என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி தலைவராக தேன்துளி உள்ளார். இங்கு தற்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. அங்கு வேலை செய்த பொதுமக்களிடம் ஊராட்சி மன்றத்தலைவர், நீங்கள் ஊதியத்திற்கு ஏற்ப வேலை செய்யவில்லை என்று புகார்கள் வருகிறது. ஊதியத்திற்கு ஏற்ப வேலை செய்யவில்லை என்றால் நானே பணியிடம் வந்து கண்காணிப்பேன் என்று கூறி சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு பிரிவு மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்களை தரக்குறைவாகவும், சாதிபெயரை சொல்லி திட்டியதாகவும் கூறி அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள பொன்பரப்பியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆணையர்கள் சந்தானம், ஜெயகுமாரி, செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த மற்றொரு பிரிவு மக்கள், 100 நாள் பணியாளர்களிடம் ஊராட்சி மன்றத்தலைவர் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை. பணிகளை சரியாக செய்யவேண்டும் என்றுதான் கூறினார் என்று தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி கூறினர். இதையடுத்து சாலை மறியல் செய்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே திருச்சி – சிதம்பரம் சாலை சின்னவளையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் தேர்தல் கண்காணிப்பு குழு தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், தலைமைக் காவலர் ஜெகதீசன், காவலர் பழனிவேல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உடையார்பாளையம் நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் கடலூர் மாவட்டம், மாலிக்கம்பட்டு கிராமம் காசிநாதன் (வயது 58) என்பவர் இருந்தார். அவர் உரிய ஆவணமின்றி ரூ.3லட்சம் வைத்திருந்தார்.
இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முந்திரிக்கொட்டை வியாபாரியான அவர் முந்திரிக்கொட்டை கொள்முதல் செய்வதற்காக அந்த பணத்தை எடுத்து சென்றதாக கூறினார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் தனியார் கன்னியர் இல்லம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த கந்தன் மகள் வள்ளி (வயது17), ராதாகிருஷ்ணன் மகள் லதா (17) ஆகியோர் தங்கி, அங்கு தையல் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த 29–ந் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற இருவரும் அதன் பிறகு மாயமாகிவிட்டனர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இல்ல தாளாளர் மேரிவியான்னி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 27–ந் தேதி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் தி.மு.க– காங்கிரசை விமர்சித்தும், தேர்தல் விதிமுறையை மீறி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி ஸ்ரீதர் நேற்று ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சீமான் மீது பிரிவு 153 (தேர்தல் விதிமுறைகளை மீறுதல்), பிரிவு 171 (ஆதாரமில்லாமல் தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்தல்) ஆகிய 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் நடக்கவிருக்கின்ற தேர்தலை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நான்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அரியலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர். அவர்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் விவரம் வருமாறு:-
பொது பார்வையாளர் பிரதீப் குமார்- தொலைபேசி எண் 7397607924, காவல் பார்வையாளர் லுன்ஷே கிப்ஜென்- தொலைபேசி எண் 7397607923, தேர்தல் செலவின பார்வையாளர் நரேந்திரகுமார் நாயக் - தொலைபேசி எண் 7397607926, தேர்தல் செலவின பார்வையாளர் தீபன் பிஸ்வாஸ் - தொலைபேசி எண் 7397607925 ஆகும்.
மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளர் பிரதீப்குமாரிடம் அரசினர் சுற்றுலா மாளிகையில் தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நேரில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய மேற்கு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் கடந்த 26-ந் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கண்டிராதித்தம் கிராமம் கருப்புசாமி கோவிலில் அ.தி.மு.க.வினர் 300 பேருக்கு அ.தி.மு.க. மாவட்ட விவசாய பிரிவு தலைவர் தில்லை திருவாசகமணி கறி விருந்து நடத்தியதாக தெரிகிறது.
இது குறித்து திருமானூர் போலீஸ் நிலையத்தில் அரியலூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் செந்தில்குமார் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தில்லை திருவாசகமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் அரியலூர் தொகுதிக்குட்பட்ட திருமானூர் ஒன்றியம் கிழக்கு பகுதியில் தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிர்வாகிகளை சந்திக்க வந்த போது, எழுநாட்சிபுரம், காட்டூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி துரை தியாகராஜன் கட்சியினர் 100 பேருக்கு கறி விருந்து நடத்தியதாக திருமானூர் போலீஸ் நிலையத்தில் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜமூர்த்தி புகார் கொடுத்தார். அதன் பேரில் துரை தியாகராஜன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு. தி.க–மக்கள் நலக்கூட்டணி– த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 23–ந்தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் மற்றும் அரியலூர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து அரியலூர் வி.கைகாட்டியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் ஜாதி உணர்வை தூண்டும் விதமாகவும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீது ஆதாரமில்லாமல் புகார் கூறி பேசினாராம். இது குறித்து அரியலூர் மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி அமுதா விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.
அதன்பேரில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜதுரை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது பிரிவு 153 (சாதி உணர்வை தூண்டுதல்), பிரிவு 171 (தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்தல்) ஆகிய 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர் மணியங்குட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் இந்த கோவிலின் உண்டியலை உடைத்து 2 சிறுவர்கள் அதிலிருந்த ரூ.320-ஐ திருடி சென்றனர். மறுநாள் காலை வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக வந்த கோவில் நிர்வாகி மூர்த்தி இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அரியலூரை சேர்ந்த 16 வயதுடைய 2 சிறுவர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவர்களை கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதுரை(வயது44). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர் நகர பேருந்தை ஆண்டிமடத்திலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி ஓட்டி சென்றார். அப்போது குளத்தூர் கைகாட்டியில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினிலாரி ஒன்று பேருந்தின் பின்னால் மோதியது.
இதில் பேருந்தின் பின்புறம் சேதமாகியது. மினிலாரியில் பயணம் செய்த வரதராஜன்பேட்டையை சேர்ந்த மேரி, பெரியநாயகம், செபஸ்தியான், மற்றும் மினிலாரி டிரைவர் மரியஜெரோம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பேருந்து டிரைவர் ராமதுரை ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






