search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7 மாதத்திற்கு பிறகு லிங்காபுரம்-காந்தவயல் இடையே சாலை போக்குவரத்து தொடக்கம்
    X

    7 மாதத்திற்கு பிறகு லிங்காபுரம்-காந்தவயல் இடையே சாலை போக்குவரத்து தொடக்கம்

    • 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
    • உயர்மட்ட பாலம் பயன்பாட்டுக்கு வந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள கேரளா, நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவில் பருவ மழை பெய்தது.

    இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, கூடலூர் மாயாறு பகுதிளில் இருந்தும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு தண்ணீா் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

    இதையொட்டி பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளான சிறுமுகை 1-வது வார்டுக்குட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில் இருந்து பழங்குடியின கிராமங்களான காந்தவயல், உலியூர், ஆலூர், காந்தையூர் உள்ளிட்ட கிராமளுக்கு செல்லும் உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியது. இதனிடையே கடந்த ஆகஸ்டு மாதம் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் செல்லும் சாலையின் உயர்மட்ட பாலம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால் சாலை போக்குவரத்து முடங்கியது.

    இதனால் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசல், மோட்டார் படகு போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதையொட்டி காந்தவயல்-லிங்காபுரம் இடையே தண்ணீரில் மூழ்கிய உயர்மட்ட பாலம் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

    இதனிடையே நேற்று முதல் பொதுமக்கள் இந்த உயர்மட்ட பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே ஒருசில வாரங்களில் லிங்காபுரம்-காந்தவயல் இடையே உயர்மட்டம் பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து தண்ணீரில் மூழ்காதவாறு பால பணிகள் மேற்கொள்ளப்படும் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×