என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் அலுவலக செலவை குறைத்து வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
    அரியலூர்:


    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றியக்குழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரஸ்வதி ஜெயவேல் முன்னிலையில், யூனியன் கமிஷ்னர் குணசேகரன் வரவேற்று பேசினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பொய்யாத நல்லூர் வெள்ளைச்சாமி, ராயபுரம் முத்துசாமி, ஓட்ட கோவில் பாப்பா, எருத்துக்காரன்பட்டி சரவணன், கடுகூர் முருகேசன், ராவுத்தன்பட்டி ராணி, பள்ளகிருஷ்ணாபுரம் செந்தமிழ்ச்செல்வி,

    அஸ்தினாபுரம் கண்ணகி, மண்ணுழி சுந்தரவடிவேல், விளாங்குடி ரேவதி, பெரிய திருகோணம் மாலா, வைப்பம் சிவபெருமாள், பொய்யூர் ராதாகிருஷ்ணவேணி,

    ஆலந்துறையார் கட்டளை விஜயகுமார், புங்கங்குழி சுரேஷ்குமார், உட்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அலுவலகத்திற்கு ஜீப்புக்கு டீசல் போட்டது ரூ.20 ஆயிரம், கிராம பகுதிகளில் கொரோனா, டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.2 லட்சம், அலுவலக வாகன பராமரிப்பு ரூ.50 ஆயிரம், பிப்ரவரி மாதம் அலுவலக செலவினம் தபால் டைப் செய்த வகையில் ரூ.35 ஆயிரம், மார்ச் மாதம் செலவினம் ரூ.30 ஆயிரம், அலுவலக மின் கட்டணம் ரூ.1500,

    அலுவலகம் சுத்தம் செய்த வகையில் செலவினம் ரூ.75 ஆயிரம், கல்லங்குறிச்சி கோவில் திருவிழாவில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள ரூ.5 லட்சம், இதுபோன்ற மாதாமாதம் செலவினங்கள் மேற்கொள்கிறார்கள்.

    ஆனால் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லை, கழிப்பிட வசதி இல்லை, கிராம பகுதியில் தார்சாலை கண்ணால் பார்க்க முடியவில்லை, அலுவலக செலவுகளை குறைத்துக் கொண்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் காலங்களில் செலவினங்களை குறைத்து ஒன்றிய பகுதிகளில் ஒரு கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக யூனியன் சேர்மன் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். கூட்ட முடிவில் அலுவலக மேலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.
    காலியாக உள்ள துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:  

    அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின்  கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள 10 பகுதிநேர துப்புரவாளர் (ஆண்)மாதம் ரூ.3000  என்ற தொகுப்பூதியத்தில்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

    இந்த காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.  

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு  1.07.2022 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

    இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.  

    இந்த தகுதிகளுடன் அரியலூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதி நேர துப்புரவாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள்மா

    வட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் மாதிரி விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்தும்,உரிய சான்றுகளின் நகல் இணைத்தும்,  

    சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டி அதனை அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம் முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.5.22 பிற்பகல் 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கால தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

     மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில்  விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் தனியார் சிமெண்டு ஆலைகள் ஆக்கிரமித்து வைத்துள்ள நீர் நிலைகளை மீட்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    அரியலூர்:


    அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை இறகுப்பந்தாட்ட கூடத்தில் கல்லங்குறிச்சி அமீனாபாத் ஆகிய பகுதிகளில் அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சாரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. 

    கூட்டத்தில் அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளை மீட்க வேண்டும், சுண்ணாம்புக்கல் சுரங்கம் விரிவாக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது, அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் அளித்த விவசாயிகளின் குடும்பத்தினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் அரசு வழிகாட்டுதலின் படி ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும்.

    சிமெண்டு ஆலையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். சாலையோரம் இரு புறங்களிலும் லாரிகளை நிறுத்த தடை விதிக்க வேண்டும். ஆலை மற்றும் சுரங்கங்களில் தொழிலாளர் நலச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    நீதிமன்றம் உத்தரவுப்படி நீர் நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. அது போல் சிமென்ட் ஆலைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வரத்து வாய்க்கால், ஓடைகள், ஏரிகள், குளங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு சிமென்ட் ஆலை நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வுத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கிராமப் பகுதிகளில் பயன்படுத்துவதே கிடையாது. இந்நிறுவனம் இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்ததில்லை.

    விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கும் போது அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை. நிலம் அளித்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை வழங்காமல் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே சுண்ணாம்புக் கல் சுரங்கத்தினால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ள நிலையில், மேலும் சுண்ணாம்புக் கல் விரிவாக்கம் செய்ய அனுமதி தரக்கூடாது. அதற்கு பதிலாக கிராமப் பகுதிகளில் சிறு தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சுண்ணாம்புக் கல் சுரங்கங்களுக்கு இயக்கப்படும் லாரிகளால் அதிகளவில் விபத்துகள் நிகழ்கிறது. ஆகவே கல்லங்குறிச்சி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தொடர்ந்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்த கலெக்டர், அவைகளை டெல்லியிலுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    கோடை வெயில் வாட்டிய நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    அரியலூர்:

    கடந்த ஒரு மாதமாக பகலில் கோடை வெப்பமும், இரவில் அதன் தாக்கமும் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கோடைக்காலத்தில், சூரியனுக்கு அருகில் பூமி செல்வதால்,

    வெப்பம் அதிகரிக்கும் அக்னி நட்சத்திரம் காலம் நேற்று தொடங்கியது. பகலில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன், மழை ெகாட்டித்தீர்த்தது.

    திருச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து மாநகர், புறகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் பலத்த மழை கொட்டியது.

    ஜங்சன், தில்லை நகர், ராம்ஜி நகர், ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும் புற நகரிலும் தொடர்ந்து மழை கொட்டியது. கடும் காற்றால்  பல்வறு இடங்களில் மரங்கள் விழுந்தன. குடிசைப்பகுதிகளில் மேற்கூரைகள் பறந்தன. பல இடங்களில் டிரான்ஸ்ாபார்மர்கள் வெடித்ததாலும் இணைப்பு கம்பிகள் அறுந்ததாலும் மின் தடை ஏற்பட்டது.

    இதே போல் நேற்றிரவு புதுக்கோட்டை நகரில் பலத்த காற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. மாவட்டத்தில் அன்னவாசல், கீரனூர், பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காற்றின் காரணமாக பல இடங்களில மின்சாரம் தடைப்பட்டது.

    கரூர் நகரில் நேற்று இரவு 7.20 மணிக்கு தொடங்கிய மழை 9.45 மணி வரை தொடர்ந்தது. பலத்த இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழையால் நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடியது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நன்பகுதில் அனல்காற்று வீசியது. இதனால் பஸ் நிலையம், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மாலை 4 மணி முதல் கருமேகங்கள் சூழந்து புறநகர் முழுவதும் மழை பெய்தது. ஆனால் அரியலூரில் மழை பெய்ய வில்லை.

    பெரம்பலூர் மாவட்டத்தில மாலை முதல் பரவலாக விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
    அரியலூர் உட்பட 5 மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வை 80299 பேர் எழுதினர்.
    அரியலூர்:

    தமிழகத்தில் இன்று தொடங்கிய பிளஸ்2 பொதுத் தேர்வு வரும் 28-ந் தேதி முடிவடைகிறது. இன்று முதல் நாளில்  மொழித் தேர்வு நடைபெற்றது. தேவை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,262 மையங்களில் 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

    திருச்சிமாவட்டத்தில்  அமைக்கப்பட்ட 126 தேர்வு மையத்தில் 15 ஆயிரத்து 522 மாணவர்கள், 17 ஆயிரத்து 599 மாணவிகள் என 33 ஆயித்து 121 பேர் எழுதினர். தனித் தேர்வர்களுக்கு 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 83 பள்ளிகளை சேர்ந்த 4035 மாணவர்கள், 4760 மாணவிகள் என மொத்தம் 8795 பேர் தேர்வு எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில்32 தேர்வு மையங்களில் 75 பள்ளிகளை சேர்ந்த 4023 மாணவர்களும், 3835 மாணவிகள் என மொத்தம் 7858 பேர் தேர்வு எழுதினர்.

    கரூர் மாவட்டத்தில் 42 மையங்களில்  5893 மாணவர்களும், 5300 மாணவிகள் என மொத்தம் 11193 பேர் தேர்வு எழுதினர்.  130 ஆசிரியர்கள் கொண்ட நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் இடுபட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 93 மையங்களில் 8 ஆயிரத்து 999 மாணவர்களும், 10 ஆயிரத்து 333 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 332 மாணவ மாணவிகள் எழுதினர்.

    தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க 270 ஆசிரியர்கள் கொண்ட நிலையான, பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும் மையத்திலேயே தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ரூ.39 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சீடிஜி எந்திரம், ஹைட்ராலிக் டேபிள், சிரஞ்சி பம்ப், டயா தர்மி எந்திரம், டிஜிட்டல் எக்ஸ்ரே எந்திரம், மல்டி பாரா மானிட்டர், பீட்டர் டாப்ளர், பிளட் ஸ்டோரேஜ் பிரிட்ஜ் உள்ளிட்ட

    பல்வேறு வகையான இயந்திரங்களை அமெரிக்க வாழ் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் ரூ. 39 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் பவுண்டேஷன் சிஇஓ இளங்கோவன் வழங்கினார்.

    இவற்றை வட அமெரிக்க வாழ் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவராக  உள்ள மேலணிகுழி கிராமத்தை சேர்ந்த முருகன் கண்ணன் என்பவர் மூலமாக தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் அதன் சிஇஓ இளங்கோவன் வழங்கி துவக்கி வைத்தார்.

    இதில் மேலணிக்குழி ஜி. ராஜேந்திரன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் மோகன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 3 பெண்கள் உட்பட 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமி ஒருவரை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்ற வழக்கில் 12 பேரை போலீசாரால் கைது செய்தனர்.  

    இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக குற்றம்  சாட்டப்பட்ட குற்றவாளிகளான சாந்தா, சந்திரா, இந்திரா, பிரேம், வெற்றி கண்ணன், தெய்வீகன், மனோஜ், குமார் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.  

    அதன்பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

    ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இவ்வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு இதுவரை 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சுண்ணாம்புக்கல் சுரங்கம் விரிவாக்கப் பணிக்கு கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் கிராமத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெடுக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் கல்லங்குறிச்சி, அமீனபாத், கயர்லாபாத் ஆகிய கிராமங்களில் உள்ளது.  இதனை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் கயர்லாபத் கிராமத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட் கழகம், சமுதாயக் கூட்டத்தில் நாளை(5-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இக் கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை கூறலாம். அவை பதிவு செய்யப்பட்டு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம், புதுதில்லி, அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

    இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.    

    பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 370 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் குறளோவியப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவி அபிராமிக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றார்.
    அரியலூர்:
     

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சாத்தமங்கலம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் குமரவேல் (வயது45). விவசாயியான இவர், சாத்தமங்கலம் கோத்தாரி சக்கரை ஆலை அருகே 8 ஏக்கர் குத்தகை நிலத்தில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளார்.

    இந்நிலையில், சர்க்கரை ஆலையில் இருந்து வெளியே வரும் கழிவுகளால் பருத்தி பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மார்ச் 25 -ந் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், தொடர்ந்து வேளாண் இணை அலுவலகத்திலும் பல முறை புகார் தெரிவித்தார்.

    ஆயினும், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் இருந்து குமரவேல், நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

     இதை கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், குமரவேல் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை மீட்டு அரியலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குமரவேல் மனைவி கண்ணகி கலெக்டரிடம் மனு அளித்தார்.

    மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கினால் சாதாரணமானவர்களும் சாதனை மனிதர்களான மாற முடியும் என்று கல்லூரி முதல்வர் கூறினார்.
    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பொதுத் தேர்வு எழுத உள்ள 10 ஆம்வகுப்பு மாணவர்களுக்காக நடை பெற்ற துணிவுடன் பொதுத் தேர்வை எதிர்கொள்வோம் எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி கலந்து கொண்டு பேசியது :  

    தன்னம்பிக்கை, திட்டமிட்ட உழைப்பு, விடா முயற்சி, நேர நிர்வாகம் ஆகியவற்றை உணர்ந்து நமது செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் லட்சியம் என்பது அவசி–யமானது.

    லட்சியமில்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகை போன்றது, காற்றில் நகர்ந்து செல்லுமே தவிர, கரையை சென்றடையாது.

    தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கினால், சாதாரணமானவர்களும் சாதனை மனிதர்களாக முடியும். மூச்சு விடுபவனெல்லாம் மனிதனில்லை, முயற்சி செய்பவர்களே நல்ல மனிதன்.  

    ஆகவே தேர்வைக் கண்டு எவ்வித பயமும் பதற்றமும் இல்லாமல் வினாத்தாளில் எளிதில் தெரிந்த வினாக்களுக்கு முதலிலும், மற்ற வினாக்களை அடுத்ததாகவும், வினா எண்களை தெளிவாக எழுத வேண்டும்.  

    தேர்வு நேரங்களில் சரிவிகித உணவும், எளிதில் ஜீரணிக்கும் உணவு, காய்கறி, பழங்களை அதிகம் உண்ண வேண்டும். அசைவ மற்றும் துரித உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்இ

    ளமையில் வியர்வை சிந்த தயங்கினால், முதுமையில் கண்ணீர் சிந்தும்சூழல் வரும். இதனால்,பள்ளி பருவத்திலேயே தங்களின் சிந்தனைகளை சீர்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

    ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியில் விளையாட்டு விழா நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டுபோட்டி விழா நடைபெற்றது.  

    முன்னதாக இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் இராசமூர்த்தி வரவேற்று பேசினார். விழாவில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்,  

    ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைதலைவர் வெ.கொ.கருணாநிதி, 13-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மீனாட்சி சங்கர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் நன்றி கூறினார்.

    ×