என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற பெண் பலி
- தூத்துக்குடி 2-ம் கேட் ஆண்டாள் தெரு பகுதி வழியாக செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பாக்கியலட்சுமி படுகாயம் அடைந்தார்.
- தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார்.
மோட்டார் சைக்கிள் மோதி பலி
இந்நிலையில் பாக்கியலட்சுமி வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி 2-ம் கேட் ஆண்டாள் தெரு பகுதி வழியாக செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ரத்தின பாண்டி மற்றும் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு
மேலும் விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி யாதவர் 2-வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆரி முகமதுகான் மீது வழக்குப்பதிவு செய்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாவட்ட காவல்துறையின் அறிவிப்புகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சைலன்ஸர்களை அகற்றிவிட்டு அதி வேகமாக வாகனங்களை ஓட்டி சத்தத்தை எழுப்பி வருகின்றனர். இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் அதிகமான விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் வலது புறமாக நேர் எதிர் எதிரே வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது. இது போன்ற வாகன ஓட்டிகள் மீதும், சாலைகளில் அறிவிப்புகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






