத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மேற் கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், ஊடகச் சான்றிதழ் வழங்கும் குழு பணிகள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோக் கண்காணிப்புக்குழு உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட தொகைகள் அவற்றை மீள ஒப்படைச்செய்யத விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு, உரிய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    முன்னதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகச் சான்றிதழ் வழங்கும் அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.லலிதாவதி, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் அருகே மது குடித்து சீட்டு பணத்தை செலவு செய்த தந்தையை கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள  குறிச்சிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் பாரதிதாசன் (18). பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் ஓட்டல் மேனேஜ் மெண்ட் படித்து வந்தார்.
    இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அமுதா பல முறை கண்டித்தும் குடிப்பழக்கத்தை கை விடவில்லை.

    இதனிடையே ஊரில் சீட்டு போட்டிருந்த ரவிச்சந்திரன், சீட்டு விழுந்ததையடுத்து அதில் கிடைத்த ரூ.5ஆயிரம் பணத்தையும் மது குடித்தே செலவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்றிரவு  அவருக்கும், அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், அமுதாவை சரமாரியாக திட்டி விட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டருகே உள்ள பாலத்தில் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு சென்ற பாரதிதாசன், தந்தை ரவிச்சந்திரனிடம் ஏன் சீட்டு பணத்தை மது குடித்து செலவு செய்தீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள்  வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. ஆத்திர மடைந்த ரவிச்சந்திரன் கீழே கிடந்த கல்லை எடுத்து பாரதிதாசனை தாக்கினார். பதிலுக்கு அவரும் கல்லால் ரவிச்சந்திரனை தாக்கினார். மோதல் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த  பாரதிதாசன் அரிவாளால் ரவிச்சந்திரனை வெட்டினார். இதில் அவரது தலையில் பலத்த  வெட்டுப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த  வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும்  கயர்லாபாத்  போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாரதிதாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது குடித்து செலவு செய்த தந்தையை கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே தனியார் பேருந்து மோதியதில் முதியவர் பலியானார்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள வங்குடி வடக்குதெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). இவரும் இவரது மகன் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    ஜெயங்கொண்டம் பாப்பாக்குடி மெயின் ரோட்டில் நடந்து செல்லும்போது தனியார் பேருந்து மோதியது. இதில் பெருமாள் பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து பெருமாள் மகன் ராஜேந்திரன் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் ஆண்டிமடம் நடுத்தெருவை சேர்ந்த வேல்முருகன் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    அரியலூர் மாவட்டத்தில் 2816 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் சரவண வேல்ராஜ் கூறியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக் கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016–ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவண வேல்ராஜ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார். இதில் அவர் கூறியாதாவது–

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் –1210 வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் 857 கட்டுப்பாட்டுக் கருவிகள், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் 24 மணி நேரமும் ஆயுத தாங்கிய காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    2816 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் மையங்களில் 24 ஏப்ரல், 7 மே, 12 மே மற்றும் 15 மே ஆகிய நாட்களில் தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

    பிரதீப் குமார் தேர்தல் பார்வையாளராகவும் லுன்சி கிப்ஜென் காவல் பார்வையாளராகவும் மற்றும் நரேந்திர குமார் நாயக் செலவின பார்வையாளராகவும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    செலவின பார்வையாளர், இன்று அரியலூர் வர உள்ளார்கள். பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களால் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.56.30 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மேல்முறையீட்டு குழுவால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மேல் முறையீடுதாரர்களுக்கு ரூ.22.48 இலட்சம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பா.ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டம் பெண்ணிடம் நகை பறிப்பு போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் கவரத்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கோமதி (வயது 35). ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளியில் ஆயாவாக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வருவதற்காக அவ்வழியே வந்த அரசு பேருந்தில் ஏறி ஜெயங்கொண்டம் கருப்பையா பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கிய சிறுது நேரத்தில் கழுத்தில் போட்டிருந்த ஒன்றரை பவுன் தங்கச் செயினை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோமதி ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னையைச் சேர்ந்த டிரைவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தை - மகன் உள்பட 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன ஜெயந்த் (வயது 29). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 19-4-2012 அன்று சின்னஜெயந்த்தின் அண்ணன் மனைவிக்கு, அதே ஊரைச் சேர்ந்த திவாகர் (26) போலீஸ் வேலைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். இதை அறிந்த சின்னஜெயந்த் ஆத்திரம் அடைந்து, திவாகரின் வாயில் ஓங்கி குத்தி விட்டார். இதில் திவாகரின் பல் உடைந்து அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த திவாகர், மறுநாள் தனது தந்தை அய்யாப்பிள்ளை மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சின்ன ஜெயந்தை அடித்துக் கொலை செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக திவாகர், அய்யாப்பிள்ளை (54), சுரேஷ் (44), பரமசிவம் (44), மணிகண்டன் (37), பார்த்திபன் (34), விக்னேஷ் (39), அர்ச்சுனன் (64), ஆனந்த் (34), அன்பரசன் (49), கலைமணி (24), குண்டு (29), மற்றொரு சுரேஷ் (26), கொளஞ்சி (26) ஆகிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.ஏ.ரகுமான், வாலிபரை அடித்துக் கொலை செய்த திவாகர், அவரது தந்தை அய்யாப்பிள்ளை உள்ளிட்ட 14 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பு கூறினார்.

    ஆனால் இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே விஷ இலையை சாப்பிட்டு பெண் இறந்தார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரித்து வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள செட்டிக்குழிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி தங்கபொண்ணு (வயது 27). இருவருக்கும் கடந்த 2009–ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    குடும்ப பிரச்சணை காரணமாக கணவன், மனைவிக்குள் கருத்துவேறுபாடு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் அண்ணனின் திருமணத்திற்கு சென்றவர் தனது வீட்டிற்கு செல்லாமல் நல்லணம் கிராமத்தில் உள்ள தங்கை ஈஸ்வரி வீட்டில் தங்கிவிட்டார். மன உலைச்சலில் இருந்த தங்கபொண்ணு அப்பகுதி காட்டுக்குள்சென்று சென்று விஷஇலையை பரித்து வந்து அறைத்து குடித்துள்ளார். இதனால் அவர் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

    இந்தசம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் மன உலைச்சலில்தான் இறந்தாரா? அல்லது வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என ஆர்.டி.ஓ ராஜகோபாலன் விசாரித்து வருகின்றார்.

    அரியலூர் மாவட்டத்தில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன் தேர்தல் நன்னடத்தை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயலர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடைபிடித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜ் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:–

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம், விவசாயிகள், வங்கி கடன்தாரர்கள், உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள் ஆகியோருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை, உறுப்பினர்கள் அனாமத்து கணக்கில் விதிமுறைகளுக்கு புறம்பாக பணம் நிலுவை வைத்துக்கொள்ளக்கூடாது, அரசியல் தலைவர்களின் போட்டோக்கள் அகற்றப்பட வேண்டும். அரசியல், விளம்பரங்கள், சுவர் ஒட்டிகள், சங்க வளாகத்தில் இருக்கக்சுகூடாது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜ் கூறினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்.ரவீந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாபு, துணைப்பதிவாளர் பொது விநியோகத்திட்டம் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    அரியலூர் அருகே இன்று சொத்து தகராறில் தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பளூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை (வயது 80), விவசாயி. இவரது மகன் முருகேசன்.

    இந்த நிலையில் முருகேசன் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் பிரித்து கொடுக்க மறுத்துள்ளார். இதனால் தந்தை –மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இன்று காலை பிச்சப்பிள்ளை அவரது வயலில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முருகேசன் , சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த அரிவாளால் பிச்சப்பிள்ளையை சரமாரி வெட்டினார்.

    இதில் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காய மடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதையடுத்து முருகேசன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் கீழப்பளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சொத்து தகராறில் தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாகனசோதனையில் ரூ.1.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் பகுதிகளில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு–2 துணைத் தாசில்தார் கண்ணன் தலைமையில், எஸ்.ஐ. பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் மதியழகன், பாலமுருகன் உள்ளிட்டோர் சென்னை– கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பாப்பாக்குடி பெட்ரோல் பங்கு அருகே வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புவனகிரியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், புவனகிரியில் சீவல் மொத்த வியாபாரம் செய்துவிட்டு உரிய ஆவணமின்றி எடுத்து வந்த சூப்பர்வைசர் கார்த்திக்குமார் என்பவரிடமிருந்து ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் தேர்தல் பறக்கும்படை துணை தாசில்தார் எலிசபெத்மேரி தலைமையில், எஸ்.ஐ. மலரழகன், காவலர்கள் மாயகிருஷ்ணன், நிக்கோலஸ், காமராஜன் ஆகியோர்கொண்ட குழு விருத்தாசலம் – ஜெயங்கொண்டம் சாலை மகிமைபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் திருவண்ணாமலை ஆரோக்கியதாஸ் மகன் தேவதாஸ் என்பவர் நெல் வியாபாரம் செய்துவிட்டு உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.53 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இன்று அதிகாலை 5 மணியளவில் நிலையான கண்காணிப்பு குழு–3 துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஐ. மணிவண்ணன், காவலர்கள் ஜெகதீசன், பழனிவேல் ஆகியோர் கொண்ட குழு ஜெயங்கொண்டம் – திருச்சி சாலை மார்க்கெட் கமிட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கடலூர் மாவட்டம், ஆயங்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் ஆயக்குடி ஷேக்தாவூத் மகன் அபுசலி என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.52 ஆயிரத்து 750–ஐ பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடலூர் மாவட்டம் நங்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் கம்பெனிக்கு சொந்தமான 50 கமர்சியல் காலி சிலிண்டர்களை நங்குடி கிராமம் பன்னீர்செல்வம் மகன் மதியழகன் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்து சென்றதை பறிமுதல் செய்தனர்.

    இக்குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 750–யை ஜெயங்கொண்டம் கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தினர். 50 காலி சிலிண்டர்களை ஜெயங்கொண்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    ×