என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் போலீஸ்காரர் மீது மோதிய வாலிபரும் பலி
- மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
- 2 பேரும் கோவையில் வசிக்கும் நண்பரை பார்க்க வந்து விபத்தில் சிக்கினர்.
கோவை,
கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி.சி.ஐ.டி ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து (வயது 47).
இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து 11.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.
அவர் ஒப்பணக்கார வீதி பிரகாசம் சிக்னல் அருகே சென்ற போது எதிரே வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து பலத்த காயம் அடைந்து பலியானார். மொபட்டில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த இப்ராகீம் தாகீம் (24) என்பதும், மற்றொருவர் வடக்கு சூடான் நாட்டைச் சேர்ந்த பஷீர் சுகைப் (22) என்பதும் தெரியவந்தது.
காயம் அடைந்த இவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இப்ராகீம் தாகீம் நேற்று பலியானார். பஷீர்சுகைப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் 2 பேரும் கோவையில் வசிக்கும் நண்பர்களை பார்க்க வந்து விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.






