என் மலர்
உள்ளூர் செய்திகள்

தகுதியான அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் - கிராம மக்கள் மத்தியில் கலெக்டர் உறுதி
- இ-சேவை மையங்களுக்கு சென்று எந்த காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- காரணங்கள் சரியானதாக இல்லாமல் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம்.
கோவை,
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி கூறுகையில் தகுதியான அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று பொள்ளாச்சி வடக்கு ஆச்சிப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் மத்தியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதற்கட்டமாக தகுதியான மகளிருக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. விண்ணப்பித்த ஒருசிலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இ-சேைவ மையங்களில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.
இ-சேவை மையங்களுக்கு சென்று எந்த காரணங்களால் உங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை அந்த காரணங்கள் சரியானதாக இல்லாமல் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். தகுதியான மகளிர் யாரும் எங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். தகுதியான அனைவருக்கும் இத்தொகை கிடைக்க அரசின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.






