என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் குறைந்த வாக்குகள் பதிவான இடங்களில் அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து 100 சதவீதம் வாக்களித்தல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தேர்தல் பணிகளை கண்காணித்திட இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரதீப்குமார்   பல்வேறு தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    இதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான அருங்கால் பகுதிகளில் அரியலூர் மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்  பிரதீப்குமார்   நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, 100 சதவீதம் தேர்தலில் பங்கேற்றல் மற்றும் வாக்களித்தல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    செந்துறை அருகே போதையில் தவறி விழுந்து துப்புரவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    செந்துறை:

    செந்துறை அருகேயுள்ள வீராக்கன் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளி கலியபெருமாள் (வயது 50). இவர் நேற்றைய முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு வீராக்கன் பெரியேரி கரை அருகே அமர்ந்திருந்த போது பின்புறமாய் தவறி விழுந்ததில் பின்புற மண்டையில் அடிபட்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில் இரும்புலிக் குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது.
    கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே உள்ள வடபட்டினம் தனியார் உணவு விடுதி அருகே சிறுநீர் கழிக்க ரோட்டை கடந்த முதியவர் கார் மோதி பலியானார்

    மாமல்லபுரம் :

    சென்னை பொழிச்சலூரை சேர்ந்த சம்பந்தம் (வயது 53) பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு சென்னைக்கு அரசு பஸ்சில் திரும்பினார்.

    கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே உள்ள வடபட்டினம் தனியார் உணவு விடுதியில் பஸ் நின்றபோது அவர் சிறுநீர் கழிக்க ரோட்டை கடந்தார்.

    அப்போது பாண்டிச் சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சம்பந்தம் மீது மோதியது. தலையில் காயம் அடைந்த அவரை மீட்டு பாண்டிச்சேரி ஜிப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து கூவத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இரவு நேரத்தில் போதிய மின் விளக்கு, கழிப்பிட வசதிகள் இல்லாத ஓட்டல்களில் பஸ்களை நிறுத்துவதால் இ.சி.ஆரில் இது போன்ற உயிர் இழப்புகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதை போக்குவரத்து துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திடீர்குப்பம் பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    செந்துறை திடீர்குப்பம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தரப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் நீண்ட காலமாக பட்டாவும் வழங்கவில்லையாம்.

    இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அரசு வழங்கிய இலவச பொருட்களை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், பட்டா உடனடியாக வழங்கவேண்டும், இல்லையென்றால் ரேசன்கார்டை ஓப்படைப்பதோடு, தேர்தலை புறக்கணிப்போம் என்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    அரியலூர்-கரூர் தி.மு.க.வினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, ரூ.9 லட்சம் பறிமுதல் செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் சஞ்சீவி நகர் பெருமாள் கோவில் தெரு வைச்சேர்ந்தவர் குணா. அரியலூர் நகராட்சி 9-வது வார்டு கவுன்சிலராக உள்ள இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    இதையடுத்து பறக்கும் படை அலுவலர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் குணா வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.8.90 லட்சம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    கரூர் மாவட்டம் வீரராக்கியம் பிரிவு அருகே உள்ள கட்டளை பகுதியை சேர்ந்தவர் ரவிராஜா (50). இவர் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தி.மு.க. செயலராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வருமான வரித்துறையின் கோவை மண்டல துணை இயக்குனர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கிருஷ்ணராயபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன், மாயனூர் காவல் ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் ரவிராஜாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

    இது குறித்து தி.மு.க. ஒன்றிய செயலர் ரவிராஜா கூறும் போது, யாரோ தூண்டுதலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். என் வீட்டில் பணம் எதுவும் பதுக்கி வைக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் சோதனையின் மூலம் அறிந்து கொண்டனர். இது என் வீட்டில் நடைபெறும் 2-வது சோதனை என்றார்.
    ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன், ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிமடம், கூவத்தூர், வடுகர்பாளையம், குப்பம் குடிக்காடு, விளந்தை சூனாபுரி, கவரப்பாளையம், வரதராசன்பேட்டை, தென்னூர், பிளாக்குறிச்சி உட்பட 20 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

    பொதுமக்களிடம் வேட்பாளர் ராஜேந்திரன் பேசுகையில் கலைஞர் தலைமையில் ஆட்சி அமையும் என்பது உறுதி.  ஆண்டிமடம் புதிய தாலுக்காவாக உருவாக்கவும், இப்பகுதிகளில் அதிக அளவில் முந்திரி பயிரிடுவதால் இங்கு முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, மற்றும் மதிப்புகூட்டல் செய்து முந்திரியை அதிக வருமானம் ஈட்ட பாடுபடுவேன். 

    ஆண்டிமடம் அரசு சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கலைஞரிடம் எடுத்துக்கூறி நிறைவேற்றுவேன் என்று கூறினார். உடன் தி.மு.க சார்பில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தருமதுரை, ஒன்றிய அவைத்தலைவர் டேவிட், சிலம்பூர் ஊராட்சி தலைவர் இளையபெருமாள், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராஜா, நகர செயலாளர் செல்வக்குமார், வார்டு கவுன்சிலர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    தா.பழூர் அருகே தைலமரக்காட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    தா.பழூர் அருகே கீழமைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கேல்.  இவருக்கு சொந்தமான தைலமரக்காட்டில் வாலிபர் ஒருவர் பிணமாக தொங்குவதாக நாயகனைப்பிரியாளர் கிராம நிர்வாக அலுவலர் பழனிகுமாருக்கு  தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்  தா.பழூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது  கார்குடி கிராமம் காலனித்தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது.

    போலீசார்  உடலைமீட்டு  பிரேத பரிசோதனைக்காக  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவிச்சந்திரன் எப்படி இறந்தார்  என்று  விசாரணை  நடத்தி வருகின்றனர்.
    ×