search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல்காந்தி மீதான நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி மேலும் எழுச்சி பெறும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அறிக்கை
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    ராகுல்காந்தி மீதான நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி மேலும் எழுச்சி பெறும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அறிக்கை

    • ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    • மக்களுக்கான திட்டங்கள் எதையும் மோடி அரசு செயல்படுத்தவில்லை.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் எங்கள் தலைவர் ராகுல்காந்தியை நேருக்குநேராக எதிர்கொள்ள முடியாத பாரதீய ஜனதா அரசு, பழிவாங்கும் போக்கோடு அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து இருக்கிறது.

    சமீபத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை, மத்திய பாரதீய ஜனதா அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை கட்டுப்படுத்த நினைத்து, இப்படியொரு ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு நிகழ்த்தி இருக்கிறது.

    கடந்த 8 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் இந்த மோடி அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசாங்கத்தின் முக்கியத் துறைகளான நீதித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முன்பு இங்கே பிரிட்டிஷார் நடத்திய ஆட்சியைப் போல, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மோடி அரசின் இந்த செயல்களால் மக்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவுக்கு எதிராக எல்லோரும் திரும்பிக்கொண்டி ருக்கிறார்கள்.

    இதையெல்லாம் திசைத்திருப்பவே ராகுல்காந்தி மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது மோடி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், காங்கிரஸ் கட்சி இன்னும் இன்னும் எழுச்சி பெறும்.

    வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது. பா.ஜனதா கட்சியின் வீழ்ச்சி இப்போது தொடங்கிவிட்டது.

    இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தவறாகப் பயன்படுத்தி ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்து இருக்கிறார்கள். இது பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்துக்கு மோடி அரசு விட்டுள்ள சவால்.

    இந்தியாவில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையில் பா.ஜனதா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது, நம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.

    இதற்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடியை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசுக்கு தருவார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    Next Story
    ×