என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர்-கரூர் தி.மு.க.வினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை: ரூ.9 லட்சம் பறிமுதல்
    X

    அரியலூர்-கரூர் தி.மு.க.வினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை: ரூ.9 லட்சம் பறிமுதல்

    அரியலூர்-கரூர் தி.மு.க.வினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, ரூ.9 லட்சம் பறிமுதல் செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் சஞ்சீவி நகர் பெருமாள் கோவில் தெரு வைச்சேர்ந்தவர் குணா. அரியலூர் நகராட்சி 9-வது வார்டு கவுன்சிலராக உள்ள இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    இதையடுத்து பறக்கும் படை அலுவலர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் குணா வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.8.90 லட்சம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    கரூர் மாவட்டம் வீரராக்கியம் பிரிவு அருகே உள்ள கட்டளை பகுதியை சேர்ந்தவர் ரவிராஜா (50). இவர் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தி.மு.க. செயலராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வருமான வரித்துறையின் கோவை மண்டல துணை இயக்குனர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கிருஷ்ணராயபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன், மாயனூர் காவல் ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் ரவிராஜாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

    இது குறித்து தி.மு.க. ஒன்றிய செயலர் ரவிராஜா கூறும் போது, யாரோ தூண்டுதலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். என் வீட்டில் பணம் எதுவும் பதுக்கி வைக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் சோதனையின் மூலம் அறிந்து கொண்டனர். இது என் வீட்டில் நடைபெறும் 2-வது சோதனை என்றார்.
    Next Story
    ×